அப்போஸ்தலருடைய நடபடிகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 22

அதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

  • Acts-22
❚❚

1 சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.
2 அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:
3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
5 அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.
6 அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது.
7 நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
8 நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
9 என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
10 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
11 அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
12 அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
13 என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
14 அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக்கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
18 அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
19 அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,
20 உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
21 அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
22 இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
23 இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
24 சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விடுவிக்கச் சொன்னான்.
25 அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக்கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
26 நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.
27 அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
28 சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.
29 அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
30 பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனை சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.