November

வாய்ப்புகளை நழுவவிட வேண்டாம்

2023 நவம்பர் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,2)

  • November 23
❚❚

“ அதற்கு அவன் (ஆகாப்), இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை (பெனாதாத்) அனுப்பிவிட்டான்” (வசனம் 34).

நானே கர்த்தர் என்று அறிந்துகொள்ளும்படி இந்தப் போரில் உனக்கு வெற்றியைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தார். ஆயினும் ஆகாப் தனக்கு வழங்கப்பட்ட கிருபையின் வாய்ப்பை தவறவிட்டது மட்டுமின்றி, அதைப் புறக்கணிக்கவும் செய்தான். அவன் கர்த்தரோடு சமாதானமாக இருப்பதற்குப் பதில், தன் எதிரியோடு தோழமை கொண்டான். ஆகாப் பெனாதாத்தோடு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு, அவனை உயிரோடு அனுப்பிவிட்டான். “பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்” (2,8) என்று யோனா தீர்க்கதரிசி அழகாகச் சொல்லியிருக்கிறான். அவன் கிருபையை உதாசீனம் பண்ணியதன் விளைவை, தண்டனையாக கர்த்தருடைய தீர்க்கதரிசியின் வாயிலாகப் பெற்றுக்கொண்டான்.

நம்முடைய வாழ்விலும் கர்த்தர் தொடர்ந்து பேசி வருகிறார். நாம் அவருக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவதில் மிகவும் கவனமாயிருப்போம். நம்முடைய ஆண்டவரோடு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இரண்டு கள்ளர்கள் சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த வேளையில் பேசிய வார்த்தைகளை மிகவும் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். அவர்களின் ஒருவன் கிறிஸ்துவை விசுவாசித்தான். தனக்குக் கிடைத்த வாய்ப்பை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொண்டான். எவ்வளவு மோசமான பாவியாக இருந்தாலும், கர்த்தரை விசுவாசித்தால் பரலோகம் செல்லலாம் என்பதற்கு அந்தக் கள்ளன் எடுத்துக்காட்டானான். சிலுவையின் சிலாக்கியத்தை அனுபவித்த முதல் நபராகத் திகழ்கிறான்.

துக்கமான காரியம் என்னவெனில், மற்றொரு கள்ளன் தனக்குக் கிடைத்த கிருபையைப் புறக்கணித்தான். நாம் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருக்கலாம், சபையில் வாரந்தோறும் பிரசங்கங்களைக் கேட்கலாம், கிறிஸ்தவச் சூழலிலேயே வளர்க்கப்பட்டிருக்கலாம். ஆயினும் ஆகாபைப் போல, கர்த்தரை அறிந்துகொள்ளும்படியான பல வாய்ப்புகளைத் தவறவிட்டுவிடலாம். கர்த்தருடைய வார்த்தை நம்மிடத்தில் வரும்போது கவனமாகப் பரிசீலனை செய்து ஆண்டவருக்கு ஒப்புவிப்போம். “இஸ்ரவேல் ராஜாக்கள் இரக்கமுள்ளவர்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்’ என்று சொன்ன போலியான வார்த்தைகளால் வந்த பெருமைக்கு இடங்கொடுத்து ஆகாப் விழுந்துபோனான், வீண் புகழ்ச்சியை நம்பி வீணாகப் போய்விட்டான்.

ஆண்டவர் இந்த உலகத்தில் ஊழியம் செய்த நாட்களில், அவருடைய சொந்த மக்கள் இவ்விதமாகத்தான் நடந்துகொண்டார்கள். “எருசலேமே, எருசலேமே, … கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று” (லூக்கா 13,34) என்று ஆண்டவர் அங்கலாய்த்தார். இன்னும் காலதாமதம் ஆகிவிடவில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தருணத்திலாவது நம்மைக் குறித்து யோசித்துப் பார்ப்போம். ஆண்டவருடன் ஒப்புரவாகி, சரிசெய்ய வேண்டிய காரியங்களை சரிசெய்து, அவருக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். என்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன ஆண்டவர் நமக்காக ஆயத்தமாக இருக்கிறார்.