மத்தேயு 3:1-17

3. மேசியாவின் ஊழியங்களுக்கான ஆயத்தமும், தொடக்கமும் (அதி. 3,4)

அ. யோவான் ஸ்நானகன் வழியை ஆயத்தப்படுத்துதல் (3:1-12)

இரண்டாம் அதிகாரத்திற்கும் மூன்றாம் அதிகாரத்திற்கும் இடையே இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. அதைக்குறித்து மத்தேயு எதுவும் குறிப்பிடவில்லை. அந்தக் காலத்தில் நாசரேத்தில் இருந்த இயேசு தமது எதிர்கால ஊழியத்திற்காகத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் யாதொரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆயினும் தேவனுடைய கண்களில் நிறைவான பிரியத்திற்குப் பாத்திரராக விளங்கினார் (மத். 3:17). இந்த அதிகாரத்தின் வாயிலாக அவருடைய வெளியரங்கமான ஊழியத்தின் தொடக்கத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.

3:1,2 யோவான் ஸ்நானகன் தனது உறவினராகிய இயேசுவைவிட ஆறு மாதங்கள் மூத்தவராவார் (லூக். 1:26,36 – ஆகிய வசனங்களைக் காண்க). இஸ்ரவேலின் அரசராகிய மேசியாவுக்கு முன்னோடியாக அவர் வரலாற்று அரங்கிற்குள் காலடி எடுத்து வைக்கிறார். அவருடைய ஊழிய எல்லை எவ்வித வெற்றிவாய்ப்பும் அற்ற யூதேயாவின் வனாந்தரப் பகுதியேயாகும். எருசலேம் தொடங்கி யோர்தான் வரையிலுள்ள வறண்ட நிலப்பகுதியெங்கும் அவர் சுற்றித் திரிந்தார். “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது!” என்பதே அவர் அறிவித்த செய்தி. அரசர் விரைவில் தோன்றவிருக்கிறார், தங்களுடைய பாவத்தில் வீழ்ந்து கிடக்கிற மக்கள் மீது அவர் ஆட்சி செலுத்தமாட்டார், அவரால் அவ்வாறு ஆட்சி செலுத்தவும் முடியாது. அவர்கள் தங்களுடைய பாதையை மாற்றிக் கொள்ளவேண்டும், பாவங்களை விட்டொழிக்க வேண்டும். இருளின் அரசிலிருந்து பரலோக அரசிற்கு வரும்படியாக தேவன் அவர்களை அழைத்தார்.

பரலோக இராஜ்யம்

பரலோக ராஜ்யம் என்னும் சொற்றொடரை முதன் முதலாக இரண்டாம் வசனத்தில் நாம் காண்கிறோம். இச்சொற்றொடர் இந்த நற்செய்தி நூலில் முப்பத்திரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்றொடரின் கருத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் ஒருவன் மத்தேயு நற்செய்தி நூலின் பொருளைப் புரிந்துகொள்ள இயலாது. ஆகவே இச்சொற்றொடரின் வரையறையும் விளக்கமும் இங்கே தரப்பட்டுள்ளன.

தேவனுடைய ஆளுகையை ஒப்புக்கொள்கிற செயற்களமே (மண்டலம்) பரலோக ராஜ்யம் எனப்படும். “பரலோகம்” என்னும் சொல் தேவனைச் சுட்டிக்காட்டுகிறது. “உன்னதமானவர்” மனிதருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார் என்று தானியேல் கூறியதை தானியேலின் நூலில் காணமுடியும் (தானி. 4:25). அடுத்த வசனத்தில் ‘பரம அதிகாரம்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பரலோகம் ஆளுகிறது என்பது அதன் பொருளாகும். எங்கெல்லாம் மக்கள் தங்களை தேவனுடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கிறார்களோ அங்கெல்லாம் “பரலோக ராஜ்யம்” நிலவுகிறது.

பரலோக இராஜ்யத்திற்கு இரண்டு தோற்றநிலைகள் உள்ளன. அதனுடைய விரிவான பொருளில், யாரெல்லாம் தேவனே சர்வ அதிகாரத்தையும் உடையவர் என்று ஒப்புக்கொள்வதாக அறிக்கை செய்கிறார்களோ அவர்கள் யாவரும் அந்த ராஜ்யத்திற்குட்படுவர். அதனுடைய குறுகிய பொருளில், உண்மையான மனமாற்றத்தைப் பெற்றவர்கள் மட்டுமே அதற்கு உட்பட்டவர்களாவர். ஒரே புள்ளியை மையமாகக் கொண்ட இரண்டு வட்டங்களால் இதனை நாம் வரைந்து காட்டுவோம்.

