இறைத்திட்டம்

ஜனவரி 29

ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது (மத்.11:26)

பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும், அவர்கள் தெரிந்தெடுக்காதவை சில இடம்பெற்றிருக்கும். அவற்றை உதறித்தள்ள அவர்கள் முயற்சிகள் செய்திருந்தாலும், அவர்களை விட்டு நீங்காமல் இறுகப்பற்றிக்கொண்டிருக்கும். ஒருவேளை, அது உடல் பாதிப்பாக அல்லது உடல் ஊனமாக இருக்கலாம். அல்லது அது நாட்டப்பட்ட நோயாக, நம்மை விட்டு நீங்காமல் தொல்லை தரக்கூடியதாக இருக்கலாம். இவையாவும் விரும்புத்தகாத விருந்தினர்களே!

ஆகவே பெரும்பாலோர் தோல்வியுற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். எந்த நிலையில் தாங்கள் இருந்திருக்கவேண்டும் என்ற கற்பனையில் அவர்கள் வாழ்வார்கள். சுற்று உயரமாக வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. பார்ப்பதற்கு அழகாகவோ, வேறொரு குடும்பத்திலோ, வேறொருஇனத்திலோ பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விளையாட்டு வீரனாகவோ, நல்ல உடல்வலிமை பெற்றவராகவோ இருந்திருக்கலாமே. இவ்வித எண்ணம் பலரைப் பற்றிக் கொள்கிறது.

மாற்ற இயலாதவைகளை ஏற்றுக்கொள்வது மிகுந்த சமாதானத்தை அளிக்கும் என்னும் பாடத்தை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நம் எவ்வாறு இருக்கிறோம் என்னும் நிலை தேவனுடைய கிருபையாக இருக்கிறது. அளவிட முடியா அன்பினாலும் ஞானத்தினாலும் நம்முடைய வாழக்கையை அவர் திட்டமிட்டுள்ளார். அவர் காண்கிற வண்ணமாக நாம் காண்கிறவாகளாக இருப்போமென்றால், அவர் எவ்வாறு செய்திருக்கிறாரோ அவ்வாறே நாமும் செய்ய விளைவோம். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது என்று சொல்லக்கடவோம்.

இன்னும் ஒரு படி முன்னேறிச் செல்வோம். வேறு என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தோடு இதனை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அன்பின் தேவனால் இவை அனுமதிக்கப்பட்டுள்ளன என்ற அறிவோடு,அவரைத் தொழுதுகொள்வதற்கும், நாம் களிகூருவதற்கும் காரணமாக மாற்றிக்கொள்ள வேண்டும். தன் சரீரத்தில் உள்ள முள் நீங்கவேண்டுமென்று பவுல் மும்முறை மன்றாடினார். அந்த முள்ளைத் தாங்கிக் கொள்வதற்கான கிருபையைத் தருவதாக தேவன் வாக்குரைத்தபோது, அப்போஸ்தலன் வியந்து, „ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோசமாய் மேன்மைபாராட்டுவேன்“ என்றுரைத்தார் (2.கொரி.12:9).

சூழ்நிலைகள் யாவும் நமக்கு எதிராக உள்ளன என்று தோன்றும் தருணங்களில் நாம் களிகூர்ந்தவர்களாக, தேவனை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகளே அவை என்று எண்ணிச் செயல்புரிவோமானால் அது நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை எடுத்துரைக்கும். தன் கண் பார்வையை இழந்த ஃபேன்னி கிராஸ்பி அம்மையார், இதனைத் தம் இளவயதில் கற்றுக்கொண்டார். அவர் தமது எட்டுவயதில் எழுதிய பாடல்:

கண் பார்வை இலையெனினும் களிகூரும் பிள்ளைநான்
மண்ணுலகு வாழ்வுதனில் போதுமென்று வாழந்திடுவேன்
மற்றவர்கள் அறிந்திராத நற்பேறனைத்தும் பெற்றேன்
ஆழுகையில்லை, புலம்பலில்லை, மானிடரே அறிந்திடுவீர்!