2024 டிசம்பர் 9 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,22 முதல் 24 வரை
- December 9
“உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்” (வசனம் 22).
எலியா ஆகாபை நோக்கி, “யெரொபெயாமின் குடும்பத்துக்கும், பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன்” என்று கர்த்தரால் உரைத்தான். இவ்விருவரும் இஸ்ரவேலை ஆண்ட மன்னர்கள். இவ்விருவரும் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். இவ்விருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டார்கள். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு இவர்கள்மீது உண்டாயிற்று. இவ்விருவரும் சந்ததிகள் எவரும் இல்லாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள் (வாசிக்க 1 ராஜாக்கள் 15,29 முதல் 30, 16,11). இவர்கள் பாவம் செய்தார்கள் இவர்களுக்கு அழிவு எற்பட்டது, அவ்வாறே உனக்கும் அழிவு ஏற்படும் என்று எலியா அறிவித்தான். கர்த்தரிடத்தில் எவ்விதப் பாரபட்சமும் இல்லை. மேலும் இவர்களிடத்தில் பாவத்தைக் குறித்து கணக்குக் கேட்டதுபோல, ஆகாபிடமும் கேட்கப்படும் என்று எலியா அறிவித்தான். நாம் நன்மை செய்தாலும், தீமை செய்தாலும் அதற்கேற்ற பிரதிபலனை கர்த்தரால் நாமும் பெற்றுக்கொள்வோம் என்று உணர்ந்து காரியங்களைச் செய்வோமாக!
சில காலங்களுக்கு முன்னர்தான் பொல்லாத ராஜாக்களாக இருந்த யெரொபெயாம் குடும்பத்துக்கும், பாஷாவின் குடும்பத்தாரும் அழிக்கப்பட்டார்கள். ஓர் அரசன் என்ற முறையில் முந்தின ராஜாக்களாகிய இவ்விருவருடைய வரலாறை ஆகாப் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் ஆகாப் இவர்களிடமிருந்து எவ்விதப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது துக்கமானது. கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தால் தண்டனை உண்டு என்ற பாடத்தை ஆகாப் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டான். பழைய ஏற்பாட்டு சம்பவங்களைக் குறித்து, புதிய ஏற்பாட்டு எழுத்தாளராகிய பவுல், “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது” (1 கொரிந்தியர் 10,11) என்று சுட்டிக்காட்டுகிறார். ஆகவே நமக்கு முன்னர் நடைபெற்ற காரியங்களை மனதில் கொள்ளத் தவற வேண்டாம்.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் தீர்க்கதரிசனங்கள் ஆகாபுக்கு எதிராகக் குவிக்கப்பட்டிருந்தாலும், அது அவனுடைய பொல்லாத மனைவி யேசபேலையும் விட்டுவைக்கவில்லை. அவள் செய்த தீமையான காரியங்களுக்காகக் கர்த்தரால் மறக்கப்படவில்லை. அவள் அநீதியாக நடந்து கொண்டாள், இப்பொழுது அநீதத்தின் கூலியைப் பெறுவாள் என்று முன்னறிவிக்கப்பட்டது. அவளது முடிவைப் பற்றிய அறிவிப்பு மிகவும் பயங்கரமானதும் அவமானதுமானதும் ஆகும். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்கள், அதிகாரத்தை வைத்து பிறரைப் பழிவாங்குகிறவர்கள், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்கள் யாவரும் ஒருநாளில் கர்த்தரிடத்திலிருந்து அழிவின் தீர்ப்பைப் பெற்றுக்கொள்வார்கள்.
இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற அதிகாரங்கள் அனைத்தும் கர்த்தரால் மனிதருக்கு அருளப்பட்டவையே ஆகும். ஆகவே கர்த்தர் நமக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் வழங்கியிருந்தால் அவற்றைப் பிறருக்கு நன்மையுண்டாகப் பயன்படுத்துவோம். அவற்றின் வாயிலாக மக்கள் கர்த்தரை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பமே மேலோங்கியிருக்கட்டும்.