2024 ஜூன் 10 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:41-43)
“அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்” (வச. 42).
நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக் கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக (வசனம் 43) என்று சாலொமோன் ஜெபம் செய்தான். அதாவது இஸ்ரவேல் அல்லாத புறஇன மனிதர்களுக்காகவும் இவன் ஜெபித்தான். ஆண்டவரும் தமது பிரதான ஆசாரிய ஜெபத்தில், இதுபோன்றதொரு ஜெபத்தை ஏறெடுத்தார். அது கிறிஸ்துவின் சீடர்களாக இந்த உலகத்தில் நடந்துகொள்ள வேண்டிய காரியத்தைச் சுட்டிக் காட்டுக்கிறது. “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:20). மேலும் கிறிஸ்துவை விசுவாசியாத மக்களும் அவரை நம்பும்படியாக ஒரு திருச்சபை விளங்க வேண்டும்.
தேவன் இஸ்ரவேல் மக்களை தமக்குரிய சொந்த சம்பத்தாக தெரிந்துகொண்டார். இவர்கள் மூலமாக முழு உலகமும் தேவனை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அவருடைய ஏற்பாடு. அவர் ஆபிரகாமை அழைத்தபோதே, உன் மூலமாக பூமியிலுள்ள அனைத்து மக்களும் என்னை அறிந்துகொள்வார்கள் என்னும் வாக்குறுதியுடனேயே அழைத்தார். நாளடைவில் இஸ்ரவேல் தனது சாட்சியை இழந்து, அழைக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்தது. இன்றைக்கு முழு உலகத்துக்கும் நற்செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் நோக்கத்திற்காக திருச்சபையை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இஸ்ரவேல் மக்களைப் போல ஒரு சிலருக்கு மட்டும் ஆசாரிய ஊழியத்தைக் கொடாமல், விசுவாச மக்கள் அனைவரும் ஆசாரியர்களாயிருக்கும்படி தெரிந்து கொண்டிருக்கிறார். ஆகவே நாம் ஒவ்வொருவரும், “உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே” (வசனம் 43) என்று சாலொமோன் ஜெபித்தவண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.
திருச்சபையின் தொடக்க நாளில், சீஷர்கள் பலவித பாசைகளைப் பேசினார்கள். உலகத்தின் பல பாகங்களிலும் வந்திருந்து, அதைக் கேட்ட மக்கள், “இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்” (அப். 2:11). அன்றை தினம் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். ஆனால் சிறிது நாட்களிலே அந்த வரம் தவறாகப் பயன்படலாயிற்று. அதைக் குறித்துப் பவுல் கொரிந்து சபைக்குச் சொல்லும்போது, “அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது” (1 கொரி. 14:22) என்று கூறினார். அதாவது அவிசுவாசிகள் கர்த்தருடைய வல்லமையை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்கள் தங்களுடைய சொந்தப் புகழ்ச்சிக்காகவும் பெருமைக்காகவும் தவறாகப் பயன்படுத்தினார்கள். வரம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறை வேறாமல் போய்விட்டது. எனவேதான் “சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா” (1 கொரி. 14:23) என்று கடிந்துகொண்டார். பல சபைகளில் இன்றைக்கும் இதுவே நிலையாக இருக்கிறது. ஆகவே ஒரு சபையாக நாம் கர்த்தரை அறியாதவர்கள் அவரை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக நடந்துகொள்வோம். பிதாவே, நாங்கள் வரங்களை சரியாக பயன்படுத்த எங்களுக்கு உதவி செய்யும், ஆமென்.