2024 டிசம்பர் 4 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,17 முதல் 19 வரை
- December 4
“கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்” (வசனம் 17 முதல் 18).
ஏறத்தாழ ஓராண்டு கால இடைவெளிக்குப்பின் நாம் மீண்டும் கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியாவைச் சந்திக்கிறோம். இப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாயிற்று. தன் பணியைச் செய்யும்படி மீண்டும் அவனுக்கு அழைப்பு வந்தது. இந்தக் காலகட்டங்களில் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் சிலரைக் கர்த்தர் பயன்படுத்தினார். எந்தக் காரியத்துக்கு யாரை, எவ்விதம் பயன்படுத்த வேண்டும் என்பதை கர்த்தரே தீர்மானிக்கிறார். எல்லா ஊழியங்களையும் ஒருவராய் செய்ய வேண்டிய அவசியமில்லை. எலியாவைப் போல நமது வாய்ப்பு வரும்போது காத்திருப்போம். கர்த்தர் ஒருவரையும் புறக்கணிக்கிறவர் அல்லர். ஆகாபின் இறுதி முடிவை அறிவிக்கிற வாய்ப்பை கர்த்தர் எலியாவுக்கே அருளினார். ஆனால் ஒரு காரியம் முக்கியமானது, அது கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எபொழுதும் அவருடன் தொடர்பில் இருப்போம்.
“நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான்” (வசனம் 16). ஆனால் கர்த்தரோ, “நீ, எழுந்து சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவைச் சந்திக்கும்படி போ” என்று எலியாவுக்குக் கட்டளையிட்டார். ஆகாப் பிறர் சொத்தை அபகரிக்கும்படி மனைவியின் சொல் கேட்டு எழுந்துபோனான்; எலியாவோ ஆகாபை கண்டிக்கும்படி கர்த்தருடைய வார்த்தையின்படி எழுந்து போனான். “என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா” (உன்னதப்பாட்டு 2,10) என்ற உன்னதப்பாட்டின் அன்பின் மொழிகளுக்கு ஏற்ப, நமது ஆத்ம மணவாளனின் வார்த்தைகளைக் கேட்டு எழுந்து செல்ல ஆயத்தமாயிருப்போம். நாம் எழுந்து, புறப்பட்டுச் செய்கிற வேலை கர்த்தருடைய வேலையாகவோ அல்லது அவரது சித்தத்தின்படி செய்கிற வேலையாகவோ இருக்கட்டும்.
துரதிஷ்டவசமாக ஆகாப் எலியாவைச் சந்தித்தான். அவன் நிலத்தை அபகரிக்கும் முன்னதாகவே, இஸ்ரவேலின் கோபக்கார தீர்க்கதரிசியாகிய எலியாவைச் சந்திக்க நேரிட்டது. ஆகாபைப் பொறுத்தவரை இது திட்டமிடப்படாத, எதிர்பாராத சந்திப்பு; எலியாவைப் பொறுத்தவரை இது கர்த்தரால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட சந்திப்பு. விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்தவர்களாக இருப்போமானால், நாம் யாரைச் சந்தித்தாலும், அது கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட ஒரு சந்திப்பாகவே இருக்கிறது. நாம் யாரையும் விருதாவாகச் சந்திப்பதில்லை. ஆகவே நமது ஒவ்வொரு சந்திப்பையும் பொருள் நிறைந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவோம்.
“நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்” (வசனம் 19) என்பதே கர்த்தர் சொன்ன வார்த்தை. நாம் யாரைச் சந்தித்தாலும், கர்த்தர் கூறச் சொன்ன வார்த்தைகளைப் பேசுவோம். எலியாவைப் போல, நீ இன்னின்ன வார்த்தைகளைப் பேசு என்று கர்த்தர் நம்மிடத்தில் சொல்வதில்லைதான். ஆனால் நாம் கர்த்தருடன் சரியான உறவில் இருக்கும்போது, அனுதினமும் அவரது வார்த்தைகளை தியானிக்கும்போது, யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்பதை ஆவியானவர் நமக்குக் கற்றுத் தருகிறார். “கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்” (3,16) என்று மல்கியா தீர்க்கதரிசி எழுதிவைத்திருக்கிறதை யோசித்துச் செயல்படுவோம்.