பெரிய வட்டம் அறிக்கையின் செயற்களமாகும். இங்கு அரசரின் உண்மையான குடிமக்க ளும், அவருடைய அதிகாரத்தை உதட்டளவில் அறிக்கை செய்கிறவர்களும் இடம் பெறுகின்றனர். விதைக்கிறவனின் உவமை (மத். 13:3-9), கடுகு விதை உவமை (மத். 13:31,32), புளித்த மாவு என்னும் உவமை (மத். 13:33) ஆகியவற்றில் இதனைக் காணலாம். சிறிய வட்டமாகிய உள்ளார்ந்த நிலையில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் கொண்டு மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே இடம் பெறுவர். மனமாற்றம் பெற்றவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்தின் உள்ளார்ந்த நிலையில் உட்புகுந்தவர்களாக விளங்குவர் (மத். 18:3).

இராஜ்யத்தைப் பற்றி வேதாகமம் தருகிற எல்லாக் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து ஆராய்ந்து காண்போமாயின், வரலாற்றில் அது அடைந்த ஐந்து வளர்ச்சிப்படிகளை நம்மால் காணவியலும்.

முதலாவதாக பழைய ஏற்பாட்டில் ராஜ்யம் முன்னுரைக்கப்பட்டுள்ளது. தேவன் ஒருக்காலும் அழிந்து போகாத ராஜ்யத்தை நிறுவுவார் என்றும், அதனுடைய இறையாண்மையை வேறு எவரிடமும் தரமாட்டார் என்றும் தானியேல் முன்னுரைத்துள்ளார் (தானி. 2:44). கிறிஸ்துவின் வருகையில் உலகளாவியதும் அழியாமை உள்ளதுமான அரசு நிறுவப்படும் என்பதையும் அவர் முன்கண்டார் (தானி. 7:13,14; எரே. 23:5,6 ஆகிய வசனங்களையும் காண்க).

இரண்டாவதாக யோவான் ஸ்நானகன், இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சீடர்கள் ஆகியோர் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று அறிவித்தனர் அல்லது அப்பொழுதே வந்திருக்கிறது என்று அவர்கள் அறிவித்தனர் (மத். 3:2; 4:17;10:7) “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 12:28-இல் கூறியிருக்கிறார்.

“. . . இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்று லூக்கா 17:21-இல் அவர் கூறியிருக்கிறார். அதாவது உங்கள் நடுவில் இருக்கிறதே என்பதே அதன் பொருளாகும். அரசராகிய இயேசு அங்கே இருந்த நிலையில் ராஜ்யம் அங்கு வந்திருந்தது. பரலோக ராஜ்யமும் தேவனுடைய ராஜ்யமும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களாக இருக்கின்றன என்பதை நாம் பின்னர் விளக்குவோம்.

மூன்றாவதாக, ஓர் இடைக்கால அரசமைப்பாக ராஜ்யம் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேல் நாட்டினராலே அவர் ஏற்க மறுக்கப்பட்ட பின்னர், அரசர் விண்ணுலகிற்குத் திரும்பச் சென்றுவிட்டார். அரசர் இங்கு இல்லையெனினும் அவருடைய அரசுரிமையை ஏற்றுக்கொண்டவர் ஒவ்வொருடைய உள்ளத்திலும் பரலோக ராஜ்யம் நிலைத்திருக்கிறது. அவ்வரசின் அறநெறிகளும் ஒழுக்கத்தின் விதிகளும் நம்முடைய வாடிநக்கை நடைமுறைக்கு ஏற்புடையவையாக விளங்குகின்றன. மலைப்பிரசங்கத்தில் சொல்லப்பட்டுள்ள அறநெறிகள் யாவும் இவற்றுள் அடங்கும். இராஜ்யத்தின் இடைக்கால அமைப்பை மத்தேயு 13-ஆவது அதிகாரத்தில் காணும் உவமைகள் விளக்குகின்றன.

