2024 செப்டம்பர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,21)
- September 21
“கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்” (வசனம் 21).
“கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்” என்னும் எலியாவின் அறைகூவலிலிருந்து நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்து இன்னும் ஒருநாள் சிந்திக்கவிருக்கிறோம். நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் “உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூரும்படியாக” அழைக்கப்பட்டிருக்கிறோம் (மாற்கு 12,30). இதற்கு மாறானது எதுவும் அறைகுறையான ஒப்புவித்தலே ஆகும். அவர் கட்டளையிடும் எல்லாவற்றையும் நாம் முழு மனதோடு நிறைவேற்ற வேண்டியதே நமக்கான அழைப்பாகும்.
இந்த ஒப்புவித்தல் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடத்தில் எதிர்பார்க்கப்படுகிற பிரத்யேகமான அழைப்பாகும். எலியா பாகால் தீர்க்கதரிசிகளிடம், நீங்கள் கர்த்தரை நம்புகிறீர்களாக என்று கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்கள். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்கள் இருவரிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று தேவனாகிய கர்த்தர் வினவினார். ஆனால் ஏவாளை வஞ்சித்த சர்ப்பத்தைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்கவில்லை. மாறாக நேரடியாக சர்ப்பத்துக்கு தண்டனையும் சாபத்தையும் வழங்கினார் (ஆதியாகமம் 3,11முதல் 16). அவரை முழுவதுமாய் நேசிக்க வேண்டும் என்பது அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கான அழைப்பாகும். அந்நிய மக்களுக்கானது அல்ல.
சீஷத்துவத்தின் நிபந்தனையாக, “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக்கா 14,26) என்று ஆண்டவர் கூறினார். அவரைப் பின்பற்றுவதில் எந்தவொரு உறவும், மனிதர்களும், பொருளும் இடையே வந்து விடக்கூடாது. பல நேரங்களில் நாம் வெளிப்பிரகாரமாக இந்த உலகக் காரியங்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தாலும், இருதயத்தில் அவற்றை நேசிக்கிறோம். ஒரு விசுவாசி இரண்டு இடங்களில் கால் வைக்க முடியாது. ஆகவேதான் “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” என்று பவுல் கேள்வி எழுப்புகிறார் (2 கொரிந்தியர் 6,14). ஆகவே நமக்குக் கர்த்தர் கடவுளாக இருப்பாரானால் அவர் கட்டளையிட்டபடி அவரை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
“இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” என்று யாக்கோபு கூறுகிறான் (யாக்கோபு 1,8). நமது உள்ளத்தில் இரண்டு உயர்ந்த கடவுள்கள் இருக்க முடியாது. எனவேதான் எலியா மக்கள் தங்கள் மனதில் ஒன்றை உறுதி செய்யும்படி அழைத்தார். அவர்கள் மெய்யான ஜீவனுள்ள தேவன் என்று முடிவு செய்த நபருக்கு தங்கள் முழு இதயங்களையும் ஆற்றலையும் கொடுக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். யார் சிறந்த கடவுள், யார் உண்மை கடவுள் என்று தெரிந்துகொள்ளும் அவர் நம்முடைய சிந்தனைக்கே விட்டுவிடுகிறார். “அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்” (1 யோவான் 5,20) என்பதை நாம் முழுமையாக நம்புவோமானால் நம்முடைய முழு இருதயத்தையும் அவருக்கே அர்ப்பணித்து வாழுவோம்.