2024 ஜூன் 16 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:3-5)
“கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” (வச. 3).
சாலொமோன் பரலோகத்தின் தேவனை நோக்கி ஒரு நீண்ட ஜெபத்தை ஏறெடுத்தான். இதனாலேயே அது சிறந்த ஜெபமாக மாறிவிடுவதில்லை. மாறாக, “நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” என்று கர்த்தர் பதில் அளித்ததினாலேயே அது சிறந்த ஜெபமாகக் கருதப்படுகிறது. நீண்ட ஜெபமோ அல்லது சுருக்கமான ஜெபமோ கர்த்தர் அதற்குப் பதில் அளிக்கவில்லையென்றால் அவை வானத்தை எட்டாத ஒரு வெற்றுப் பிரசங்கமாகவே அமைந்திருக்கும். இவ்வளவு பெரிய நீளமான ஜெபத்தை ஏறெடுத்த சாலொமோனே, “தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக” (பிர. 5:2) என்று கூறியிருக்கிறார். அதாவது நாம் துணிகரமாகவோ அல்லது இன்னதென்று ஜெபிக்கிறோம் என்றும் மனது குழம்பியோ வார்த்தைகளைப் பேசாமல் கருத்துடன் ஜெபிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுவே நாமும் செய்யத்தக்க முன்மாதிரி.
ஒரு ஜெபத்தின் உண்மையான அளவுகோல் என்பது, அது பரலோகத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் பதிலைப் பொருத்தே அடங்கியிருக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. உன்னுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது என்று கர்த்தர் பதில் அளித்ததுபோல நமக்கும் நம்முடைய ஆண்டவர் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14,13) என்று நம்முடைய ஆண்டவர் கூறியிருக்கிறார். ஆயினும் சில நேரங்களில் நம்முடைய விண்ணப்பங்களுக்கு இல்லை என்றும், பொருத்திரு என்றும் பதில் கொடுக்கப்படலாம். இதையும் விசுவாசிகளாகிய நாம் அங்கீகரித்துக்கொள்ளவே வேண்டும்.
“நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்” (வசனம் 3). ஆலயத்தின் கட்டடம் கட்டுவது சாலொமோனின் வேலை. அதைக் கர்த்தருடைய தூண்டுதலாலும் வல்லமையாலும் செய்து முடித்தான். ஆனால் அதைப் பரிசுத்தமாக்குவது கர்த்தருடைய வேலை. ஆம், மனிதனால் ஒரு கட்டடத்தைத்தான் கட்ட முடியும். ஆயினும், அதைப் புனிதப்படுத்துவது அவருடைய வேலை. இந்தக் கிருபையின் காலத்தில் கர்த்தர் எந்தவொரு பொருளையும் பிரதிஷ்டை செய்யும்படியாகவோ, அர்ப்பணிக்கும்படியாகவோ கூறவில்லை. மாறாக நம்முடைய சரீரங்களை ஜீவபலியாகப் படைக்கும்படி கர்த்தர் கூறியிருக்கிறார் (ரோமர் 12:1,2). மனிதன் ஒரு முயற்சியை எடுக்கிறான். கர்த்தர் அதைப் பரிசுத்தப்படுத்துகிறார். மனிதப் பங்களிப்பும், கடவுளுடைய பங்களிப்பும் இணைந்து செயல்படும்போது, அது நம்முடைய வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. மனிதன் வெளிப்புறத்தை உண்டாக்குகிறான். கர்த்தரோ உள்ளான நிலையில் செயல்படுகிறார். அதாவது நம்மால் தொடமுடியாத உள்ளான அம்சங்களில் கர்த்தருடைய பார்வை படும்படியாக நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும். இதுவே நம்முடைய பக்தி வாழ்க்கைக்கு வழிவகுக்கும். பிதாவே, நாங்கள் எப்பொழுதும் உம்முடைய சித்தத்தின்படியான ஜெபத்தை ஏறெடுக்கவும், அதனிமித்தம் நீர் தருகிற பதில் மூலமாக நாங்கள் சந்தோஷம் அடையவும் உதவி செய்யும், ஆமென்.