April

 மெய்யான அர்ப்பணிப்பும் சீர்ப்பொருந்துதலும்

2025 ஏப்ரல் 5 வேதபகுதி: 2 ராஜாக்கள் 12:1-13

“யோவாஸ் ஆசாரியர்களை நோக்கி: …ஆசாரியர்கள் …கர்த்தருடைய ஆலயத்தில் எங்கே பழுதுகாணப்படுகிறதோ, அந்தப் பழுதுகளைப் பார்க்கக்கடவர்கள் என்றான்” (வச. 4, 5).

யோவாஸ் தன் ஏழாவது வயதில் ராஜாவாகிறான். அவனுடைய ஆட்சிக்காலம் ஒரு சிறப்பான குறிப்புடன் தொடங்குகிறது: “ஆசாரியனாகிய யோய்தா தனக்குப் போதித்த நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்” (வச. 2). இது ஒருபுறம் ஆசீர்வாதமாகத் தெரிந்தாலும், இதில் ஒரு பெரிய ஆவிக்குரிய ஆபத்தும் மறைந்திருக்கிறது. யோவாஸின் விசுவாசம் தேவனிடத்தில் நேரடியாக வேரூன்றியிருக்கவில்லை; மாறாக, அவனது வழிகாட்டியான யோய்தாவின் ஆவிக்குரிய பெலத்தின்மேல் சார்ந்திருந்தது. மனிதர்களைச் சார்ந்திருக்கும் ‘கடன் வாங்கப்பட்ட விசுவாசம்’ ஒருபோதும் நிலைநிற்காது. யோய்தா மரித்தபின்பு யோவாஸ் விக்கிரக ஆராதனைக்கு விலகிப்போனான் என்பது வேதனைக்குரிய சரித்திரம். பிரியமானவர்களே, நமது பக்தியும் விசுவாசமும் பெற்றோரையோ, போதகரையோ அல்லது சூழ்நிலைகளையோ சார்ந்திருக்கிறதா? அல்லது கிறிஸ்துவோடு உள்ள தனிப்பட்ட உறவில் ஆழமாக வேரூன்றியிருக்கிறதா?

யோவாஸ் ஆலயத்தைப் புதுப்பிப்பதில் பெருவிருப்பம் காட்டினாலும், மேடைகள் இன்னும் தகர்க்கப்படவில்லை (வச. 3) என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஜனங்களின் ரகசிய பாவங்களை, அதாவது விக்கிரக ஆராதனையின் மேடைகளை முழுமையாக அழிக்கத் தவறிவிட்டான். இது முழுமையற்ற கீழ்ப்படிதலின் அடையாளமாகும். நமது வாழ்விலும் நாம் வெளியரங்கமாக தேவனை ஆராதிக்கலாம், நற்காரியங்களைச் செய்யலாம்; ஆனால் நமது இருதயத்தின் சில ‘மேடைகளில்’ உலக ஆசை, பெருமை, மன்னிக்காத சிந்தை போன்ற பழைய சுபாவங்களே ஆளுகை செய்ய நாம் அனுமதிக்கலாம். தேவன் நம்மில் பாதியல்ல, முழுமையான அர்ப்பணிப்பையே விரும்புகிறார்.

முந்தைய வருடங்களில் அத்தாலியாளின் கொடிய ஆட்சியினால் கர்த்தருடைய ஆலயம் முற்றிலும் பழுதடைந்திருந்தது. அதைச் சீர்ப்படுத்த யோவாஸ் கட்டளையிட்டான். ஆனால் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் ஆசாரியர்கள் அந்தப் பணியைச் செய்யாமல் தாமதித்தார்கள் (வச. 6). ஆவிக்குரிய சீர்கேடுகளைச் சரிசெய்வதில் தாமதம் காட்டினால், அது ஒருபோதும் தானாகச் சரியாகிவிடாது. மாறாக நம்மை மேலும் அழிவிற்கே நேராக நடத்தும். தாமதிக்கப்பட்ட கீழ்ப்படிதல், கீழ்ப்படியாமைக்கே சமம்!” பின்பு யோவாஸ் அவர்களைக் கடிந்துகொண்டு, பெட்டி ஒன்றைச் செய்து, காணிக்கைகளைச் சேகரித்து, வேலைக்காரர்களின் கைகளில் நேரடியாகக் கொடுத்தான். அந்தத் தச்சர்களும் சிற்பிகளும் “உண்மையாய் வேலை செய்தார்கள்” (வச. 15).

புதிய ஏற்பாட்டின்படி, நமது சரீரமே பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம் (1 கொரி. 3:16). உலகத்தின் போராட்டங்களாலும், சோர்வுகளாலும், பாவத்தாலும் இந்த ஆலயத்தில் பல பழுதுகள் ஏற்பட்டிருக்கலாம். உங்களது ஜெப ஜீவியத்தின் சுவர்கள் இடிந்திருக்கலாம்; வேத வாசிப்பு என்னும் பலிபீடம் உடைந்திருக்கலாம். ஆனால் நாம் இனியும் தாமதிக்காமல், மாபெரும் சிற்பியாகிய பரிசுத்த ஆவியானவரிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போது, அவர் நமது உடைந்த பகுதிகளைத் தம்முடைய கிருபையினால் சீர்ப்படுத்தி, மீண்டும் மகிமையோடு கட்டி எழுப்புவார்.

அன்பானவர்களே, உங்களது ஆவிக்குரிய உடைசல்களைச் சரிசெய்யப் பரிசுத்த ஆவியானவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுங்கள். “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று சாத்தான் சொல்லும் பொய்யை நம்பி உங்கள் ஆவிக்குரிய வாழ்வைப் பாழாக்கிவிடாதீர்கள். உடைந்துபோயிருக்கிற உங்கள் வாழ்வைக் கர்த்தர் தம்முடைய மகிமை விளங்கும் சாட்சியின் மாளிகையாக உறுதியாய்க் கட்டியெழுப்புதவற்கு ஆயத்தமாயிருக்கிறார்.