March

சமரசமில்லாத மனந்திரும்புதல்

2025  மார்ச் 27 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:21-29

“யோராம் எகூவைக் கண்டபோது: எகூவே, சமாதானமா என்று கேட்டான். அதற்கு அவன்: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய சூனியங்களும் இவ்வளவு அதிகமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்” ( வச. 22).

பாவத்தை அறிக்கை செய்யாமலும், அதை விட்டு விலகாமலும் தேவனோடு சமாதானமாக இருக்க முடியும் என்று எண்ணுவது மனித சுபாவத்தின் மிகப் பெரிய மாயையாகும். இஸ்ரவேலின் ராஜாவான யோராம், எகூவைச் சந்திக்க வந்தபோது “சமாதானமா?” என்று கேட்கிறான். ஆனால் எகூவின் பதில், தேவனுடைய நீதியின் இடிமுழக்கமாக வெளிப்படுகிறது. யேசபேலின் வேசித்தனங்களும் சூனியங்களும் (பாவங்களும் விக்கிரகாராதனையும்) மலிந்திருக்கையில் சமாதானத்திற்கு இடமேயில்லை. பாவத்தை விட்டுவிடாமல் சமாதானத்தை தேடுவது, நோய்க்கான மூல காரணத்தை அழிக்காமல் வலியை மட்டும் போக்க நினைப்பதற்குச் சமம். நம்முடைய இருதயத்தில் எந்தவொரு ‘யேசபேலுக்கும்‘ (ரகசிய பாவங்களுக்கும்) இடமளித்துவிட்டு, தேவ சமாதானத்தை நாம் ஒருக்காலும் அனுபவிக்க முடியாது.

யோராமும் எகூவும் சந்தித்த இடம் தற்செயலானதல்ல; அது நாபோத்தின் நிலம் (வச. 21). எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, ஆகாப் அநியாயமாய் நாபோத்தைக் கொன்று அபகரித்த அதே நிலத்தில், இப்போது அவனுடைய குமாரன் நியாயத்தீர்ப்பைச் சந்திக்கிறான். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கடிகாரம் மெதுவாக ஓடுவதுபோல் தோன்றலாம்; ஆனால் அது மிகச் சரியான நேரத்தையே காட்டும். பாவம் செய்யப்பட்ட அதே இடத்தில் தேவனுடைய நீதி நிறைவேறியது. தேவனுடைய நினைவாற்றல் எவ்வளவு துல்லியமானது என்பதை இது காட்டுகிறது. “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலா. 6:7) என்று புதிய ஏற்பாடு நம்மை எச்சரிக்கிறது.

எகூ தன் வில்லைத் தன் பலங்கொண்டமட்டும் நாணேற்றி, யோராமின் இருதயத்தை உருவச் செய்தது போல (வச. 24). பாவம் செய்த இருதயத்தை நோக்கி நமது அம்பு பாய வேண்டும். அதாவது ஆவிக்குரிய போரட்டத்தில் ஈடுபடுகிற நாம் நம்முடைய மாம்ச இச்சைகளை மேலோட்டமாகக் காயப்படுத்தாமல், அவற்றின் இருதயத்தை உருவக்குத்த வேண்டும். “பூமியிலுள்ள உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்” (கொலோ. 3:5) என்று புதிய ஏற்பாடு நமக்குக் கற்றுத்தரும் சத்தியத்தை எகூவின் இந்தச் செயல் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது. பாவத்தோடு நாம் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது; முழு பலத்தோடு அதை அழிக்க முற்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு நபர் யூதாவின் ராஜாவான அகசியா. அவன் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவனாக இருந்தும், ஆகாபின் குடும்பத்தோடு உறவுகலந்து, யோராமோடுகூட சேர்ந்து வந்ததால், அவனும் எகூவினால் வெட்டுண்டு மரித்தான் (வச. 27). அகசியாவின் மரணம், தவறான கூட்டணியின் அபாயகரமான விளைவைக் காட்டுகிறது. உலகத்தோடு சிநேகமாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். அநீதியோடே நீதிக்குச் சம்பந்தமேது? இருக்கும் வெளிச்சத்திற்கு ஐக்கியமேது? (2 கொரி. 6:14) என்ற வசனத்தின்படி, துன்மார்க்கரின் ஐக்கியம் நம்மை அழிவுக்கு நேராகவே நடத்தும். உலகத்தோடு எந்த சமரசமும் செய்யாமல், பாவத்தை வேரறுத்து, தேவன் நமக்கு நியமித்திருக்கும் பரிசுத்த ஓட்டத்தை எந்தவிதமான கறைதிரையுமின்றி ஓட இன்றே நம்மை அர்ப்பணிப்போம். கிருபையும் பரிசுத்தமும் நிறைந்த எங்கள் பரலோகப் பிதாவே! எங்களுடைய இருதயத்தில் எந்தவொரு மறைவான பாவத்திற்கும் இடமளிக்காமலும், அதனோடு சமரசம் செய்து போலியான சமாதானத்தை தேடாமலும், அவற்றை முழுமையாக அறிக்கையிட்டு விட்டுவிட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.