March

தேவவார்த்தையினால் வருகிற விடுதலை

2025 மார்ச் 16 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:1-2

  • March 16
❚❚

 “அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”(வச. 1).

சமாரியாவின் பஞ்சம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. மனித நம்பிக்கை அற்றுப்போன அந்த இருண்ட நள்ளிரவில், விடியற்காலையின் வெளிச்சம்போல எலிசாவின் தீர்க்கதரிசனம் ஒலித்தது. இது வெறும் வார்த்தையல்ல, சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் தேவனுடைய வாக்குறுதி. “எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலில் ஒரு மரக்கால் மெல்லிய மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்“ (வச. 1). முந்தைய அதிகாரத்தில் பிள்ளையைச் சமைத்துச் சாப்பிடும் அளவுக்கு இருந்த வறுமை, ஒரே நாளில் அபரிமிதமான வாழ்வாக மாறும் என்று எலிசா அறிவிக்கிறார். “தேவன் ஒரு காரியத்தைச் சொல்லும்போது, அது ஏற்கனவே நிறைவேறியதைப் போன்றது. காலதாமதம் என்பது நம்முடைய பார்வையில் மட்டுமே, அவருடைய அட்டவணையில் எல்லாம் துல்லியமானது” என்று  மேத்யூ ஹென்றி கூறியிருக்கிறார். நம்முடைய பொருளாதாரச் சூழலோ அல்லது தனிப்பட்ட நெருக்கடிகளோ தீர்க்கவே முடியாது என்று நாம் நினைக்கும்போது, கர்த்தருடைய ஒரு வார்த்தை எல்லாவற்றையும் தலைகீழாக மாற்ற வல்லது. விசுவாசம் என்பது சூழ்நிலையைப் பார்ப்பதல்ல, சூழ்நிலையை ஆளுகிறவரின் வார்த்தையைப் பார்ப்பதாகும்.

எலிசாவின் தீர்க்கதரிசனத்தைக் கேட்ட ராஜாவின் அதிகாரி, “இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா?” (வச. 2) என்று ஏளனம் செய்தான். அவன் தேவனுடைய வல்லமையை விட, தன் சொந்த அறிவிற்கும் தர்க்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தான். அவன் தேவனைத் தன் சொந்தக் குடுவைக்குள் அடைக்க முயன்றான். வானத்தில் மதகுகள் திறந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று அவன் நினைத்தான், ஆனால் தேவன் பூமியில் சாதாரணக் குஷ்டரோகிகளைக் கொண்டு அற்புதம் செய்யப்போகிறார் என்பதை அவன் அறியாமலிருந்தான். நம்மில் பலரும் இதே போன்ற ஆவிக்குரிய குருட்டுத்தன்மையில் இருக்கிறோம். “இப்படி நடந்தால் மட்டுமே என் பிரச்சனை தீரும்” என்று நாம் தேவனுக்கு வழி காட்டுகிறோம். ஆனால் தேவன் நம்முடைய கணக்குகளுக்கு அப்பாற்பட்டவர்.

அதற்கு எலிசா: “இதோ, உன் கண்களினால் அதைக் காண்பாய்; ஆகிலும் அதிலே புசிக்கமாட்டாய்” என்றான் (வச. 2). இது ஓர் எச்சரிக்கைச் செய்தி. அவிசுவாசம் என்பது அற்புதங்களைத் தடுப்பதில்லை, மாறாக அந்த அற்புதத்தின் ஆசீர்வாதத்தை நாம் அனுபவிக்க விடாமல் தடுத்துவிடுகிறது. புனித  அகஸ்டின் கூறுவது நாம் கவனிக்கத்தக்கது: “விசுவாசம் என்பது உன்னால் பார்க்க முடியாததை நம்புவது; அந்த விசுவாசத்திற்கான பலன் நீ நம்பியதைப் பார்ப்பது”. மறுநாளில் அந்த அதிகாரி அற்புதத்தைக் கண்டான், ஆனால் மக்களால் மிதிக்கப்பட்டு இறந்தான். ஆசீர்வாதத்தின் வாசலில் நின்றும் அதைச் சுவைக்க முடியாமல் போனது அவனது அவநம்பிக்கையால்தான். திருவாளர் சார்லாஸ் ஸ்பர்ஜனின் திருவாய்மொழியோடு இன்றைய சிந்தனையை நிறைnவு செய்வோம்: “அவிசுவாசிகள் உண்மையில் இந்த வாழ்க்கையின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலோர் செல்வம் தங்களுக்குத் திருப்தியைத் தருவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பொருளாதாரச் செழிப்பு அவர்களின் ஆவிக்குரிய வறுமையைப் போக்க முடியாது. அவர்களுக்கு எல்லாம் இருந்தும், அவர்களின் இதயம் எதை நாடுகிறதோ அது அவர்களிடம் இல்லை. ஆம், மனநிறைவைத் தவிர அவர்களிடம் மற்றெல்லாமும் இருக்கிறது.”