June

மகிமையுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,14 முதல் 22 வரை)

“ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது” (வசனம் 15).

சாலொமோன் அரியணைக்கு வந்த புதிதில், கர்த்தர் அவனுக்குத் தரிசனமானபோது, அவன் அவரிடத்தில் ஞானத்தைக் கேட்டான். அப்பொழுது அவர், “இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை” (1 ராஜாக்கள் 3,13) என்று வாக்களித்தார். அந்த வாக்குறுதி எழுத்தளவில் அப்படியே நிறைவேறியது. சாலொமோன் ஏராளமான பொன்னையும், வெள்ளியையும் சம்பாதித்தான். அவன் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகவே எண்ணப்படாத அளவுக்கு தங்கங்கள் குவிந்து கிடந்தன. புதிய ஏற்பாட்டில் நமதாண்டவர் உலகீய செல்வத்தால் நான் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. மாறாக “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசியர் 1,3).

சாலொமோன் இந்தத் தங்கங்களை வைத்து என்ன செய்தான்? அரண்மனையை தங்கத்தால் அழகுபடுத்தினான். உணவு உண்ணும் பாத்திரங்களை தங்கத்தால் செய்தான். வேறு எந்த அரசருக்கும் இல்லாத வகையில் மாபெரும் சிங்காசனத்தை தந்தங்களால் செய்து அதை பொன்னால் மூடி, அழகுக்காக சிங்க உருவங்களைச் செய்து மிகவும் கெம்பீரமான வகையில் அதில் அமர்ந்தான். அவனுடைய அரண்மனையைக் காண்போர் பிரமிப்பு அடைந்தனர். நீ கேளாத கனத்தையும் கொடுத்தேன் என்ற வாக்குறுதி இதன் வாயிலாக நிறைவேறியது. “மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்” (மத்தேயு 19,28) என்று சீடர்களிடம் ஆண்டவர் கூறினார். தாவீது பாடுபடுகிற ஒரு ராஜாவாக இருந்தான், அவனுடைய குமாரன் சாலொமோன் மகிமை நிறைந்தவனாக வாழ்ந்தான். தாவீதின் குமாரனாகிய நமதாண்டவர் தமது முதல் வருகையில் சிலுவையில் பாடுபட்டார். இனிவரும்போது அவர் ஒரு ராஜாவாக மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருந்து முழு உலகத்தையும் ஆட்சி செய்வார்.

விசுவாசிகளாகிய நாம் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் செல்வங்களை பூமியில் அல்ல, பரலோகத்தில் சேமித்து வைக்கும்படிக்கு இயேசு நாதர் அழைப்பு விடுக்கிறார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத்தேயு 6,19 முதல் 20). மேலும் அவர் சொன்னார்: “உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 6,28 முதல் 29). பரம பிதாவே, நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எங்களது அனைத்துத் தேவைகளுக்காகவும் உம்மையே சார்ந்துகொள்ள உதவி செய்யும், ஆமென்.