November

சுயவெறுப்பின் ஊழியம்

2024 நவம்பர் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,35 முதல் 38 வரை)

  • November 24
❚❚

“நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்” (வசனம் 36).

இப்பொழுது கர்த்தருடைய தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் வந்தான். இவன் ஏற்கெனவே வந்த தீர்க்கதரிசி அல்ல. நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறதைப் போல (மத்தேயு 12,35), கர்த்தர் தம்முடைய விசுவாச மக்களாகிய கருவூலத்திலிருந்து விதவிதமான மனிதர்களைப் பயன்படுத்துகிறார். கர்த்தர் தமது வேலைகளுக்காக ஒரே மனிதரை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதில்லை. நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்று கூறிய எலியாவுக்கு மாற்றாக, பல்வேறு தீர்க்கதரிசிகளை அவர் பயன்படுத்துகிறார். அவ்வாறே புதிய ஏற்பாட்டு உள்ளூர் சபைகளிலும் வெவ்வேறு வரங்களை உடைய பல்வேறு மனிதர்களைப் பயன்படுத்துகிறார். நாம் கர்த்தருடைய சேவகர்களாக இருப்போமாயின், நம்மையும் ஏற்றவேளையில் பயன்படுத்துவார். அதுவரை காத்திருப்போம், வேளை வரும்போது முழுமனதுடன் செல்ல ஆயத்தமாயிருப்போம்.

இந்தத் தீர்க்கதரிசி நடைமுறையில் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தான். தன்னையே உதாரணமாக முன்வைத்தான். அதாவது தனக்குக் காயம் உண்டாகும்படி ஒருவனை அடிக்கச் சொன்னான். தனக்குக் காயத்தை உண்டாக்கி ஆகாபுக்கு செய்தியைச் சொல்லும் உத்தி இது. இதுவே தியாகத்தின் ஊழியம், இதுவே சுயவெறுப்பின் ஊழியம். தன்னை இழந்து அல்லது தன்னை விட்டுக் கொடுத்து, ஊழியம் செய்வது இன்றைய நாட்களில் குறைவாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவரே சுயவெறுப்பின் ஊழியத்திற்கு சிறந்த முன்னோடி. அவர் கோதுமை மணியாக தம்மையே பலியாக ஒப்புவித்தார். அவருடைய தழும்புகளால் நாம் குணமடைகிறோம்.

இந்தத் தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்று கூறினான். இந்தத் தீர்க்கதரிசியின் தோழனும் ஒரு தீர்க்கதரிசியாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தத் தீர்க்கதரிசியின் கட்டளைக்கு அவன் கீழ்ப்படியவில்லை. தன் தோழனைப் புரிந்துகொள்ளாத ஒரு தோழன் இவன். தன் தோழனை எவ்வாறு அடிக்க முடியும் என்று தயங்கியிருக்கலாம். ஆசாபாசங்களுக்கும், உறவுகளுக்கும் அப்பாற்பட்டுச் செயல்படுகிறவனே தீர்க்கதரிசியாக விளங்க முடியும். இந்த வகையில் இந்தத் தீர்க்கதரிசியின் தோழன் தோற்றுவிட்டான். “என்னை அடி” என்று கூறுவது, நண்பனின் சுய சத்தமல்ல, அது கர்த்தருடைய வார்த்தை என்று புரிந்துகொள்ளத் தவறிவிட்டான். இதன் விளைவு மிக மோசமானதாக இருந்தது,  அவன் சிங்கத்திற்கு இரையாகிவிட்டான்.

அடிக்க வேண்டும் என்று கோருவது ஒரு கடினமான நடவடிக்கையாகத் தெரிந்தாலும், அதன் வாயிலாகக் கர்த்தர் செயல்பட விரும்பினார். இதற்குக் காரணங்கள் எதுவாக இருந்தாலும், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டியது இன்றியமையாதது. மேலும், கர்த்தர்  கட்டளையிட்டதை நாம் செய்யும்போது, அதில் எந்தத் தீமையும் இருக்க முடியாது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். மற்றொரு தீர்க்கதரிசி இவனை அடித்து, தன்னைக் கீழ்ப்படிதலுள்ளவனாக நிரூபித்துக்கொண்டான். கர்த்தருடைய கட்டளை நம்மிடத்தில் வரும்போது, அது நல்லதா கெட்டதா என்று ஆராய்ந்து பாராமல், எக்கிரயம் செலுத்தியாயினும் அதற்குக் கீழ்ப்படிய பிரயாசப்படுவோம்.