March

பாகாலின் அழிவும், மாம்சத்திற்குரிய வைராக்கியமும்

2025 மார்ச் 31 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:18-28

“அப்படியே யெகூ சகல ஜனங்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலுக்குக் கொஞ்சமாய ஊழியஞ்செய்தான்; யெகூ அவனுக்கு மிகுதியாய் ஊழியஞ்செய்வான்” (வச. 18).

இஸ்ரவேல் தேசத்திலிருந்து பாகால் வழிபாட்டை முற்றிலுமாக வேரறுக்க யெகூ எடுத்த ஒரு தந்திரமான நடவடிக்கையை இந்தப் பகுதியில் காண்கிறோம். யெகூ தன்னை ஒரு தீவிரமான பாகால் பக்தனாகக் காட்டிக்கொண்டு, இஸ்ரவேலிலுள்ள சகல பாகாலின் தீர்க்கதரிசிகளையும், ஆசாரியர்களையும் ஒரு மாபெரும் பலிக்காக அழைத்தான். அவனுடைய நோக்கம் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவது என்றாலும், அவன் தேர்ந்தெடுத்த வழிமுறை ‘பொய்’ மற்றும் ‘வஞ்சகம்’ ஆகும். தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற, யெகூ பிசாசின் ஆயுதமாகிய பொய்யைப் பயன்படுத்தினான். தேவன் தமக்குச் சித்தமானதைச் செய்ய குறைபாடுள்ள மனிதர்களையும் பயன்படுத்துவார், ஆனால் அவர் ஒருபோதும் பாவத்தை அங்கீகரிப்பதில்லை. “நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வது” (ரோமர் 3:8) பெரிய தப்பிதம் என்பதை பவுல் புதிய ஏற்பாட்டில் எச்சரிக்கிறார்.

பாகாலின் ஆசாரியர்கள் அனைவரும் ஆலயத்திற்குள் வந்தவுடன், யெகூ அவர்களுக்குப் பிரத்தியேகமான ஆடைகளைக் கொடுத்தான் (வச. 22). தாங்கள் கௌரவிக்கப்படுகிறோம் என்று அவர்கள் பெருமிதம் கொண்டார்கள். ஆனால், அந்த ஆசாரியர்கள் பெருமையோடு அணிந்து கொண்ட ஆடைகளே, அவர்களைக் கொலையாளிகளுக்கு அடையாளம் காட்டும் மரண ஆடைகளாக மாறின. உலகத்தின் பாவச் சிற்றின்பங்களும், அந்தகாரத்தின் அந்தஸ்துகளும் இன்று மனிதர்களுக்கு ஒரு பெருமையின் ஆடையாகத் தோன்றலாம். ஆனால் மெய்யாகவே அவை அழிவின் அடையாளங்களே. மாம்சத்திற்குரிய வைராக்கியம் தேவனுடைய வேலையைச் செய்யலாம், ஆனால் அது பிசாசின் வழியிலேயே அதைச் செய்கிறது. நல்நோக்கங்கள் தவறான வழிமுறைகளை ஒருபோதும் நியாயப்படுத்தாது.”

எல்லாரும் உள்ளே வந்ததை உறுதிசெய்த பின்பு, யெகூ தன் போர்வீரர்களை அனுப்பி ஒருவனையும் உயிரோடு விடாமல் எல்லாரையும் வெட்டிப்போட்டான். பாகாலின் சிலைகளை உடைத்து, அந்த ஆலயத்தை இடித்து, அதை ஒரு கழிப்பறையாக மாற்றினான் (வச. 27). இது எப்பேர்ப்பட்ட முழுமையான அழிவு! விக்கிரகாராதனைக்கு எதிரான இந்த அழிவு எவ்வளவு தீவிரமானதோ, அவ்வளவு தீவிரமாகவே நமது இருதயத்திலுள்ள ரகசியப் பாவங்களுக்கும் எதிராக நாம் போராட வேண்டும். பாவத்தோடு நாம் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக்கூடாது. புதிய ஏற்பாட்டில், “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்” (கொலோ. 3:5) என்று வேதம் நம்மை அழைக்கிறது.

தேவனுக்காக ஊழியம் செய்கிறோம் என்ற பெயரில், யெகூவைப் போல உலகத்தின் வழிமுறைகளையோ, தந்திரங்களையோ, வஞ்சகங்களையோ நாம் பயன்படுத்துகிறோமா? முடிவுகள் நன்றாக இருக்கின்றன என்பதற்காக, நாம் பயன்படுத்தும் தவறான வழிமுறைகளைத் தேவன் ஏற்றுக்கொள்வார் என்று எண்ணிவிடக் கூடாது. “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்திற்குரியவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி. 10:4). நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் ‘பாகால்களை’ (சுயநலம், பண ஆசை, பெருமை) பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் முற்றிலுமாக இடித்துத் தள்ளுவோம். ஆனால் அதைத் தேவனுடைய சத்தியத்தின் வழியில், உண்மையான இருதயத்தோடு செய்வோம். கர்த்தர் தாமே அப்படிப்பட்ட தூய்மையான வைராக்கியத்தை நமக்குள் உருவாக்குவாராக.