2025 ஏப்ரல் 4 வேதபகுதி: 2 ராஜாக்கள் 11:12-21
“அவன் ராஜாவின் குமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி, கைகொட்டி: ராஜா வாழ்க என்றார்கள்” (2 ராஜாக்கள் 11:12).
ஆறு வருடங்களாகத் தேசத்தைக் கவ்வியிருந்த பாவ இருள் விலகும் நேரம் வந்தது. ஏழு வயதான யோவாஸ் ராஜா சிம்மாசனத்தில் அமர்த்தப்படுகிறான். பிரதான ஆசாரியனாகிய யோய்தா, அவனுக்கு வெறும் அதிகாரத்தின் அடையாளமான ‘கிரீடத்தை’ மட்டும் சூட்டவில்லை; மாறாக, தேவனுடைய வார்த்தையாகிய ‘சாட்சியின் ஆகமத்தையும்’ அவன் கைகளில் கொடுக்கிறான். ஒரு ராஜாவுக்குக் கிரீடம் மட்டும் போதாது; அவனுடைய அதிகாரம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையே சாட்சியின் ஆகமம் உணர்த்துகிறது. நமது ஆவிக்குரிய ஜீவியத்திலும், இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வின் ராஜாவாக முடிசூட்டும்போது, அவருடைய வார்த்தைக்கு (வேதாகமத்திற்கு) முழுமையாகக் கீழ்ப்படிய நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஆலயத்தில் எழுந்த கெம்பீர சத்தத்தைக் கேட்ட கொடிய ராணியாகிய அத்தாலியாள், ஓடிவந்து “துரோகம், துரோகம்!” என்று கூக்குரலிட்டாள் (வச. 14). ஆறு வருடங்களாகச் சிம்மாசனத்தைத் திருடி, அநியாயமாக ஆட்சி செய்தவளே, உண்மையான ராஜா முடிசூட்டப்படும்போது மற்றவர்களைப் பார்த்துத் துரோகி என்று கத்துவது எவ்வளவு பெரிய முரண்பாடு!” இது நமது மாம்சத்தின் சுபாவத்திற்கும் சாத்தானுக்கும் மிகச் சரியான அடையாளமாக இருக்கிறது. ஆம், பல ஆண்டுகளாகப் பாவமும் மாம்ச இச்சைகளும் ஆக்கிரமித்திருந்த நமது இருதயத்தில், மெய்யான ராஜாவாகிய கிறிஸ்து ஆளுகை செய்யத் தொடங்கும்போது, நமது மாம்சமும் சாத்தானும் அதை எதிர்த்துப் பெரும் கூக்குரலிடும். ஆனால், அந்த இருளின் ஆளுகை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பதே தேவ சித்தம்.
அத்தாலியாள் அழிக்கப்பட்ட பிறகு, யோய்தா தேசத்து ஜனங்களுக்கும் தேவனுக்கும் இடையே ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறான். அதன் தொடர்ச்சியாக, ஜனங்கள் அனைவரும் பாகாலின் கோவிலுக்குப் போய் அதைத் தகர்த்து, விக்கிரகங்களை உடைத்துப்போடுகிறார்கள் (வச. 17-18). இயேசு கிறிஸ்து நமது இருதயத்தின் சிம்மாசனத்தில் அமரும்போது, அங்கே பாகாலுக்கு (உலகத்தின் விக்கிரகங்களுக்கு) எந்த இடமும் இருக்க முடியாது. நமது வாழ்வில் நாம் ரகசியமாக ஆராதிக்கும் பெருமை, பண ஆசை, உலக மோகம் போன்ற எல்லா விக்கிரகங்களும் சுக்குநூறாகத் தகர்க்கப்பட வேண்டும். புதிய ஏற்பாட்டில் பவுல், “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியீர்களா?” (1 கொரி. 3:16) என்று கேட்பதை இங்கே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பிரியமானவர்களே, உண்மையான ராஜா சிம்மாசனத்தில் அமர்ந்ததும், விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டதும் என்ன நடந்தது தெரியுமா? “தேசத்து ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து, நகரம் அமைதலாயிருந்தது” (வச. 20). மெய்யான ராஜாவாகிய கிறிஸ்து உங்கள் இருதயத்தை முழுமையாக ஆளுகை செய்ய அனுமதிக்கும்போது மட்டுமே, உங்கள் வாழ்வில் உண்மையான அமைதியும் விடுதலையும் பிறக்கும். இன்று உங்கள் இருதயத்தில் யாருடைய ஆளுகை நடைபெறுகிறது? உலகத்தின் சத்தங்களா? மாம்சத்தின் இச்சைகளா? அவற்றை இன்றே அகற்றிவிட்டு, இயேசு கிறிஸ்துவை சிம்மாசனத்தில் ஏற்றுங்கள். அப்போது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).