(வேத பகுதி: யாத்திராகமம் 1:1-7)
இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. (யாத்திராகமம் 1:7)
ஏழு எகிப்துக்கு போன இஸ்ரவேலுடைய அதாவது யாக்கோபுடைய குமாரருடைய பெயர்களுடன் யாத்திராகம புத்தகம் தொடங்குகிறது. 12 கோத்திர பிதாக்களின் பெயர்கள் வரிசையாக சொல்லப்பட்டுள்ளன இனிமேல் இந்த 12 நபர்களுடைய பெயர்களை அடிக்கடியாக படிக்க இருக்கிறோம். யாக்கோபும் அவனுடைய 12 குமாரரின் குடும்பங்களும் இந்த உலகத்தை குறித்த தேவனுடைய இரட்சிப்பின் பெரும் திட்டத்தை இன்றி அமையாத பங்கை வகிக்க போகின்றன. அன்று தொடங்கிய இந்த மீட்பின் திட்டம் ஒரு நீண்ட காப்பியமாக தேவனால் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த கோத்திரங்களில் ஒன்றில் தோன்றிய இயேசு கிறிஸ்துவின் வாயிலாக இந்த பெருங்கதையில் புறையினத்தாராகிய நாமும் ஒரு கதாபாத்திரமாக இணைந்திருப்பதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறோம்.
ஆதியாகமத்தின் தொடர்ச்சியாக யாத்திராகமம் தொடங்கினாலும் இரண்டுக்கும் இடையில் ஏறத்தாள நான்கு நூற்றாண்டுகள் இடைவெளி உள்ளது. இந்த கால இடைவெளியை குறித்து உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாய் இருந்து அதேசத்தாரை சேவிப்பார்கள் என்றும் அவர்களால் 400 வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும் நீ நிச்சயமாய் அறிய கடவாய் என்று தேவன் ஆபிரகாமுக்கு முன்னரே அறிவித்திருந்தார். ஆயினும் தேவனுடைய கிரியைகளுக்கு எப்போதும் ஓய்வே இல்லை. அவர் இந்த காலகட்டத்திலும் அவர் அவர்களுக்காக செயல்பட்டு கொண்டிருந்தார். அவர் கிரியை செய்யாத காலம் எதுவும் இல்லை. அவருடைய ஏற்ற வேளை வரும்போது அவரது கிரியைகளை நாம் புரிந்து கொள்கிறோம். 70 பேர் அடங்கிய ஒரு சிறு கூட்டமாக சென்றவர்கள் இப்பொழுது ஏராளமானவர்கள் அடங்கிய ஒரு பெருங்கூட்டமாக பெருகிவிட்டார்கள். தேசம் அவர்களால் நிறைந்தது உன் சந்ததியை பூமியின் தூளை போல் பெருக பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால் உன் சந்ததியும் எண்ணப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன வார்த்தை நிறைவேறிற்று. தேவன் தமது வார்த்தையில் உண்மை உள்ளவர். இதை காண ஆபிரகாம் சரீரத்தில் உயிரோடு இல்லை. தேவனுடைய வார்த்தைகள் ஒருபோதும் பொய்த்து போகாது என்பதற்கு இது ஒரு அடையாளம். அவர் தம்முடைய நேரத்தில் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்.
யோசேப்பு மரித்த பின் இஸ்ரவேலர் பெரும் உபத்திரவங்களை சந்தித்தனர். முன்னர் பஞ்சத்திலிருந்து அவர்களை காப்பாற்றிய தேவன் உபத்திரவங்களில் இருந்தும் அவர்களை காப்பாற்றுகிறார். தேவன் ஆபிரகாமுக்கு பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்னும் சிறப்பான வாக்குறுதியை அளித்திருந்தார். அவர் அதை இன்றளவும் காப்பாற்றி வருகிறார். எருசலேமின் சமாதானத்திக்காக வேண்டிக்கொள்ளுங்கள். உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. சங்கீதம் 122:6 வாசிக்கிறபடி இப்பொழுது நாம் அவர்களுடைய இரட்சிப்புக்காகவும் அவர்கள் தங்கள் மேசியாவாகிய கிறிஸ்துவை அறிந்து கொள்ளும்படியாகவும் ஜெபத்தில் மன்றாடுவோமாக. ஆமென்.