எரேமியா

எரேமியா – அதிகாரம் 28

அதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

  • Jeremiah-28
❚❚

1 யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:
2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.
3 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.
4 யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
5 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:
6 ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
7 ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.
8 பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும் யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
9 சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.
10 அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
11 பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.
12 அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
13 நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.
14 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.
16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.