இராஜ்யத்தின் நான்காவது கட்டம், அதனுடைய வெளிப்பாடு என்று அழைக்கப்படுகிறது. இதுவே பூமியில் கிறிஸ்து நிறுவப் போகிற ஆயிரமாண்டு ஆட்சிக் காலமாகும். எதிர்காலத்தில் நிகழவிருக்கிற கிறிஸ்துவின் ஆட்சி மறுரூபமலையின் காட்சியில் வெளிப்பட்டது, இங்கே அவர் மகிமையோடு காட்சியளித்தார் (மத். 17:1-8). இந்தக் காலகட்டத்தைக் குறித்து இயேசு கிறிஸ்துவே மத்தேயு 8:11-இல் குறிப்பிட்டுள்ளார்: “அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.”

இராஜ்யத்தின் கடைசிக் கட்டம் நித்திய ராஜ்யமாக விளங்கும். இதனைக் குறித்து, “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யம்..” என்று 2 பேதுரு 1:11 -ஆம் வசனம் கூறுகிறது.

“பரலோக ராஜ்யம்” என்னும் சொற்றொடர் மத்தேயு நற்செய்தி நூலில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் “தேவனுடைய ராஜ்யம்” என்னும் சொற்றொடரை நான்கு நற்செய்தி நூல்களிலும் காண்கிறோம். இச்சொற்றொடர்களின் பொதுவான பயன்பாடுகளைக் காணுமிடத்து எவ்விதவேறுபாடும் இல்லை. இரண்டையும் குறித்து ஒரே விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 19:23-இல் கூறியிருக்கிறார். இதே நிகழ்ச்சியைக் குறித்து மாற்கு (10:23), லூக்கா (18:24) ஆகிய நூலாசிரியர்கள் கூறுங்கால் தேவனுடைய ராஜ்யம் என்று குறிப்பிட்டுள்ளனர் (மத். 19:24-ஆம் வசனத்திலும் “தேவனுடைய ராஜ்யம்” என்னும் சொற்றொடரே பயன்படுத்தப்பட்டுள்ளது).

பரலோக ராஜ்யம் ஒரு வெளித்தோற்றத்தையும், உள்ளார்ந்த உண்மை நிலையையும் கொண்டிருக்கிறது என்று மேலே குறிப்பிட்டுள்ளோம். தேவனுடைய ராஜ்யத்திலும் இவ்விரண்டு கூறுகளையும் காணமுடியும். இஃது இவ்விரண்டு சொற்றொடர்களும் ஒரே பொருளுடையவை என்பதை உறுதி செய்கிறது. தேவனுடைய ராஜ்யத்தில் உண்மையான நிலையும், மாயையான பொய்த் தோற்றமும் உள்ளன. விதைப்பவன் உவமை (லூக். 8:4-10), கடுகு விதை உவமை  (லூக். 13:18), புளித்தமா (லூக். 13:20,21) ஆகிய உவமைகளில் இச்சொல்லாட்சி காணப்படுகிறது. அதனுடைய உண்மையான உள்ளார்ந்த நிலைக்குள்ளாக மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே இடம் பெறுவர் (யோவான் 3:3,5). இறுதியாக ஒரு குறிப்பு: இராஜ்யமும் சபையும் ஒன்றல்ல. இயேசு கிறிஸ்து வெளியரங்கமான ஊழியத்தைத் தொடங்கியபோது இராஜ்யமும் தொடங்கியது; சபையோ பெந்தெகொஸ்தே நாளில்தான் தோன்றியது (அப்.2). இராஜ்யம் பூமி அழிக்கப்படும் வரை தொடரும்; சபையானது எடுத்துக்கொள்ளப்படும் வரைதான் பூமியில் தொடரும் (விண்ணுலகிலிருந்து கிறிஸ்து இறங்கி வந்து விசுவாசிகள் அனைவரையும் தம்மோடு இருக்கும்படி அழைத்துச் செல்லும்போது சபை பூமியிலிருந்து அகற்றப்படும் அல்லது பறித்துக் கொள்ளப்படும் (1 தெச. 4:13-18). கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், சபையானது அவரோடுகூட இப்புவிக்குத் திரும்பிவந்து, அவரோடு கூட ஆட்சிபுரியும். தற்போது உண்மையான உள்ளார்ந்த நிலையில் ராஜ்யத்தின் குடிமக்களாக இருப்போர் மணவாட்டியின் சபையிலும் அங்கங்களாகத் திகழுகின்றனர்.

