2024 டிசம்பர் 3 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,15 முதல் 16 வரை
- December 3
“நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான்” (வசனம் 16).
நாபோத் இறந்துபோனான். அவனுடைய பிள்ளைகளும் அவனோடுகூட கொல்லப்பட்டார்கள். அவனுடைய தோட்டத்தை வேறு எவரும் உரிமை கொண்டாடாதபடிக்கு அதை வாரிசற்றதாக்கினார்கள். வாரிசற்றவர்களின் சொத்துகள் அரசுக்குச் சொந்தமாகிவிடும். எனவே மன்னன் என்ற முறையில் அதை உரிமைகோரும்படி ஆகாப் எழுந்து சென்றான். நன்றாகத் திட்டமிடப்பட்ட சதிச் செயல் இது. பொய், பொய்சாட்சி, கொலை, திருட்டு, குற்றத்தை மறைத்தல் ஆகிய எல்லாவற்றையும் செய்தார்கள். ஆகாப் நாபோத்தின் தோட்டத்தை இச்சித்தான், பத்துக் கற்பனைகளில் மீதி இருக்கிற எல்லாவற்றையும் மீறுவதற்கு அது காரணமாயிற்று. “மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது” (ஆதியாகமம் 9,6) என்று தேவன் வெகு காலத்திற்கு முன்னரே, தேவன் நோவாவிடம் கூறியிருக்கிறார். இத்தகைய பாவத்திற்கு ஆகாபும் அவன் மனைவி யேசபேலும் ஆளாகினார்கள்.
அவர்களைப் பரலோகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. அவரது நியாயத்தீர்ப்பிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. இன்றைய நாட்களிலும் தங்களது வில்லத்தனங்களைப் பயன்படுத்தி பலர் தவறான முறையில் தங்களையும் தங்களது உடைமைகளையும் வளப்படுத்திக்கொள்கிறார்கள். சாட்சிகளற்ற வகையில் தந்திரமான முறையிலும் தங்களது இலக்கையும் குறிக்கோளையும் அடைய நாபோத் போன்ற எளிய மனிதர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களைப் புத்திசாலிகளாகப் பாவிக்கிற மனசாட்சியற்ற இத்தகைய கயவர்களும் நயவஞ்சகர்களும் தங்களது பாவத்திற்கான பங்குகளை தேவனுடைய கரத்திலிருந்து ஒரு நாளில் பெற்றுக்கொள்வார்கள். அப்பொழுது அவர்களது தந்திரமும் சாமர்த்தியமும் ஒன்றுமில்லாமல் போகும். துன்மார்க்கரின் மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும், அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்” (யோபு 20,5 முதல் 6) என்று சோப்பார் நன்றாகச் சொல்லியிருக்கிறான்.
“தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? (ஆபகூக் 1,13) என்னும் கேள்வி ஆபகூக்கைப் போலவே நமக்கும் எழலாம். சர்வ வியாபியாகிய தேவனுக்கு மறைவாக இந்தப் பூமியில் எந்தவொரு நிகழ்வும் நடைபெறுவதில்லை. நாமோ அல்லது நமது உறவினரோ இத்தகைய வஞ்சகர்களால் ஏமாந்துபோயிருக்கலாம். ஆயினும் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். மதத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டும், சட்டத்தின் பாதுகாப்பில் உட்கார்ந்துகொண்டும் ஏழைகளை வஞ்சித்து, ஏமாற்றுகிற காரியத்தில் ஈடுபட்டாலும் அவர்களது அட்டூழியத்தை அவர் அறிந்திருந்தார். மேலும் இந்த உலகத்தின் அநீதியான ராஜாக்களும் சர்வாதிகாரிகளும் எவ்வளவு பலவான்களாகவும், வானளாவிய அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், நீதியாய் நியாயம் செய்கிறவர் என்ற முறையில் கர்த்தர் இவர்கள் அனைவரையும் நீதி செய்வதற்குத் தகுதியானவராயிருக்கிறார். ஆனால் ஏற்ற வேளையில் அவர் காரியங்களைச் செய்வார் என்பதைப் புரிந்துகொள்வோம். அவருடைய வேளை எப்போதும் பரிபூரணமான வேளையே.