December

தியாக மரணம்

2024 டிசம்பர் 2 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,11 முதல் 14 வரை

  • December 2
❚❚

 “அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்” (வசனம் 11).

இஸ்ரவேலின் மூப்பரும் பெரியோரும் யேசபேலுடைய தந்திரமான கட்டளையை நிறைவேற்றுகிற அளவுக்குத் தரந்தாழ்ந்த நிலையானது, பெருவாரியான மக்களும் தேவபக்தியும் பயமும் அற்றவர்களாக மாறிப்போயினர் என்பதற்கான அடையாளமாகும். வேறு வகையில் கூறுவோமாயின் தேசம் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானதாக மாறிவிட்டது. ஒரு நகரத்தை நிர்வகிக்கிற தலைவர்கள் அரசியினுடைய சூழ்ச்சிக்குத் துணையாக நின்று, தங்களது சொந்த நகரத்து குடிமகனாகிய நாபோத்தை எவ்வித மனசாட்சியும் இல்லாமல் கொலை செய்தார்கள். “துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்” (நீதிமொழிகள் 29,16) என்ற சாலொமோனின் வார்த்தைகளுக்கு ஏற்ப மோசமான சூழல் நிலவியது. கர்த்தருடைய தேசமாயினும் கர்த்தருடைய சபையாயினும் இத்தகைய தேவபயமற்ற மனிதர்கள் இருப்பார்களாயின், அங்கே நிச்சயமாகவே நீதிமான்களுக்கு காலமிராது.

 

“நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா?” (2 ராஜாக்கள் 9,26) என்று சொல்லப்பட்டதன் வாயிலாக, அவர்கள் நாபோத்தை மட்டுமின்றி அவனுடைய குமாரையும் அந்த ஊரார் கல்லெறிந்து கொன்றார்கள் என்று அறிய முடிகிறது. அந்த திராட்சை தோட்டத்திற்கு ஒருவரும் உரிமைகோராதபடிக்கு அவனுடைய வாரிசுகளையும் கொன்றார்கள். நீதிக்காகவும் நேர்மைக்காகவும் அந்த குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். “இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்” என்று நம் ஆண்டவர் கூறியதை அறிந்திருக்கிறோம். இத்தகைய நிகழ்வுகள் வரலாற்றில் அங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இஸ்ரவேல் என்னும் நாடு நாபோத்தைக் கொன்ற அன்று முதல், தேவனுடைய ஒரேபேறான குமாரனைக் கொன்றது வரையிலும் இவ்விதமான முரட்டாட்டம் கொண்டதாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. எலியாவின் மூலமாகவும், தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் மூலமாகவும் எத்தனையோ வாய்ப்புகளைப் பெற்றும் ஆகாப் மனந்திரும்பவில்லை. மாறாக, இஸ்ரவேல் அவருக்கு விரோதமாக கலகம் செய்தே வந்திருக்கிறது. புதிய ஏற்பாட்டு விசுவாச மக்களாகிய நமது இருதயம் இத்தகைய கடினமான நிலைக்கு வராதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.

நாபோத்தின் மரணத்தையும் அவனுடைய குமாரருடைய மரணத்தையும் ஆண்டவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். யேசபேலும், நகரத்து தலைவர்களும் அவனது கொலையை மூடி மறைத்திருக்கலாம். ஆனால் உண்மையான காரணத்தை ஆண்டவர் அறிவார். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. கறைப்பட்டிருந்த மொத்த இஸ்ரவேல் நாட்டிலும் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல் ஆங்காங்கே சில உண்மையுள்ள விசுவாசிகள் இருந்தார்கள். அவர்களில் இந்த நாபோத்தும் ஒருவன். அவன் ஊரோடு ஒத்துப்போகவில்லை, தனது சுதந்தரத்தை விருதாவாக இழக்கவும் விரும்பவில்லை. நம்மைச் சுற்றிலும் காரியங்கள் எவ்வாறு இருந்தாலும் உண்மையாக இருப்போம். சுற்றிலும் நெருக்கப்பட்டாலும் கர்த்தர் காரியங்களை அறிவார். அவர் ஏற்ற வேளையில் பதிலளித்து நமக்குச் சகாயம் செய்வார்.