March

கீழ்ப்படிதலில் காட்ட வேண்டிய அவசரம்

2025 மார்ச் 25 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:1-10

“தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்” (வச. 3).

தேவனுடைய பொறுமை முடிவற்றது அல்ல; அக்கிரமம் நிறைவடையும்போது, அவருடைய நியாயத்தீர்ப்பு மின்னல் வேகத்தில் இறங்குகிறது. பல ஆண்டுகளாக ஆகாபின் குடும்பம் செய்த அக்கிரமங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. எலிசா ஒரு வாலிபனான தீர்க்கதரிசியை அனுப்பி, எகூவை இரகசியமாக அபிஷேகம் செய்யப் பணிக்கிறான். இது, “மனுஷன் புகழும் புகழ்ச்சியை விட, தேவன் கொடுக்கும் அழைப்பே ஒருவனைத் தகுதிப்படுத்துகிறது” என்பதை நமக்கு உணர்த்துகிறது.

“தேவனுடைய அழைப்பு எப்போதும் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தொடங்குகிறது.” எகூ தன் சக அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தபோது, தீர்க்கதரிசி அவனை மட்டும் தனியாக ‘ஒரு அறைக்குள்ளே’ அழைத்துச் சென்றான். இது நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கு ஒரு பாடமாக இருக்கிறது. தேவன் நம்மோடு பேச விரும்பும்போது, உலகத்தின் இரைச்சலிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்து தனிமைக்கு அழைக்கிறார். புதிய ஏற்பாட்டில், “நீ ஜெபம்பண்ணும்போது உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவை அடைத்து…” (மத். 6:6) என்று இயேசு கூறியது போல, ஒரு மனிதனுடைய உண்மையான உருமாற்றம் தேவனோடு அவன் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவிலேயே நிகழ்கிறது.

“தீர்க்கதரிசி தைலத்தை ஊற்றியவுடன் கதவைத் திறந்து ஓடிவிட வேண்டும்” என்ற கட்டளை, தேவனுடைய காரியங்களில் இருக்க வேண்டிய வேகத்தையும் அவசரத்தையும் குறிக்கிறது. பாவத்தின் மீதான நியாயத்தீர்ப்பும், கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதும் தாமதிக்கப்படக் கூடாதவை. “அப்படியே அந்த வாலிபன்… ராமோத்திற்குப் போனான்” (வச. 4). கீழ்ப்படிதல் என்பது தர்க்கம் செய்வதல்ல, மாறாகச் செயல்படுவதாகும். மேலும் எகூவின் அபிஷேகம் கொண்டாட்டத்திற்குரியதோ அல்லது புகழ் பெறுவதற்கோ உரியதன்று. அது ஒரு பாரமான பொறுப்பு. அது ஒரு வம்சத்தின் முடிவையும், புதிய நீதியின் தொடக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான வழங்கப்பட்ட பொறுப்பு.

“யேசபேலின் உடல் யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்களால் தின்னப்படும்” (வச. 10) என்ற தீர்க்கதரிசனம் நமக்கு அதிர்ச்சியளிக்கலாம். “தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலா. 6:7) என்ற ஆவிக்குரிய விதியையே இது காட்டுகிறது. யேசபேலின் அதிகாரமும் அழகும் அவளைக் காக்க முடியவில்லை. தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தப்பாது. புதிய ஏற்பாட்டில் யேசபேலின் ஆவி குறித்து வெளிப்படுத்தின விசேஷம் 2:20ல் எச்சரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இது துன்மார்க்கத்திற்கு எதிரான தேவனுடைய மாறாத வெறுப்பைக் காட்டுகிறது.

நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் “ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாய்” (1 பேது. 2:9) அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம். எகூவைப் போல நாமும் நம்மைச் சுற்றியுள்ள பாவத்தின் செல்வாக்குகளை அழித்து, நீதியின் பாதையை உருவாக்குவதற்கான அழைப்பு இது. நம்முடைய அழைப்பு தனிப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அதன் தாக்கம் தேசம் தழுவியதாக அதாவது பலருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். நம்மிடமுள்ள ‘தைலக்குப்பியை’ (தேவ கிருபையை) கர்த்தருடைய சித்தத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம். தாமதியாமல் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அசுத்தங்களை அகற்ற நம்மை அர்ப்பணிப்போம்.