March

கத்தரிக்கும் தொழுவத்தில் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு

2025 மார்ச் 30 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:12-17

“அவன் எழுந்து சமாரியாவுக்குப் புறப்பட்டுப்போனான்; வழியிலே ஆட்டுமயிர்கத்தரிக்கிறவர்களின் தொழுவத்திலே அவன் வந்தபோது… யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரைக் கண்டு: நீங்கள் யார் என்று கேட்டான் (வச. 12,13).

பாவத்தின் வேர்கள் எவ்வளவு தூரம் பரவியிருந்தாலும், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோடாரி அதைத் தேடிச்சென்று வெட்டி வீழ்த்தும் என்பதற்கு இந்தப் பகுதி ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். முந்தைய அதிகாரங்களில், ஆகாபின் குடும்பத்தோடு உறவு கொண்டாடியதால் அகசியா தன் ஜீவனை இழந்ததைப் பார்த்தோம். இப்போது, அதே நச்சு உறவின் காரணமாக அவனுடைய சகோதரர்கள் நாற்பத்திரண்டு பேரும், தாங்கள் எங்கே, எதற்காகப் போகிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் அழிவை நோக்கி நடந்து சென்றார்கள். ஆகாபின் பாவத்தின் நஞ்சு யூதாவின் வம்சத்தையும் எவ்வளவு ஆழமாகப் பீடித்திருந்தது என்பதை இது காட்டுகிறது; தேவனுடைய நியாயத்தீர்ப்பு தேசங்களைப் பார்ப்பதில்லை, பாவத்தின் வேர்களையே பார்க்கிறது என்கிறார். “எவ்விதமான பொல்லாங்கைவிட்டும் விலகுங்கள்” (1 தெச. 5:22) என்ற புதிய ஏற்பாட்டு சத்தியத்தை மீறும் எவரும், இந்த ஆட்டுமயிர்கத்தரிக்கும் தொழுவத்தில் நின்ற அகசியாவின் சகோதரர்களைப் போலவே திடீர் அழிவைச் சந்திக்க நேரிடும்.

இந்தக் கொடூரமான அழிவுக்குப் பிறகு, யெகூவின் பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு நிகழ்கிறது. அவன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபைக் சந்தித்து, “என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாயிருக்கிறதுபோல, உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா?” (வச. 15) என்று கேட்கிறான். யோனதாப் ஒரு பக்தியுள்ள மனிதன். யெகூவுக்குத் தனது இரத்தக் களரியான செயல்களை நியாயப்படுத்த, ஒரு பரிசுத்தவானின் அங்கீகாரம் தேவைப்பட்டது. அநேகர் தங்கள் சொந்தப் பெருமைக்காகவும் சுயநலத்திற்காகவும் மதத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். யெகூவுக்குத் தேவன்மேல் இருந்ததைவிட, சிம்மாசனத்தின் மேலேயே அதிக வைராக்கியம் இருந்தது.

தொடர்ந்து யெகூ அவனிடம், “நீ என்னோடேகூட வந்து, கர்த்தருக்காக எனக்கு இருக்கிற வைராக்கியத்தைப் பார்” (வச. 16) என்று கூறித் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான். ஆவிக்குரிய வாழ்வில் இது ஒரு மிகப்பெரிய ஆபத்தான நிலையாகும். மெய்யான பக்தி தன்னைத்தானே விளம்பரப்படுத்தாது. யெகூவின் வைராக்கியம் மாம்சத்திற்குரியது; அது மனிதர்களின் கைதட்டலை எதிர்பார்த்தது. புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (மத். 6:1) என்று பரிசேயரின் வெளிவேஷத்தைக் குறித்து எச்சரித்ததே யெகூவின் வாழ்விலும் நிழலாடுகிறது. யெகூ தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றினான், ஆனால் அவனது இருதயம் தேவனோடு செம்மையாய் இல்லை.

இன்று, இந்தத் தியானம் இரண்டு கேள்விகளை நமக்கு முன்வைக்கிறது. முதலாவது, அகசியாவின் சகோதரர்களைப் போல, தேவனால் சபிக்கப்பட்ட உலகத்தின் சிற்றின்ப உறவுகளைத் தேடி நாம் அறியாமலோ அல்லது அலட்சியமாகவோ பயணம் செய்துகொண்டிருக்கிறோமா? உலகத்தோடு நாம் கொள்ளும் சமரசம் நம்மை ‘கத்தரிக்கும் தொழுவமாகிய’ நியாயத்தீர்ப்பின் இடத்திற்கே இட்டுச் செல்லும். இரண்டாவது, கர்த்தருக்காக நாம் செய்யும் காரியங்களில் யெகூவைப் போல ‘என்னை வந்து பாருங்கள்’ என்ற சுய விளம்பரம் ஒழிந்திருக்கிறதா? மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக நாம் ஆவிக்குரிய வேடமிடுகிறோமா? “நல்விஷயத்தில் எப்பொழுதும் வைராக்கியங்கொண்டிருக்கிறது நல்லதுதான்” (கலா. 4:18), ஆனால் அது கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்ட தாழ்மையான வைராக்கியமாக இருக்க வேண்டும். மனிதர்களின் இரதங்களில் ஏறிப் பெருமையடைவதை விட, தேவனுடைய சமூகத்தில் மறைந்திருந்து சேவிப்பதே உண்மையான ஆவிக்குரிய வாழ்வாகும்.