2024 ஜூன் 11 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:44-53)
“பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே” (வச. 46).
இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும் போது, அவர்கள் இந்த ஆலயத்தை நோக்கி ஜெபித்தால் அவர்களுக்கு வெற்றி தரும்படி சாலொமோன் விண்ணப்பம் பண்ணினான். இங்கே நாம் கவனிக்க வேண்டிய காரியம் “நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியில்” (வசனம் 44) என்ற சொற்றொடர் ஆகும். எல்லா இடங்களிலும் எல்லாப் போர்களிலும் அல்ல, கர்த்தர் எங்கே அனுப்புகிறாரோ அங்கே வெற்றியைத் தரும்படி ஜெபம் செய்தான். சாலொமோனின் இந்த வார்த்தைகள், “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” (1 யோவான் 5:14) என்னும் யோவான் அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கு நேராக நம்முடைய கவனத்தைத் திருப்புகிறது. ஆகவே கர்த்தருடைய சித்தத்தின்படி நாம் பயணிப்போமாகில், நமக்கு ஏற்படுகிற போராட்டத்தில், துன்பத்தில் அவர் துணையாயிருந்து, வெற்றியைத் தேடித் தருவார்.
“பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே” (வசனம். 46) என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் ரோமர் நிருபத்தில் மனிதனின் பாவத்தன்மையைப் விவரிக்கும் வார்த்தைகளுக்கு நிகரானது எனலாம். “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” (ரோமர் 3:23) என்று நாம் வாசிக்கிறோம். மக்களுக்காக பரிந்து பேசுகிற சாலொமோன் இங்கே மக்களின் இருதயத்தையும், அவர்களுடைய பலவீனத்தையும் அறிந்தவனாயிருந்தான். இவனுடைய ஜெபத்தின் வார்த்தைகள் மிகவும் யதார்த்தமானவை. “அவர்கள் உணர்வடைந்து, மனந்திரும்பி, வேண்டுதல் செய்து, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, விண்ணப்பம்பண்ணும்போது, தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, மன்னித்து, அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக” என்றான். பரிந்து பேசுவதற்கு மனிதப் பலவீனத்தை அறிந்திருப்பது மட்டும் போதாது, கர்த்தருடைய இரக்கத்தில் நம்பிக்கை வைப்பதும் அவசியம்.
“தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, மன்னித்து” என்பது நாம் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும், அவருடைய சமூகத்திற்குச் செல்ல முடியும் என்பதைக் கற்பிக்கிறது. மிக மோசமான பாவிகளுக்கும் கர்த்தருடைய பாதத்தில் இடம் இருந்தது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம் (லூக்கா 7:37). அவரை நம்பி, அவரிடம் வருகிறவர்களை அவர் ஒருபோதும் தள்ளிவிடுகிறதில்லை (யோவான் 6:37). பாவம் ஒரு விசுவாசியை “எதிரியின் தேசத்தில்” சிறைபிடிக்கப்படக்கூடிய சங்கிலியாகும் (வச. 46). இஸ்ரவேலை எகிப்திலிருந்து விடுவித்த கர்த்தர் நம்மையும் அதிலிருந்து விடுவிக்க எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார். இருப்பினும், மன்னிப்புக்கான பாதை எப்பொழுதும் பாவஅறிக்கை என்னும் பாலத்தைக் கடந்தே செல்கிறது. “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங்கீதம் 32:5) என்ற தாவீதின் வார்த்தைள் மிகவும் உண்மையானவைகள். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). பிதாவே, எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்து, இரக்கம் காண்பித்தருளுவீராக, ஆமென்.