December

உண்மைக்கு உறுதியாயிருப்போம்

2024 டிசம்பர் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,20 முதல் 23 வரை)

  • December 19
❚❚

 “அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது” (வசனம் 21).

போரில் ஆகாப் வெற்றி பெறுவான் என்று உரைத்த நானூறு தீர்க்கதரிசிகளுக்குப் பின்னால் இருப்பது யார் என்பதை கர்த்தர் வெளிப்படுத்த விரும்பினார். இந்த நானூறு தீர்க்கதரிசிகளுக்கு எதிராக தன்னந்தனி யொருவனாக மிகாயா நின்றுகொண்டிருந்தான். எனவே அதை மிகாயாவின் வாயிலாக அவர்களுக்கு உணர்த்திக் காட்டினார். சத்தியத்தின் பக்கம் நாம் நிற்பதற்கு நாம் ஒருபோதும் அஞ்ச வேண்டாம், எதிராளி எத்தனை பேர்களாயிருந்தாலும் கர்த்தர் நமது பட்சத்தில் இருக்கிறார்.

எனவே “கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்”.   “அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. கர்த்தர் ஆகாபைத் தண்டிக்க முடிவெடுத்தார். போருக்கு அவன் செல்வேன் என்று முடிவெடுத்து விட்டான். அதையே கர்த்தர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார். இரும்பை இரும்பு கருக்கிடும் என்பதுபோல கர்த்தர் தீமையை தீமையாலே வெல்ல முடிவெடுத்தார்.

எந்த தீய சக்திகளால் நானூறு பேரும் தீர்க்கதரிசினம் உரைத்தார்களோ அந்த சக்திகளே அவர் அவனுடைய முடிவுக்குப் பயன்படுத்தினார். நாம் கர்த்தருக்கு முன்பாக நமது மனதைக் கடினப் படுத்தாதபடி எச்சரிக்கையுள்ளவர்களாக இருப்போம். பார்வோன் தன் மனதைக் கடினப்படுத்தினான், அதுவே அவனுடைய முடிவுக்குக் காரணமாகவும் அமைந்தது. ஆகாப் கர்த்தருடைய வார்த்தையை மதிப்பதில் போருக்குச் செல்வதில் உறுதியாயிருந்தான், இந்த உறுதியிலேயே நிலைத்திருக்கும்படி கர்த்தர் பொய்யின் ஆவிக்கு அனுமதியளித்தார்.

“ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்றது” என்று வாசிக்கிறோம். கர்த்தருடைய பிரசன்னத்தின் நடுவில் விழுந்துபோன தூதர்களின் ஆவிகள் பிரவேசிக்க முடியும் என்பதை இங்கே காண்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் இதைக் குறித்து பொதுவாக பெரிது படுத்துவதில்லை. அவன் நம்மைக் குற்றம் சாட்டுவதற்காக தேவ சமூகம் வரைக்கும் செல்கிறான். “ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்று”, யோபுவின்மீது குற்றங்சாட்டினான் (யோபு 1,6). பிரதான ஆசாரியனாகிய யோசுவா கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றபோது, சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்” (சகரியா 3,1) என்று வாசிக்கிறோம். ஒரு நாள் தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போவான் (வெளி 12,10). அதுவரைக்கும் அவன் கர்த்தருடைய சமூகத்திற்குச் செல்லும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

“பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (1 யோவான் 4,1) என்று கிறிஸ்தவ வாழ்க்கையிலும் ஊழியங்களிலும் பல்லாண்டுகள் அனுபவமும் முதிர்ச்சியும் நிறைந்த யோவான் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே கர்த்தருடைய ஊழியர்கள் என்ற போர்வையில் வலம் வருகிறவர்களின் எல்லா வார்த்தைகளையும் எவ்விதப் பரிசோதனையும் இன்றி நம்பாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்போம். மிகாயாவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும். எந்த வார்த்தை கர்த்தருடைய நாமத்தினிமித்தம் வருகிற பாடுகளை தவிர்க்கச் சொல்கிறதோ, எந்த வார்த்தை விசாலமான பாதையில் நம்மை நடத்த முயற்சிக்கிறதோ, எந்த வார்த்தை பெருங்கூட்டத்தோடு அனுசரித்துப்போகச் சொல்கிறதோ அந்த வார்த்கைகள் கர்த்தரிடத்திலிருந்து வெளிப்படவில்லை. மிகாயாவைப் போல நாமும் உண்மைக்கு உறுதியாயிருப்போம்.