3:3 மத்தேயு 3 -ஆவது அதிகாரத்தின் விளக்கவுரைக்குத் திரும்புவோம். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயா தீர்க்கதரிசி யோவானின் ஆயத்த ஊழியத்தைக் குறித்து முன்னுரைத்தார் என்ற குறிப்பை இங்கே காண்கிறோம்:

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று (ஏசா. 40:3).

யோவான் கூப்பிடுகிற சத்தமாய் இருந்தார். ஆவிக்குரிய நிலையில் இஸ்ரவேல் நாவறண்டதும் வெறுமையுமான வனாந்தரமாகக் காட்சியளித்தது. மனம்வருந்தி, தங்களுடைய பாவங்களை விட்டொழித்து அந்நாட்டு மக்கள் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டுமென்றும், அவருடைய நிறைவான ஆட்சிக்குத் தடையுண்டாக்கும் எல்லா இடையூறுகளையும் அகற்றி அவருடைய பாதையைச் செவ்வைபண்ணவேண்டுமென்றும் யோவான் அழைப்புவிடுத்தார்.

3:4 யோவான் ஸ்நானகனின் ஆடை ஒட்டக மயிரால் நெய்யப்பட்டிருந்தது. இன்றைய நாட்களில் மென்மையான விலையுயர்ந்த ஒட்டகமுடியினால் செய்யப்படும் ஆடைகளைப்போல அது இல்லாமல், வனாந்தரத்தில் வசிக்கிறவர்கள் அணியும் கரடுமுரடான ஆடையாகவே அது இருந்தது. ஒரு வார்க்கச்சையையும் அவர் இடுப்பில் கட்டியிருந்தார். இந்த உடைகள் எலியாவின் உடைகளைப்போலவே இருந்தன (2 இராஜா. 1:8). ஒருவேளை விசுவாசிக்கும் யூதர்கள் எலியாவின் ஊழியத்திற்கும் யோவானின் ஊழியத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் கண்டு விழிப்படைய இந்த ஆடையின் ஒற்றுமை உதவியிருக்கலாம் (மல். 4:5; லூக். 1:17; மத். 11:14; 17:10-12). வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் யோவானின் உணவாயிருந்தன. தனது வாழ்வில் வசதிகளையும் இன்பங்களையும் துறந்து ஊழியத்திற்காகத் தன்னையே சுட்டெரிக்கக் கொடுத்த ஒருவர் உயிர்வாழ்வதற்குப் போதுமான உணவையே அவர் உட்கொண்டார்.

சாதாரணமாக மனிதர்கள் எதற்காக வாழ்கிறார்களோ, அவற்றையெல்லாம் குறித்து எந்தக் கவலையும் இல்லாதிருந்த யோவானைச் சந்திக்கும்போது நமக்கு குற்றவுணர்வே ஏற்படும், உள்ளம் வேகும். ஆன்மீகச் சத்தியங்களில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு பிறர் தங்களுடைய குறைவை உணரச் செய்தது. அவரது துறவற வாழ்க்கை, உலகத்தின் இன்பங்களில் மூழ்கிக் கிடந்த அன்றைய மனிதர்களுக்குக் கடுமையான கடிந்து கொள்ளுதலாகக் காணப்பட்டது.

3:5,6 யோவானின் செய் தியைக் கேட்க எருசலேம் நகரத்தார், யூதேயா தேசத்தார் மற்றும் யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் திரண்டுவந்தனர். சிலர் அவருடைய செய்திக்குச் செவிகொடுத்து யோர்தான் நதியில் அவரால் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக, தாங்கள் வரவிருக்கிற அரசருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவும் கீழ்ப்படியவும் ஆயத்தமுடையவர்கள் என்று வெளிப்படுத்தினர்.

