June

உண்மையுள்ள தேவன்

2024 ஜூன் 13 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:55-61)

“அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” (வச. 55).

விசுவாசிகளின் உரையாடல்களில் எப்பொழுதும் இடம்பெறக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்குமாயின் அது கர்த்தருடைய உண்மைத் தன்மையைக் குறித்ததாகும். அவர் இஸ்ரவேல் மக்களுக்காக என்னவெல்லாம் செய்வேன் என்று மோசேயிடம் சொல்லியிருந்தாரோ அது முற்றிலும் நிறைவேறிற்று. அதை சாலொமோன் நினைவுகூர்ந்து மக்களிடம் தெரிவித்தான் (வச. 56). மோசேயின் சீடன் யோசுவாவும் தன்னுடைய அந்திய காலத்தில் கர்த்தரைக் குறித்து, “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை” (யோசுவா 24:14) என்னும் அறிக்கையைச் சமர்ப்பித்து, அவரைப் புகழ்ந்தான்.

விசுவாசிகளாகிய நாமும் எத்தகைய சூழ்நிலைகளின் வாயிலாகச் சென்றாலும், கர்த்தரைக் குறித்து இதுபோன்று சொல்ல முடியும். நாம் மனம் மாறலாம், அவரோ ஒருபோதும் மாறமாட்டார். “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்” (ஏசாயா 54:10) என்று அவருடைய இரக்க குணத்தைக் குறித்து வாசிக்கிறோம். ஒருவேளை நாம் ஜெபத்தின் வாயிலாகக் கர்த்தரிடத்தில் என்ன கேட்டோம் என்பதை நாம் மறந்து விடலாம், ஆனால் அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். அவரது சர்வஞானத்தின்படி ஏற்ற வேளையில் நமக்குப் பதிலளிப்பார்.

நம்முடைய ஜெபமும், அதைக் கேட்டு அவர் செய்கிற நன்மையும் இந்த உலகத்தில் அவருடைய நாமம் மகிமைப்படுவதற்கு ஏதுவான காரணிகளாக இருக்கின்றன. “கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதைப் பூமியின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக” (வசனம் 59), அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் அவர் நம்மை விசாரிக்கிறார் (வசனம் 60). நாம் கேட்டதையெல்லாம் ஒரே நேரத்தில் கொடுத்தால், அவரை நம்புவதை விட்டுவிடுவோம் என்பதால் அந்தந்த நாளுக்குரிய காரியத்துக்குத் தக்கதாய் நமக்குப் பதிலளிக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஜெபம் செய்தால் நம்முடைய காரியங்கள் நிறைவேறுகின்றன என்று கிறிஸ்தவரல்லாத மக்களும் நம்புகிறதற்கு வாக்குறுதியில் உண்மையுள்ள அவருடைய நற்குணமே காரணமாகும். ஆகவே விசுவாசிகளின் உண்மையுள்ள மன்றாட்டுகள் அவரே மெய்யான கடவுள் என்பதை இந்த உலகத்தாருக்கு நிரூபிக்கின்றன. கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் நம்மோடு நின்றுவிடாமல், நம்மூலமாக இந்த உலகத்தாருக்கும் பாய்ந்தோட வேண்டும்.

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் இருந்ததுபோல நம்மோடும் தொடர்ந்து இருப்பதற்கு, “உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது” (வசனம் 61) என்று சாலொமோன் அறிவுறுத்தினான். “அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்” (எரேமியா 18:10) என்றும் அவர் சொல்லியிருக்கிறார். நாம் தேவனிடத்தில் சேரும்பொழுது அவரும் நம்மிடத்தில் சேருவார் என்று யாக்கோபும் சொல்லியிருக்கிறார் (காண்க: யாக். 4:8). பிதாவே, நீர் எங்கள்மேல் வாஞ்சையுள்ளவராகவும் உண்மையுள்ளவராகவும் இருக்கிறபடியால், நாங்களும் எப்பொழுதும் உம்மையே சார்ந்துகொள்ள உதவி செய்யும், ஆமென்.