தேவனுடைய பதிவேடு

ஜனவரி 22

அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை. (எண்.23:21)

எல்லாவற்றையும் காண்கிற தேவன் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலிலே அக்கிரமத்தைக் காண்கிறதில்லை என்று, கூலிக்கு முன்னுரைப்போன் பாலாம் உரைத்தபோது, ஒரு குறிப்பிடத்தக்க உண்மையை விளம்பினான். அந்நாளில் இஸ்ரவேலுக்கு எது பொருத்தமுடையதாக இருந்ததோ, இந்நாளில் அது விசுவாசிகளுக்கு வியத்தகுவகையில் பொருத்தமுடையதாய் இருக்கிறது. நித்திய மரணமாகிய ஆக்கினையைச் செலுத்தத்தக்கதாக, ஏதொரு பாவத்தையும் ஒரு விசுவாசியினிடத்தில் தேவன் காண்கிறதில்லை. விசுவாசி கிறிஸ்துவுக்குள் இருக்கிறான். கிறிஸ்துவின் நிறைவோடும், தகுதியோடும் அவன் தேவனுக்கு முன்னர் நிற்கிறான் என்பதே இதன் பொருளாகும். தமக்குச் சொந்தமான இனிய குமாரனை ஏற்றுக்கொள்கிறபடியே, விசுவாசியையும் அவர் எற்றுக்கொள்கிறார். இது அவர் தம் விருப்பத்தினால் அருளிய பதவியாகும். இந்நிலையை இன்னும் மேலானதாக நம்மால் ஆக்கமுடியாது. இந்நிலைக்கு முடிவில்லை. எவ்வளவுதான் தேடிப்பார்த்தாலும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதனுக்கு எதிராக ஏதொரு குற்றத்தையும் தேவனால் சுமத்தமுடியாது.

இதனை ஒரு நிகழ்சியின் வாயிலாக விளக்கிக் கூறலாம். ரோல்ஸ் ராய்ஸ் என்னும் புகழ்பெற்ற வாகனத்தில் ஒரு ஆங்கிலேயன், பிரஞ்சு நாட்டிற்கு தன் விடுமுறையைக் கழிக்கச் சென்றான். அவனுடைய பயணத்தின்போது அந்த வண்டியின்பின் அச்சு முறிந்து போயிற்று. அங்கிருந்த நிறுவனத்தினால் அதனைப் பழுது பார்க்க இயலாது போயிற்று. இங்கிலாந்திற்குத் தொலைபேசியில் செய்தி அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தார் உடனடியாகப் புதிய அச்சையும் இரண்டு வல்லுனர்களையும் அனுப்பினர். வாகனம் சீராக்கப்பட்டது. ஆங்கிலேயன் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு பின்பு தாய்நாடு திரும்பினான். சில மாதங்கள் கழித்தும் வாகனம் பழுதுபார்க்கப்பட்டதற்கான பணச்செலவு கேட்கப்படாததால், அவன் நிறுவனத்திற்கு அந் நிகழ்ச்சியைக் குறித்து எழுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக வேண்டினான். சிறிது நாட்களுக்குள்ளாக நிறுவனத்திலிருந்து பதில் வந்தது. எங்களுடைய பதிவேடுகள் அனைத்தையும் தேடிப் பார்த்தோம், வாகனத்தின் அச்சு அடைந்ததாக எந்தக் குறிப்பும் பதிவாகவில்லை.

தமது பதிவேட்டில் கவனத்தோடு தேடிப் பார்த்தாலும், விசுவாசியை நரகத்திற்கு அனுப்பக்கூடிய தீர்ப்பை வழங்கத்தக்க எந்தவொரு பாவத்தையும் தேவனால் காணமுடியாது. தமக்குப் பிரியமானவருக்குள்ளாக விசுவாசி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறான். தேவனுடைய நீதியால் உடுத்திவிக்கப்பட்டுள்ளான். தேவனுக்கு முன்னர் முற்றிலும் நிறைவான ஸ்தானத்தை அவன் பெற்றுள்ளான். முதலில் என் இரட்சகரின்பால் சென்று, தேவனுடைய கணக்கின்படி அவரை ஆராய்ந்து பாருங்கள். அவரிடம் ஏதேனும் குற்றம் இருக்கிறதென்று மெய்ப்பியுங்கள். நான் தூய்மையற்றவன் என்று பின்னர் கூறுங்கள், என்று நம்பிக்கையுடன் வெற்றி முழக்கமிடுவோம்.