April

தேய்ந்துபோன ஆசீர்வாதங்கள்

2025 ஏப்ரல் 2 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:32-36

“அந்நாட்களிலே கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து…” (வச. 32).

யெகூவின் அரைகுறை கீழ்ப்படிதல் கசப்பான பல விளைவுகளை உண்டாக்கியது. தேசம் செழிப்படைவதற்குப் பதிலாக, கர்த்தர் இஸ்ரவேலைக் ‘குறைந்துபோகப்பண்ணினார். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, பாலும் தேனும் ஓடும் தேசமாக விரிவடைய வேண்டிய ஒரு தேசம், தன் பாவத்தின் காரணமாகத் தன் எல்லைகளை இழக்கத் தொடங்கியது. தேவன் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் எல்லைகளை, அவர்களுடைய கீழ்ப்படியாமையின் காரணமாக அவர்தாமே சுருக்கினார்; பாவம் எப்போதும் நம்முடைய வாழ்வைச் சுருக்கிவிடும் என்பதை மறந்துபோக வேண்டாம்.

இஸ்ரவேலர் யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கீலேயாத், பாசான் போன்ற செழிப்பான மேய்ச்சல் நிலப்பகுதிகளைச் சீரிய ராஜாவாகிய ஆசகேலிடம் இழந்தார்கள் (வச. 33). யெகூ தன் பாவங்களை விட மறுத்ததனால், தேவன் ஆசகேலைத் தமது தண்டனையின் கோலாகப் பயன்படுத்தினார். நாம் தேவனோடு ஒத்துழைக்க மறுக்கும்போது அவர் நம்முடைய சத்துருக்களைக் கொண்டே நம்மைச் சிட்சிக்கிறார். நாம் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படியத் தவறும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் செழிப்பான பகுதிகளைப் பிசாசு ஆக்கிரமித்துக்கொள்கிறான். நம்முடைய ஜெப ஜீவியம், சமாதானம், சந்தோஷம் ஆகிய எல்லைகள் படிப்படியாகச் சுருங்கத் தொடங்கிவிடும்.

மாம்சத்திற்குரிய வைராக்கியத்துடன் நாம் ஒரு பெரிய காரியத்தைத் தொடங்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையில்லாமல் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. யெகூவின் வாழ்வு ஒரு பெரும் வெற்றியுடன் தொடங்கி, எல்லைகளை இழக்கும் அவலத்தோடு முடிவடைடந்தது. புதிய ஏற்பாட்டில், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்“ (யோவான் 10:10) என்று இயேசு கூறினார். சாத்தான் நம்முடைய ஆவிக்குரிய எல்லைகளைச் சுருக்கி நம்மை அழிக்கப் பார்க்கிறான்; ஆனால் கிறிஸ்துவோ நம்மைப் பரிபூரணப்படுத்த விரும்புகிறார். “நாம் செய்தவைகளை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (2 யோவான் 1:8) என்ற அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தை இங்கே நமக்கு நினைவூட்டப்படுகிறது.

கர்த்தர் நம்மை ஆவிக்குரிய ரீதியிலோ, குடும்பத்திலோ ‘குறைந்துபோகப் பண்ணுகிறாரோ’ என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அப்படியானால், நாம் இன்னும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் ‘பொற்கன்றுக்குட்டிகள்’ என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அரைகுறையான அர்ப்பணிப்பு நம்முடைய ஆசீர்வாதங்களைத் தேய்ந்துபோகச் செய்யும். நம்முடைய இழப்புகளைச் சரிசெய்ய வேண்டுமானால், நம்மைப் பரிபூரணப்படுத்தும் கர்த்தரிடத்தில் முழுமையான கீழ்ப்படிதலோடு திரும்புவதே ஒரே வழியாகும். நம் இருதயத்தின் சிங்காசனத்தை முழுமையாகக் கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுப்போம்; கர்த்தருக்குள் நமது எல்லைகள் மீண்டும் விசாலமாகட்டும்!

அன்புள்ள பரலோகப் பிதாவே, என் கீழ்ப்படியாமையினால் சுருங்கிப்போன என் ஆவிக்குரிய எல்லைகளையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் உமது கிருபையினால் மீண்டும் எனக்குத் தந்தருளும். இனி நான் உலகத்தோடும் என் சுயத்தோடும் சமரசம் செய்துகொள்ளாமல், என் முழு இருதயத்தையும் உமக்கே முழுமையாகச் சமர்ப்பிக்கிறேன். என் இருதயத்தின் சிங்காசனத்தில் நீரே வீற்றிருந்து என்னை ஆளுகை செய்யும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.