October

பொய்ச் செய்தியைப் பரப்புதல்

2024 அக்டோபர் 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,1 முதல் 2 வரை)

  • October 12
❚❚

“எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்” (வசனம் 1).

எலியா செய்த அனைத்தையும் ஆகாப் ராஜா தன் மனைவி யேசபேலிடம் கூறினான். அந்த இடத்தில் கர்த்தர் எலியாவைப் பயன்படுத்தினார். அன்றைய நாளில் கர்த்தரே வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி, பலியையும், தண்ணீரையும், கற்களையும் பட்சித்திருந்தார். இது கர்த்தருடைய செயலே அன்றி எலியாவின் தனிப்பட்ட வல்லமையின் செயலன்று. ஆனால் ஆகாப் ராஜா இந்தக் காரியங்களைக் கர்த்தர் செய்ததாகச் சொல்லாமல், அதற்குப் பின்னால் இருந்த எலியாவைப் பற்றி மட்டுமே தன் மனைவியிடம் சொன்னான். அங்கு நடைபெற்ற கர்த்தருடைய அதிசயமான காரியங்கள் அவனது மனதை அசைக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க காரியமாகும்.

கர்த்தர் எலியாவைக் கொண்டு செய்த காரியங்களின் நோக்கம் மறைக்கப்பட்டு, எலியாவின் மீது பழிவிழும்படி காரியங்களை ஆகாப் விவரித்தான். கர்த்தரின் தேசத்தின் நலனுக்காக, மக்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, அவர்களை ஒரு நாடாக ஏற்படுத்திய மெய்யான தேவனை வணங்க வேண்டும் என்பதற்காகவே கர்த்தர் இத்தகைய காரியங்களைச் செய்தார். ஆனால் ஆகாபின் வார்த்தைகள் எலியாவுக்கும் யேசபேலுக்கும் தனிப்பட்ட பகையை உண்டாக்கும்படியாகக் காணப்பட்டது. ஆகவே நடந்த ஒரு காரியத்தைப் பற்றி நாம் பிறருக்கு விளக்கும்போது, அந்தக் காரியத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அறிவிப்பதே சிறந்ததாகும்.

இன்றைய நாட்களில் மனிதர்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் இப்பிரபஞ்சத்திலுள்ள அவரது அதிசயமான காரியங்களையும் பார்ப்பதற்கு மனதற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் மிகவும் அதிசயமான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் ஒரு சர்வ ஞானியாகிய ஒரு படைப்பாளர் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது என்று வேதம் கூறும் வசனத்தையும் அறிந்திருக்கிறார்கள். ஆயினும் வேண்டுமென்றே கர்த்தரை மறுதலித்துவிட்டு, அவருடைய செயல்களைப் பிரசித்திப்படுத்துகிற கிறிஸ்தவர்களை இந்த உலகம் உபத்திரவப்படுத்துகிறது.

இஸ்ரவேலில் பாகால் வழிபாட்டை புகுத்தி, தன்னிஷ்டம்போல் செயல்பட்டுவந்த இந்த அரசிக்கு ஆகாபின் அறிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகாலின் ஆசாரியர்களுக்கு தனது அரசுக் கருவூலத்திலிருந்து பணமும் உணவும் கொடுத்து ஆதரித்தவளுக்கு இந்தச் செய்தி மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியது. இருபத்தினான்கு மணி நேரத்தில் நான் எலியாவைக் கொல்வேன் என்று அவள் சபதம் செய்தாள். கர்த்தருடைய செயல்களைப் பொறுக்க முடியாத மனிதர்கள் அவருடைய பிள்ளைகளின்மீதே எப்போதும் கைவைக்கத் துணிகின்றனர். முதல் நூற்றாண்டில் பவுல் அப்போஸ்தலனைக் கொல்லும் வரைக்கும் நாங்கள் புசிப்பதும் இல்லை, குடிப்பதும் இல்லை என்று நாற்பதற்கும் அதிகமான பேர்கள் சபதம் செய்தார்கள். இன்றைய நாட்களிலும் இதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த யேசபேலைப் போலவே எண்ணற்ற மக்களும், மன்னர்களும் கிறிஸ்தவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறார்கள். ஆயினும் நாம் பயப்பட வேண்டாம், இந்த உலகத்தில் உள்ளவனிலும் நம்மோடிருக்கிறவர் பெரியவராயிருக்கிறார்.