December

கிருபையின் ஐசுவரியம்

2024 டிசம்பர் 11 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,27 முதல் 29 வரை

  • December 11
❚❚

 “ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான் ” (வசனம் 27).

ஆகாப் எலியாவைக் கண்டபோது முதலாவது அதிருப்தி அடைந்தான். ஆனால் கர்த்தருடைய பயங்கரமான தண்டனையைக் கேட்டபோது மிகவும் பாதிக்கப்பட்டான். உடனே, தான் அணிந்திருந்த ராஜாவுக்குரிய ஆடைகளைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் துக்க நாட்களில் அணியும் இரட்டைப் போர்த்துக்கொண்டு (சாக்கு போன்ற கடினமான ஆடை), உபவாசம்பண்ணி, கட்டில் மெத்தைகளைத் தவிர்த்து, கடினமான போர்வையில் படுத்து உறங்கி தாழ்மையாய் நடந்துகொண்டான். இச்சமயத்தில் அவன் தனது பாவங்களை நியாயப்படுத்தவோ எலியாவுடன் எதிர்வாதம் செய்யவோ முயலவில்லை. கர்த்தருடைய வார்த்தையானது எத்தகைய கொடுமையான பாவியையும் நடுங்கச் செய்ய முடியும் என்பதற்கு ஆகாபின் இந்தச் செயல் எடுத்துக்காட்டாயிருக்கிறது.

ஆகாபின் செயலைக் கர்த்தர் கண்டார். அவர் எலியாவிடம், “ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா?” எனக் கேட்டார். எந்தவொரு பாவிக்கும் மன்னிப்பு தூரமானதன்று. மனிதர் தடவியாகிலும் கண்டுபிடிக்குமளவுக்கு அவர் மிக அருகாமையிலேயே இருக்கிறார். மேலும் ஒரு பாவி எப்பொழுது மனந்திரும்பினாலும் அவனை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமுள்ளவராகவும் இருக்கிறார். பதினோராம் மணி நேரத்தில் வந்தாலும் அவர்களையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு பெரிய பாவியையும் அவனது பாவங்களையும் மன்னிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது. தன் வாழ்வின் இறுதித் தறுவாயில் ஜெபித்த சிம்சோன், இறுதி நேரத்தில் பரதீசியின் பாக்கியத்தைப் பெற்ற கள்ளன் ஆகியோர் அவரது இரக்கத்தின் மன்னிப்பைப் பெற்று, நித்திய வாழ்வை அடைந்தோருக்கு அடையாளமாகத் திகழ்கிறார்கள்.

“நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்” (யோவேல் 2,13) என்று கர்த்தர் கூறுகிறார். இவ்வசனத்தின்படி, ஆகாபின் மனந்திரும்புதல் உள்ளார்ந்த நிலையில் நீடித்து இருந்ததா என்று நமக்குத் தெரியாது. அவனது இறுதிக்கால நடவடிக்கைகள் அவனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தவில்லை. அவன் பாவத்திற்குக் காரணமான தன் மனைவி யேசபேலைக் கண்டித்ததாகவோ அல்லது தண்டித்ததாகவோ அல்லது தேசத்தில் பாகால் வழிபாட்டை வெறுத்து, மெய்யான தேவ வழிபாட்டை மீட்டெடுத்ததாகவோ நாம் காண்கிறதில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு இத்தகையதொரு மனந்திரும்புதல் அவசியமானதாயிருக்கிறது. இத்தகைய மனந்திரும்புதல் இல்லாததினாலேயே இன்றைய நாட்களில் சபைகளில் மாம்சப்பிரகாரமான விசுவாசிகள் அதிகமாய்ப் பெருகியிருக்கிறார்கள்.

ஆகாப் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியதால், அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்று அவர் இரக்கம் பாராட்டினார். ஆகாபுக்கு வரவேண்டிய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படும் கிருபையும் இரக்கமும் இதுவே ஆகும். தேவன் ஒருவரையும் தகுதி பார்த்து மன்னிப்பதில்லை. ஆகவே நாமும் எப்போதும் அவருடைய கிருபையைப் பற்றிக்கொள்வோம்.