September

தேவபயமும் தைரியமும்

2024 செப்டம்பர் 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,18)

  • September 16
❚❚

“அதற்கு அவன் (எலியா) : இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” (வசனம் 18).

இந்த வார்த்தைகளை எலியா தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்யத் தேடுகிற இஸ்ரவேலின் ஒரு கொடுங்கோல் ராஜாவினிடத்தில் பேசுகிறான் என்பதை நினைத்துக்கொள்வோம். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது என்று வாசிக்கிறதுபோல, எலியா வெறுமனே வாய்ச்சொல் வீரன் அல்லன், அவன் செயல்படுகிற தேவனின் ஊழியக்காரன். அவன் பரலோக தேவனுக்குப் பயந்தவனாகையால் இவ்வுலக மன்னனுக்குப் பயப்படவில்லை. ஆகாப் உன்னைக் கொல்வதற்கு ராஜ்யம் ராஜ்யமாக தேடி அலைகிறான் என்று ஒபதியா எலியாவிடம் அறிவித்த பிறகும் அவன் தைரியமாக அவனுக்கு முன்பாக நின்றான். ஏனெனில் ஆகாபுக்கு உன்னைக் காண்பி என்று கர்த்தர் அனுப்பியிருந்தபடியால், அவரே தனக்கான பாதுகாப்பைப் பொறுப்பெடுத்துக்கொள்வார் என்று அறிந்திருந்தான்.

சர்வாதிகாரி பார்வோனுக்கு ஒட்டுமொத்த தேசமும் நடுங்கிக்கொண்டிருந்த வேளையில், தேவனுடைய மனிதனாகிய மோசே, அரன்மனை வரையிலும் சென்று அவனுக்கு எதிராகத் தைரியமாக நின்றான். அவனுடைய முகத்தில் எவ்விதத்திலும் பயத்திற்கான அறிகுறி தெரியவில்லை. மாறாக, ஒட்டுமொத்த அரண்மனை ஊழியர்களும் அவனுக்கு முன்பாக ஆடிப்போனார்கள். கர்த்தருக்குப் பயந்து நடக்கிற தேவமனிதர்கள் எல்லாக்காலத்திலும் இவ்விதமாகத்தான் நடந்திருக்கிறார்கள். நான் சிறுவயதுமுதல் தேவனுக்குப் பயந்து நடக்கிறவன் என்று ஒபதியா சொன்னாலும், அவன் அரசனுக்கும் பயந்ததால் ஒருபோதும் அவனது பாகால் வழிபாட்டை எதிர்த்துக் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில் ஆகாபின் தயவு ஒபதியாவுக்குத் தேவைப்பட்டது. ஆனால் எலியாவோ முற்றிலுமாகக் கர்த்தரையே சார்ந்து வாழ்ந்தான். எலியா முகமுகமாக ஆகாபுக்கு எதிர்த்து நின்றான். எலியாவின் ஆவியைக் கொண்டிருந்த யோவானும் ஏரோதுவுக்கு எதிராகக் கேள்வி எழுப்பினான்.

ராஜாக்களைக் கண்டவுடன் பொதுவாகக் காணப்படுகிற பயந்து நடுங்குகிற பண்பு எலியாவிடம் காணப்பட்டிருந்தால் எலியாவும் அவனுடைய காலடியில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு, கருணை மனு போட்டிருப்பான். மாறாக, எலியா ஒரு பெரிய அரசரின் தூதுவராகவும் சேனைகளின் கர்த்தருடைய பிரதிநிதியாகவும் இருந்தபடியால் அவன் அஞ்சாமல் ஆகாபுக்கு முன்பாக நின்றான். அவன் தான் யார் என்பதை உணர்ந்து, ஆகாபுக்கு முன்பாக நின்றதன் மூலமாக, தேவ வல்லமையை வெளிப்படுத்தினான். இவ்வாறு செய்வதன் மூலமாக தேவனுக்கு மட்டுமே பயப்படக்கூடிய ஓர் ஊழியனின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் உயர்த்திப்பிடித்து பாதுகாத்தான். கர்த்தருடைய ஊழியனாக இருப்பது மிக உன்னதமானது என்று உணர்ந்ததாலேயே அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் கேட்டுக்கொண்டபோதிலும் அதிபர் தேர்தலில் போட்டியிட பில்லி கிரஹாம் மறுத்துவிட்டார். ராஜாக்களை ஏற்படுத்துகிற ராஜாதி ராஜாவின் ஊழியர்களாக நாம் இருக்கிறோம் என்று நம்புவோமானால், ஏசாயா தீர்க்கதரிசியைப் போல, “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்” (ஏசாயா 12,2) என்று நாமும் பறைசாற்றுவோம்.