1 மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.
2 எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத்தொடரும்.
3 பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.
4 மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.
5 லுூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிற வழியிலே உண்டாகிய கூக்குரலைச் சத்துருக்கள் கேட்கிறார்கள்.
6 உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்.
7 நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷகளையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கோமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.
8 பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.
9 மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.
10 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.
11 மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.
12 ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.
13 அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும்.
14 நாங்கள் பராக்கிரமசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?
15 மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
16 மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.
17 அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
18 தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்..
19 ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
20 மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
21 சமனான பூமியாகிய ஓலோனின் மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,
22 தீபோனின்மேலும், நேபோவின் மேலும், பெத்திப்லாத்தாயீமின் மேலும்,
23 கீரியாத்தாயீமின் மேலும், பேத்கமூலின்மேலும், பெதெமெயோனின்மேலும்,
24 கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.
25 மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26 அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.
27 இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே.
28 மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய் கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்..
29 அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
30 அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.
31 ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.
32 சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.
33 பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.
34 எஸ்போன்துவக்கி ஏலெயாலே மட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஓரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.
35 மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
36 ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்து போகிறபடியினால் அப்படி தொனிக்கும்.
37 தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.
38 மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்
40 இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.
41 கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.
42 மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.
43 மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
44 திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
45 வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினிஜுவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப் தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.
46 மோவாபே உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
47 ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.
.