1 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
2 அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
3 நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
4 இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியையும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
5 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி:
6 இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,
7 இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
8 யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
9 ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,
10 ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
11 கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:
12 இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
13 சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.
14 அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
15 அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
16 சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
17 நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
18 இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
19 அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
21 இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.
22 அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
.