April

ஆசீர்வாதத்தின் உச்சமும் பெருமையின் வீழ்ச்சியும் 

2025 ஏப்ரல் 12 வேதபகுதி: 2 ராஜாக்கள் 15:1-12

“கர்த்தர் ராஜாவை வாதித்ததினால், அவன் மரணமடையும் நாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனையை விசாரித்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்து வந்தான்” (5).

அசரியா தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்று வேதம் சாட்சியளிக்கிறது. அவனுடைய ஆட்சியின் தொடக்கக் காலம் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. அவன் பலப்படும்வரை கர்த்தர் அவனுக்கு ஆச்சரியமான விதத்தில் உதவிசெய்தார். ஆனால், அதே ஆசீர்வாதமும் வல்லமையுமே அவனுடைய வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. ஆவிக்குரிய வாழ்வில் பல நேரங்களில், நாம் பலவீனமாயிருக்கும்போது தேவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம்; ஆனால், ஆசீர்வாதங்கள் பெருகி நாம் ‘பலப்படும்போது’, நமது இருதயம் மேட்டிமையடைகிறது. நீண்ட கால வெற்றியும், தொடர்ச்சியான செழிப்பும் ஒரு மனிதனின் இருதயத்தில் ஆவிக்குரிய அலட்சியத்தையும் பெருமையையும் மிக எளிதாக விதைத்துவிடும்.

அசரியாவின் பெருமை அவனைக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் துணிகரமாகச் சென்று, ஆசாரியர்கள் மட்டுமே செய்யவேண்டிய தூபங்காட்டும் பணியைச் செய்யத் தூண்டியது. இதன் விளைவாக, கர்த்தர் அவனை வாதித்தார்; அந்த மாபெரும் ராஜா தன் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாகத் தனித்து ஒரு வீட்டில் அடைக்கப்பட்டான். எவ்வளவு நேர்த்தியாகவும் வல்லமையாகவும் தொடங்கிய ஒரு ஜீவியம், ஒரே ஒரு துணிகரமான மீறுதலினால், குஷ்டரோகத்தின் இருண்ட நிழலிலும் தனிமையிலும் முடிவடைந்தது. இது எப்பேர்ப்பட்ட துயரம்! தேவன் எவ்வளவுதான் நம்மை உயர்த்தினாலும், அவருடைய பரிசுத்தத்திற்கும் அதிகாரத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய ஆவிக்குரிய எல்லைகளை நாம் ஒருபோதும் மீறக்கூடாது என்பதை இது உணர்த்துகிறது. தேவன் மனிதனுடைய கடந்தகால நற்கிரியைகளுக்காக அவனுடைய தற்போதைய துணிகரப் பாவங்களை ஒருபோதும் கண்டும் காணாமல் விட்டுவிடமாட்டார்; அவருடைய பரிசுத்தம் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காதது.

இஸ்ரவேலின் ராஜாவான சகரியா கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, ஆறு மாதங்களுக்குள் சதியினாலே கொல்லப்படுகிறான். இதன்மூலம் யெகூவின் சந்ததியாருக்குக் கர்த்தர் உரைத்த வார்த்தை (வச. 12) துல்லியமாக நிறைவேறுகிறது. தேவனுடைய வார்த்தை ஒருபோதும் வீண்போகாது என்பதையும், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு பாரபட்சமற்றது என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல், தேவன் தனக்களித்த அளவற்ற வெளிப்பாடுகளினாலும் வெற்றிகளினாலும் பெருமையடையாதபடிக்கு, மிகவும் எச்சரிக்கையாயிருந்ததைக் காண்கிறோம். “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரி. 9:27) என்று அவர் கூறுகிறார். நாம் ஆவிக்குரிய ஓட்டத்தை எவ்வளவு சிறப்பாகத் தொடங்குகிறோம் என்பதை விட, எவ்வளவு உண்மையோடும் நடுக்கத்தோடும் முடிக்கிறோம் என்பதே மிக முக்கியமானது.

பிரியமானவர்களே, இன்று உங்கள் ஆவிக்குரிய நிலைமை என்ன? கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, ஊழியத்திலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ உங்களை உயர்த்தியிருக்கலாம். அந்த வெற்றிகள் உங்களைத் தாழ்மைப்படுத்துகிறதா? தேவன் உங்களுக்கு அமைத்துக் கொடுத்த எல்லையைத் தாண்டி, சுய புத்தியின்மேல் சாயாதீர்கள். உங்களுடைய கடந்தகால ஆவிக்குரிய வெற்றிகளை வைத்துக்கொண்டு இன்றைய தவறுகளை ஒருபோதும் நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாம். கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், மிகுந்த தாழ்மையோடும் அவரைச் சேவியுங்கள். நன்றாய்த் தொடங்கிய உங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தை, நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கும் நாள்வரை எந்தக் கறையுமின்றி, முற்றுமுழுதான அர்ப்பணிப்போடு ஓடி முடிக்க இன்றே உங்களைக் கர்த்தருடைய கிருபையின் கைகளில் முழுமையாக ஒப்புக்கொடுங்கள்!