2025 மார்ச் 17 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:3-5
- March 17
“குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?”(வச. 3).
சமாரியா பட்டணத்து வாசலிலே இருந்த அந்த நான்கு குஷ்டரோகிகளின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்; நோயின் கொடுமையாலும், கொடிய பஞ்சத்தினாலும் மரணத்தின் விளிம்பில் நின்றவர்கள். “நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்னறி” (வச. 3) என்று அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கேட்ட கேள்வி, விரக்தியின் உச்சத்தில் பிறந்த ஒரு தீர்மானமாகும். பிரபல வேத விளக்கவுரையாளர் மேத்யூ ஹென்றி இதனைக் குறிப்பிடும்போது, “தேவன் தமது மகத்தான விடுதலையையும் இரட்சிப்பையும் வெளிப்படுத்த, சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டவர்களையே பல நேரங்களில் பயன்படுத்துகிறார்” என்று கூறுகிறார். பட்டணத்துக்குள் சென்றால் பஞ்சம், அங்கேயே இருந்தாலும் பட்டினிச்சாவு; ஆகவே, எதிரிகளான சீரியர்களின் பாளயத்திற்குச் செல்வதே ஒரே வழி என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆவிக்குரிய ரீதியில் இது ஒரு பாவியின் மனநிலைக்கு ஒப்பானதாகும். உலகத்தின் வழியில் சென்றாலும் மரணம், பாவத்திலேயே நிலைத்திருந்தாலும் மரணம் என்பதை உணரும் ஒரு மனிதன், தன்னை முற்றிலுமாகத் தேவனுடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்க எடுக்கும் தீர்மானமே இரட்சிப்பின் ஆரம்பம்.
இந்த நான்கு குஷ்டரோகிகளும் சீரியர்களை நம்பிப் புறப்பட்டார்கள்; ஆனால், நாமோ ஒருபோதும் கைவிடாத, கிருபை நிறைந்த நம்முடைய பரம பிதாவின் இரக்கத்தை நம்பிப் புறப்படுகிறோம். நாசமும் மோசம் நம்மைச் சூழ்ந்திருப்பதாகத் தோன்றினாலும், விசுவாசத்தோடு எழுந்து நடப்பதே ஆவிக்குரிய முதல் படியாகும். “சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்” (வச. 5). இருட்டுகிற நேரத்தில், மரண பயத்தோடு அவர்கள் நடந்து சென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள் வருவதற்கு முன்பாகவே, தேவன் சீரியர்களின் காதுகளில் இரதங்களின் சத்தத்தைக் கேட்கப்பண்ணி அவர்களை ஓடச் செய்திருந்தார். இங்கே நாம் ஒரு மாபெரும் ஆவிக்குரிய சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறோம்: நமது இரட்சிப்பிற்கான எந்தவொரு போரையும் நாம் போராட வேண்டியதில்லை. நாம் வருவதற்கு முன்பாகவே கல்வாரிச் சிலுவையில் இயேசு கிறிஸ்து பிசாசின் சேனைகளை முறியடித்து, நமக்கான ஆசீர்வாதங்களையும் விடுதலையையும் ஆயத்தம் செய்துவிட்டார். குஷ்டரோகிகள் சீரியர்களை விரட்ட எதையும் செய்யவில்லை; மாறாக, தேவன் ஆயத்தம்பண்ணியிருந்த வெற்றியை அவர்கள் சுதந்தரித்துக்கொண்டார்கள். அதுபோலவே, நாமும் தேவனுடைய கிருபையை விசுவாசத்தால் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்விலும், “எல்லாம் முடிந்துவிட்டது, இனி வழியே இல்லை” என்று நீங்கள் முடங்கிப் போயிருக்கலாம். உங்கள் பலவீனங்களோ அல்லது சூழ்நிலையின் பஞ்சமோ உங்களை அச்சுறுத்தலாம். ஆனால், அதே இடத்தில் உட்கார்ந்து மடிந்துபோவதை விட, தேவனுடைய கிருபையை நோக்கி விசுவாசத்தின் படிகளை எடுத்து வையுங்கள். அவர் உங்களுக்காக ஒரு பெரிய விடுதலையை ஏற்கனவே ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். அந்த விடுதலையை நாம் பெற்றுக்கொள்வது மட்டுமின்றி, இந்த நான்கு குஷ்டரோகிகளைப் போல, அதை அறியாமல் மரண இருளில் வாழும் மற்றவர்களுக்கும் அந்த ஆவிக்குரிய ஆகாரமாகிய நற்செய்தியை பகிர்ந்து கொடுக்கிறவர்களாக நாம் மாற வேண்டும்.எனவே ஜெபத்தோடு தேவனுடைய கிருபையை நோக்கி ஒரு சிறு விசுவாசத்தின் படியை எடுத்து வைப்போம்.