April

அரைகுறை கீழ்ப்படிதலும் பிளவுபட்ட இருதயமும்

2025 ஏப்ரல் 1 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:29-31

“ஆகிலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்க எச்சரிக்கையாயிருக்கவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின எரொபெயாமுடைய பாவங்களை விட்டு அவன் விலகவுமில்லை” (வச. 31).

யெகூவின் வாழ்க்கை, ஆவிக்குரிய ஜீவியத்தில் அரைகுறையான கீழ்ப்படிதல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். அவன் ஆகாபின் வம்சத்தை அழித்தான்; பாகாலின் வழிபாட்டை இஸ்ரவேலிலிருந்து முற்றிலுமாக வேரறுத்தான். அவனுடைய இந்தச் செயல்களைக் கர்த்தர் மெச்சி, அவனுக்குப் பலனையும் அளித்தார் (வச. 30). ஆனால், வேதாகமம் “ஆகிலும்” என்ற ஒரு வார்த்தையோடு அவனது வீழ்ச்சியைப் பதிவு செய்கிறது. யெகூ மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்த பாகால் வழிபாட்டை அழித்தான். ஆனால், அரசியல் ரீதியாகத் தனக்கு வசதியாயிருந்த யெரோபெயாமுடைய பொற்கன்றுக்குட்டிகளின் வழிபாட்டை அவன் அழிக்கவில்லை. அவனது கீழ்ப்படிதல் வசதியை அடிப்படையாகக் கொண்டதே தவிர, அர்ப்பணிப்பை அல்ல.

யெகூ ஏன் அந்தப் பொற்கன்றுக்குட்டிகளை அழிக்கவில்லை? மக்கள் எருசலேமுக்கு ஆராதிக்கச் சென்றால், தன் ராஜ்யம் பறிபோய்விடும் என்ற சுயநலமே அதற்குக் காரணம். மற்றவர்களின் பாவங்களைக் கடிந்துகொள்ளும் மனிதன், தன் சொந்த இருதயத்தின் இச்சைகளைச் செல்லமாக வளர்க்கிறான். யெகூவின் கைகள் கர்த்தருடைய வேலையைச் செய்தன; ஆனால் அவனுடைய இருதயம் கர்த்தருக்குச் சொந்தமாக இல்லை. கர்த்தர் நம்முடைய திறமைகளை விட, நம்முடைய ‘முழு இருதயத்தையே’ முதலாவது கேட்கிறார். ஒருவன் ஒரு பாவம் செய்யும்போது அதை நியாயப்படுத்துவானானால், அவனுக்குள் இருக்கும் மெய்யான பக்தியின் ஆணிவேர் அறுபட்டுப்போயிற்று என்று பொருள்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் வெளிவேஷமான வைராக்கியத்திற்கும், உள்ளான பரிசுத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஆர்தர் பிங்க் என்பார் மிக ஆழமாகப் பதிவு செய்கிறார்: “யெகூவின் வைராக்கியம் தேவனுக்காக அல்ல, தன் சொந்த சிம்மாசனத்தை நிலைநிறுத்துவதற்காகவே இருந்தது. அவன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடக்கத் தன் இருதயத்தைச் செலுத்தவில்லை.” புதிய ஏற்பாட்டில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” (மாற்கு 12:30) என்று கட்டளையிடுகிறார். தேவனுக்குத் தேவை 100 சதவீத அர்ப்பணிப்பு. 99 சதவீத கீழ்ப்படிதலும் கூட தேவனுடைய பார்வையில் கீழ்ப்படியாமைதான். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது” (மத். 6:24) என்ற சத்தியம் யெகூவின் வாழ்வில் துயரமான முறையில் மெய்யாகிறது.

நாம் யெகூவைப் போலச் சில ‘பாகால்களை’ (குடி, விபச்சாரம், கொலை போன்ற வெளிப்படையான பெரிய பாவங்களை) நம் வாழ்விலிருந்து அழித்திருக்கலாம். ஆனால், நமக்கு வசதியான, நமக்குப் பிடித்தமான சில ‘பொற்கன்றுக்குட்டிகளை’ (பெருமை, கோபம், பண ஆசை, மன்னிக்காத சிந்தை, உலக ஆசை) இருதயத்தின் ஓரத்தில் பத்திரமாக வைத்திருக்கின்றோமா? சில பாவங்களை விட்டுவிட்டு, சில பாவங்களை மட்டும் அரவணைப்பது ஆபத்தான மாயமாலமாகும். “முழு இருதயத்தோடும் இருக்க எச்சரிக்கையாயிருக்கவில்லை” என்ற வார்த்தை, ஆவிக்குரிய விழிப்புணர்வு இல்லாததையே குறிக்கிறது. நமது இருதயம் பிளவுபடாமல், முழுமையாகக் கிறிஸ்துவுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். நம்மை நாமே ஆராய்ந்து, உள்ளத்திலிருக்கும் பொற்கன்றுக்குட்டிகளைச் சிலுவையின் அடியில் உடைத்தெறிவோம்; முழு இருதயத்தோடும் தேவனைப் பின்பற்றுவோம்.