March

ராஜரீக அழைப்பு

2025 மார்ச் 26 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:11-20

“அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தை எடுத்து, அந்தப் படிகளின்மேல் அவனுக்குக் கீழே விரித்து, எக்காளம் ஊதி: எகூ ராஜாவானான் என்றார்கள்” (வச. 13).

தேவனுடைய வார்த்தை ஒருபோதும் வீணாகத் திரும்பாது. தீர்க்கதரிசியின் மூலமாய் ஊற்றப்பட்ட தைலம், எகூவின் இருதயத்தில் ஒரு புதிய அக்கினியை மூட்டியது. ஒரு மனுஷன் தேவ அழைப்பைப் பெற்றவுடன் அவன் எடுக்க வேண்டிய தீர்மானத்தையும், செயல்பட வேண்டிய விதத்தையும் இந்த எகூவின் காரியம் நாமக்குக் கற்றுத் தருகிறது.

எகூ அறைக்குள்ளிருந்து வெளியே வந்தபோது, அவனது சக அதிகாரிகள் அந்த வாலிப தீர்க்கதரிசியை “பைத்தியக்காரன்” என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், எகூ உண்மையை உரைத்தமாத்திரத்தில், அந்த ஏளனம் மரியாதையாக மாறியது. உலகம் சிலநேரம் தேவனுடைய ஊழியர்களைப் பைத்தியக்காரர் என்று அழைக்கும், ஆனால் தேவன் கிரியை செய்யத் தொடங்கும்போது அதே உலகம் அவர்களுடைய வார்த்தைகளுக்கு நடுங்கிக் கீழ்ப்படியும். அந்த அதிகாரிகள் தங்கள் வஸ்திரங்களை விரித்து எகூவை ராஜாவாக அங்கீகரித்தது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நாம் கிறிஸ்துவுக்குக் கொடுக்கும் முதலிடத்தைக் குறிக்கிறது. நம்முடைய மேன்மைகளை (வஸ்திரங்களை) அவர் பாதத்தில் விரிப்பதே உண்மையான ஆராதனை.

எகூ ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவுடன், அவன் காட்டிய வேகம் ஆச்சரியமானது. “யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப் போகும்படி விடாதிருங்கள்” (வச. 15) என்று கூறிவிட்டு, உடனடியாக ரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் புறப்படுகிறான். “தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதில் எகூ காட்டிய வேகம், சாத்தானின் கோட்டைகளைத் தகர்க்க விரும்பும் ஒவ்வொரு விசுவாசிக்கும் இருக்க வேண்டிய வைராக்கியம்” என்று ஆர்தர் பிங்க் என்று குறிப்பிடுகிறார். புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலன், “இரத்தத்தோடும் மாம்சத்தோடும் நான் தர்க்கம்பண்ணாமல்…” (கலா. 1:16) என்று கூறுவது போல, எகூ தர்க்கம் செய்யாமல் தீவிரிக்கிறான். கீழ்ப்படிதலில் தாமதம் என்பது கீழ்ப்படியாமையாவே கருதப்படும்.

காவற்காரன் எகூவின் ரதத்தைக் கண்டு, “நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறது; போல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான்” (வச. 20) என்கிறான். எகூவின் அடையாளம் அவனுடைய வேகத்தில் தெரிந்தது. “நம்முடைய ஓட்டத்தைக் கண்டு நாம் யார் என்பதை உலகம் அறிய வேண்டும்.கர்த்தருடைய காரியங்களில் நாம் காட்டும் தீவிரம், செய்து முடிக்க வேண்டும் என்னும் ஆர்வம் ஆகியவையே விசுவாசியின் தனித்த அடையாளமாக இருக்க வேண்டும்.

யோராம் ராஜா சமாதானம் கேட்டு ஆட்களை அனுப்புகிறான். ஆனால் எகூ, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? என் பின்னே திரும்பி வா” (வச. 18,19) என்று கூறிவிடுகிறான். துன்மார்க்கத்தோடும் பாவத்தோடும் சமாதானம் செய்ய எகூவிற்கு நேரமில்லை. நமது வாழ்விலும் எத்தனையோ முறை “சமாதானம், சமாதானம்” என்று கூறி பாவம் நம்மையும் நம்முடைய ஊழியங்களையும் தடுத்து நிறுத்தப் பார்க்கும். தேவ நீதியை நிலைநாட்டப் புறப்பட்ட எகூ பின்னிட்டுப் பார்க்காததுபோல, நாமும் தேவ காரியங்களை நோக்கி ஒடுகிற நாமும் போலியான சமாதானங்களினிமித்தம் நின்றுவிடக்கூடாது. பகற்காலம் இருக்குமட்டும் என்னை அனுப்பினவருடைய கிரியை செய்ய வேண்டும் என்று கூறி, தமது திருத்தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிற வரைக்கும் ஓயாது ஓடிய கிறிஸ்துவின் முன்மாதிரியை நினைத்து நாமும் நமக்கு அளிக்கப்பட்ட வேலையில் துரிதமாய் ஓடுவோம்.