2024 நவம்பர் 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,22)
- November 15
“பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்” (வசனம் 22).
பெயர் தெரியாத அந்தத் தீர்க்கதரிசி மீண்டும் ஆகாபுக்கு அறிவுரை கூறினார். பெனாதாத் மீதான வெற்றி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்பதைத் தெரிவித்தான். ஒரு வெற்றிக்குப் பின்னர் நாம் தொடர்ந்து விழிப்பாய் இருக்க வேண்டும் என்னும் ஆலோசனையை இது நமக்கு வழங்குகிறது. கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கும் உலக ராஜ்யத்துக்கும் இடையிலான போர் ஆதாம் காலம் முதலாகவே நடந்து வருகிறது. சர்வாயுத வர்க்கங்களைத் தரித்தவர்களாக நாம் எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். “நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப் பாரும்” என்று அந்தத் தீர்க்கதரிசி ஆகாபிடம் சொன்னதுபோலவே, புதிய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசியாகிய பவுல், “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” (எபேசியர் 6,18) என்று ஆலோசனை கூறுகிறார்.
பெனாதாத் இஸ்ரவேலுக்கு விரோதமாக போருக்கு ஆயத்தம் செய்தபோது, “இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்” (வசனம் 7) என்று கூறினான். இப்பொழுது அதே வார்த்தையை தீர்க்கதரிசி, “நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்” என்று ஆகாபிடம் கூறினான். “சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” என்று பவுல் கொரிந்து சபைக்கு எழுதுகிறார். ஆகவே நாம் சாத்தானின் தந்திரங்களைக் குறித்து நாம் கவனித்துப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நமது சாதாரண பார்வையால் சாத்தானின் தந்திரங்களை அறிவது சற்றுக்கடினமானது. உலகத்தின் அதிபதியாகிய சாத்தான், பொய்க்குப் பிதாவாக இருக்கிறான், ஒளியின் தூதனுடைய வேடத்தை அணிந்து வருகிறான். மேலும் அவன் பொய்யான அற்புதங்களைச் செய்கிறவனாகவும், வேத வாக்கியங்களைத் தவறான வகையில் மேற்கோள் காட்டுகிறவனாகவும், விசுவாசிகளிடத்தில் சந்தேகத்தை விதைக்கிறவனாகவும் இருக்கிறான். அவனது சூழ்ச்சிகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றைக் கண்டுகொள்கிற அளவுக்கு நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இப்பொழுது நாம் செய்யத்தக்கது என்ன? ஆகாபைப் பொறுத்தவரை அவன் பாகால் வழிபாட்டிலிருந்து விடுபட வேண்டும். கர்த்தருக்குள்ளாகத் தன்னைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறே நாமும் கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கை வாழ வேண்டும். நாம் உலகத்தை நேசிப்பதை விட்டுவிட்டு, கிறிஸ்துவை நேசிக்க வேண்டும். என் ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல என்று கிறிஸ்து சொன்னதுபோல நாமும் சொல்ல வேண்டும். இதோ இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவன் குற்றம் கண்டுபிடிக்குமளவும் என்னிடத்தில் ஒன்றுமில்லை என்று கிறிஸ்து பறைசாற்றியது போல நாமும் தைரியமாகச் சொல்லத்தக்க வாழ்க்கை வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கை வாழ்வோமாயின் நமக்கு எதிராக வரும் சத்துருவை வெல்லலாம்.