டிசம்பர் 7 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,21
- December 7
“நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து … (வசனம் 21).
“நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணுவேன்” என கர்த்தர் சொன்னதை எலியா ஆகாபுக்கு அறிவித்தான். நான் உனக்குத் தீமையை வரப்பண்ணுவேன் என்பதே இதன் பொருள். ஆகாப் மனந்திரும்பும்படிக்கு கர்த்தர் எத்தனையோ வாய்ப்புகளை அவனுக்குக் கொடுத்தார். விலையேறப்பட்ட தன் ஆத்துமாவைப் பாவம் செய்யும்படிக்கு விலையின்றி விற்றுப்போட்டவன், பணமின்றி கிடைக்கக்கூடிய கிருபையின் வாய்ப்பை புறக்கணித்ததன் விளைவே இந்தத் தண்டனை அறிவிப்பு. கர்த்தருடைய தீர்க்கதரிசியின் வேலை ஒருவன் மனந்திரும்பும்படி பிரசங்கிப்பது மட்டுமின்றி, அவன் மனந்திரும்பாத பட்சத்தில் அவனை எச்சரித்துப் புத்திசொல்வதாகும். ஒவ்வொரு தேவதண்டனைக்கு முன்னரும் அவர்கள் மனந்திரும்புவதற்கான காலஅவகாசம் கொடுக்கப்பட்டது என்பதை வேதம் கூறும் ஒவ்வொரு நிகழ்வும் சான்றுபகரும். கர்த்தர் ஒருவரையும் காரணமின்றித் தண்டிக்கிறவர் அல்லர்.
சாத்தானுக்குத் தங்களை விற்றுப்போட்டவர்களுக்கு அவன் நிரந்தரமற்ற மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் வாக்குப்பண்ணுகிறான். அவர்களுக்கு வரக்கூடிய தண்டனையை மறைத்து, இச்சையினால் வரக்கூடிய சந்தோஷத்தைக் கொடுக்கிறான். ஏவாளை இச்சையினால் சோதித்தது போலவே ஒவ்வொருவரையும் சோதித்து, பின்பு விழுந்துபோனவர்களுக்கு தேவனுடைய தண்டனையை வரப்பண்ணுகிறான். அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக நமது பிரயாசத்தையும் செலவழிக்கும்படி அவன் தூண்டுகிறான். ஆனால் ஆண்டவரோ, நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்” என்று கூறுகிறார். ஆகாப் தனக்கு வழங்கப்பட்ட இலவசமான கிருபையை உதாசீனம் செய்து, இப்பொழுது தண்டனையையே வெகுமதியாகப் பெற்றுக்கொள்கிறான்.
பாவம் அதைச் செய்தோருக்கு பயங்கரமான சம்பளத்தை வழங்குகிறது. பழைய ஏற்பாட்டு மனிதரைக் குறித்துக் கூறும்போது, “தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று புதிய ஏற்பாட்டின் எபிரெயர் நிருபத்தின் ஆசிரியன் விளக்குகிறான் (2,2). பாவம் செய்யும்படி தன்னை விற்றுப்போட்ட ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், “நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணுவேன்” (வசனம் 21) என்பதேயாகும்.
எலியா துணிச்சலுடன் ராஜாவுக்கு முன்பாகச் சென்று அவனுடைய பாவத்தை உணர்த்தியது மட்டுமின்றி, அவனுக்கான தண்டனையின் தீர்ப்பையும் அறிவித்துவிட்டு வந்தான். யாரும் என்னை எச்சரிக்கவில்லையென்று ஆகாப் ஒருபோதும் சாக்குப்போக்கு சொல்லமுடியாது. “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றைய தினம் சாட்சிகளாக வைக்கிறேன்” (அப்போஸ்தலர் 20,26 முதல் 27) என்று பவுல் கூறியதுபோல எலியாவும் தனது இரத்தப்பழிக்கு நீங்கலாகிவிட்டான். இவ்வாறு நம்மாலும் சொல்ல இயலுமா?