2025 மார்ச் 28 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:30-37
“எகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, தன் கண்களுக்கு மை யிட்டு, தன் தலையைச் சிங்காரித்து, பலகணியின் வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள்” (வச. 30).
மரணம் வாசற்படியில் வந்து நிற்கும்போது, ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்வான்? யேசபேலின் இந்தச் செயல் மனித இருதயத்தின் கடினத்தன்மையைக் காட்டுகிறது. நியாயத்தீர்ப்பின் கத்தி தன் கழுத்தை நெருங்குவதை அறிந்தும், மனந்திரும்புவதற்குப் பதிலாக அவள் தன் கண்களுக்கு மையிட்டுத் தன்னை அலங்கரிக்கிறாள். ஆத்துமா நரகத்தின் விளிம்பில் நிற்கும்போது, உடலை அலங்கரிப்பது எவ்வளவு பெரிய மதிகேடு! தேவனுடைய நியாயத்தீர்ப்பை வெளிவேஷத்தினால் தடுத்து நிறுத்திவிடலாம் என்று ஒரு பாவி நினைப்பது எவ்வளவு மதிகேடு! இன்று அநேகர் தங்கள் உள்ளத்தின் பாவக் கறைகளைக் கண்ணீரோடு கழுவுவதற்குப் பதிலாக, வெளிப்படையான மதச் சடங்குகளாலும், உலகத்தின் புகழாலும் அதை மூடி மறைக்கவே முற்படுகிறார்கள். ஆனால், தேவனுடைய கண்கள் வெளித்தோற்றத்தை அல்ல, இருதயத்தையே ஆராய்ந்து பார்க்கின்றன என்பதை உணராமல் இருக்கின்றனர்.
யேசபேல் பலகணியிலிருந்து எகூவைப் பார்த்து, “தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரிக்குச் சமாதானமுண்டோ? என்று ஆணவமாகக் கேட்டாள். அவளுடைய அந்த அதிகார தோரணை எகூவை அச்சுறுத்தவில்லை. எகூ, “என் பட்சத்தில் இருக்கிறது யார்?” என்று கேட்டமாத்திரத்தில், யேசபேல் இத்தனை காலமும் நம்பியிருந்த அவளுடைய சொந்தப் பிரதானிகளே அவளைக் கீழே தள்ளினார்கள். உலகத்தின் அதிகாரமும் அந்தஸ்தும் பயத்தின் அடிப்படையிலானது; நிலைமை மாறும்போது, உலகமே நம்மைத் தூக்கி எறிந்துவிடும். பாவம் நமக்குச் சில காலம் சிம்மாசனத்தைத் தரலாம், ஆனால் முடிவில் அதுவே நம்மைக் கீழே தள்ளிக் கொல்லும். “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்“ (1 யோவான் 2:17) என்ற சத்தியத்தை யேசபேலின் வீழ்ச்சி நமக்குத் தெள்ளத்தெளிவாகப் போதிக்கிறது.
யேசபேல் கீழே தள்ளப்பட்டு, குதிரைகளால் மிதிக்கப்பட்டாள். பின்னர் அவளை அடக்கம்பண்ண வந்தவர்கள், அவளுடைய தலையோடு, கால்கள், உள்ளங்கைகள் ஆகியவற்றைத் தவிர வேறொன்றையும் காணவில்லை. இது எலியா தீர்க்கதரிசி மூலம் தேவன் உரைத்த வார்த்தையின் துல்லியமான நிறைவேற்றமாகும். தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தரையில் விழாது; அவருடைய வாக்குத்தத்தங்கள் எவ்வளவு நிச்சயமோ, அவருடைய நியாயத்தீர்ப்பின் எச்சரிப்புகளும் அவ்வளவு நிச்சயமானவை. பல ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட வார்த்தை, ஒரு சிறு பிசிறுகூட இல்லாமல் நிறைவேறியது. தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
புதிய ஏற்பாட்டில், வெளிப்படுத்தின விசேஷம் 2:20-ல், ‘யேசபேல்’ என்னும் பெயர் விக்கிரகாராதனை யையும் வேசித்தனத்தையும் சபைக்குள் கொண்டுவரும் தவறான போதனைக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலகத்தின் இச்சைகளாகிய எந்த ‘யேசபேலும்‘ நம்மை ஆளுகை செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. யேசபேலைக் கீழே தள்ளிய அந்தப் பிரதானிகளைப் போல, நம்முடைய இருதயத்தின் பலகணியில் வீற்றிருக்கும் மாம்ச இச்சைகளைச் சற்றும் தயக்கமின்றித் தூக்கி எறிய வேண்டும். தேவனுடைய நீதியோடு நாம் எந்தச் சமரசமும் செய்யாமல், பாவத்தை முழுமையாகக் கொன்றொழிக்க இன்றே தீர்மானிப்போம். கிருபையும் நீதியும் நிறைந்த எங்கள் பரலோகப் பிதாவே! உலகத்தின் மாயையான அலங்காரங்களை நம்பி, எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ளாதபடி எங்களைக் காத்துக்கொள்ளும். ஆமென்.