2024 டிசம்பர் 6 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,20
- December 6
“அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்” (என்றான்) (வசனம் 20).
ஆகாப் எலியாவை திடீரென வரக் கண்டவுடன், “என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா” என்றான். அவன் எலியாவை தன் பகைஞனாகக் கருதினான். கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையைப் பெற்று, எவ்வித ஒளிவுமறைவுமின்றி, அதை உண்மையாய் அறிவிக்கிறவர்களை தங்களது எதிரிகளாகக் கருதுவது எவ்வளவு மோசமான நிலைமை. ஆகாப் தான் மனந்திரும்புவதற்குப் பதிலாக, கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு வந்த எலியாவைப் பகைவனாகப் பாவித்தான். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நமக்கு அறிவிக்கப்படும்போது, அல்லது நமது பாவங்களை தனிப்பட்ட முறையில் எவராவது சுட்டிக் காட்டும்போது, நமது இருதயத்தைப் பரிசோதித்து, அதைத் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, சுட்டிக்காட்டுபவரை குறை சொல்லக்கூடாது.
சாறிபாத் விதவைக்கு எலியா என்னவாக இருந்தான். “நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன்” என்றாள். ஆகவே பிரச்சினை எலியாவிடம் அல்ல, எலியாவைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிற ஆகாபிடமே இருந்தது. நாம் யாராக இருக்கிறோமோ அதுவே நமக்கு முன்பாக இருக்கிற நபர் என்பதைத் தீர்மானிக்கிறது. நமக்கு எதிரே இருப்பவர்கள் உண்மையிலேயே யாராக இருக்கிறார்களோ அவ்விதமாக நாமும் பார்க்கப் பழகிக்கொள்வோம். யூதர்கள் கிறிஸ்துவை தச்சனுடைய மகனாகப் பார்த்தார்கள். அவருடைய சீடர்களில் ஒருவனாகிய பேதுருவோ, “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டான். ஒரே நபர், இருவேறு கருத்துக்கள். எனவே நமக்கு எதிரே இருப்பவரைப் பார்க்கிற விதத்தைக் குறித்து கவனமாயிருப்போம்.
“என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா” என்று ஆகாப் எலியாவிடம் கூறினான். அவன் எங்கே இருக்கிறான் என்பதை எலியாவால் அறிந்துகொள்ள முடியாது. ஆனால் எலியாவின் தேவன் அதை அறிந்து அதை அவனுக்கு அறிவித்தார். கர்த்தருடைய பார்வைக்கு ஒருவரும் தப்பமுடியாது. அவர் அறியாமல் நாம் ஏதொரு காரியத்தையும் செய்ய முடியாது. “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று ஆமோஸ் தீர்க்கதரிசி கூறியிருக்கிறார் (3,7).
“கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்” என்று எலியா கடிந்துகொண்டான். பிசாசுக்கு அடிமையாகி பாவம் செய்வதற்குத் தன்னை முழுவதுமாய் கையளிப்பது என்பதே இதன் பொருள். ஒரு சமயத்தில் பவுல் அப்போஸ்தலன், “நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்”(ரோமர் 7,14) என்று கூறுகிறார். பாவசுபாவத்திற்கு அடிமையாகி, தொடர்ந்து மாம்சத்தின் தூண்டுதலால் காரியங்களைச் செய்வதே இது. ஆனால் ஆவியானவரின் துணையோடு நாம் இத்தகைய பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், மாம்சத்தின்ஆதிக்கத்திலிருந்தும் நாம் வெற்றி பெற முடியும். இதுவே கிறிஸ்துவுக்குளான ஜெயங்கொள்ளும் வாழ்க்கை. ஆகவே நம்முடைய அவயவங்களை நீதியின் ஆயுதங்களாய் கர்த்தருக்கென்று கனிகொடுக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.