3:7 ஆனால் பரிசேயரையும் வேதபாரகரையும் பொருத்தமட்டில் கதை வேறாக இருந்தது. யோவானின் செய்தியைக் கேட்க வந்த அவர்கள் உண்மையற்றவர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களுடைய உண்மையான பண்பை அவர் அறிந்திருந்தார். தாங்கள் நியாயப்பிரமாணத்தில் பற்றுமிக்கவர் என்று பரிசேயர் பெயரளவில் அறிக்கை செய்கிறவர்களாக இருந்தனர். ஆயின் உள்ளார்ந்த நிலையில் அவர்கள் ஊழல் புரிகிறவரும், பிரிவினை செய்கிறவரும், மாய்மாலக்காரரும், சுயநீதி உடையோருமாய்  இருந்தனர். சதுசேயரோ சமுதாயத்தில் மேன்மக்களும், சமயக் கொள்கைகளில் நம்பிக்கை அற்றவர்களுமாயிருந்தனர். சரீர உயிர்த்தெழுதல், தேவதூதர்களின் உளவாம் தன்மை, ஆத்துமாவின் அழிவற்ற தன்மை, நித்திய ஆக்கினைத் தீர்ப்பு ஆகியவற்றை அவர்கள் மறுத்துரைத்தனர். ஆகவே யோவான் அவ்விருவகுப்பாரையும் விரியன் பாம்புக்குட்டிகளே என்று கூறி கடிந்துரைத்தார். அவர்கள் வருங்கோபத்துக்குத் தப்பவிருப்பமுள்ளவர்களாக நடித்தனர். ஆனால் மனந்திரும்புதலுக்கேற்ற உண்மையான அடையாளம் அவர்களிடத்தில் இல்லாதிருந்தது.

3:8 மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுத்து தங்களது உண்மையுள்ள தன்மையை வெளிப்படுத்தும்படி, அவர்களுக்கு யோவான் அறைகூவல் விடுத்தார். “சில கண்ணீர்த்துளிகளைச் சிந்துவதோ, வருத்தத்தினால் பிதற்றுவதோ, சற்று பயந்து நடுங்குவதோ மனந்திரும்புதல் ஆகாது. எந்தப் பாவங்களுக்காக நாம் மனம் வருந்துகிறோமோ அவற்றை விட்டொழித்து, புதிய தூய்மையான பரிசுத்த வழியில் நடப்பதே மனந்திரும்புதல் ஆகும்” என்று திரு து.சு. மில்லர் கூறியுள்ளார்.

3:9 ஆபிரகாமின் குடிவழிவந்தவர்கள் என்பதால் விண்ணுலகிற்கான நுழைவுச் சீட்டைப் பெற்றுவிட்டோம் என்னும் சிந்தனையை யூதர்கள் விட்டொழிக்க வேண்டும். இரட்சிப்பிற்கான தேவகிருபை பரம்பரைச் சொத்தல்ல. பரிசேயரையும் சதுசேயரையும் மனமாற்றம் அடையச்செய்வதைக் காட்டிலும் யோர்தான் ஆற்றுக் கற்களை ஆபிரகாமின் பிள்ளைகளாக மாற்றுவது தேவனுக்கு எளிது.

3:10 கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிக்கிறது என்னும் யோவானின் கூற்று, தேவனுடைய நியாயத்தீர்ப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது என்று பொருள்படும். கிறிஸ்துவினுடைய வருகையும் அவருடைய சமுகமும் எல்லா மனிதர்களையும் சோதிக்கும். கனியற்ற மரங்களை வெட்டி வீழ்த்தி அக்கினியில் போடுவதுபோல, கனியற்றவர்களும் அழிக்கப்படுவது உறுதி.

3:11,12 ஏழாம் வசனம் முதல் பத்தாம் வசனம் வரையிலும் பரிசேயருடனும் சதுசேயருடனும் மட்டுமே யோவான் பேசிக்கொண்டிருந்தார் (7-ஆம் வசனத்தைக் காண்க). இப்பொழுதோ அவர் தம்மைச் சுற்றியிருந்த அனைவரோடும் பேசத் தொடங்குகிறார். அவரைக் கேட்டுக்கொண்டிருந்தோரில் உண்மையுள்ளவரும் உண்மையற்றவரும் இருந்தனர்.

தன்னுடைய ஊழியத்திற்கும், விரைவில் வரவிருக்கிற மேசியாவின் ஊழியத்திற்கு இடையே மிக இன்றியமையாத வேறுபாடு இருக்கும் என்பதை அவர் விவரித்தார். மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்தார். தண்ணீர் சடங்குகளுக்குரிய பொருளேயல்லாமல் அது தூய்மைப்படுத்தும் பண்புடையது அன்று. தான் கூறுகிற மனந்திரும்புதல் உண்மையானதாயிருப்பினும் அது ஒரு மனிதனை முற்றிலும் இரட்சிக்காது. தன்னுடைய ஊழியம் ஆயத்தப்படுத்துவதேயொழிய முழுமையற்றது என்றே யோவான் எண்ணினார். மேசியாவின் ஊழியம் யோவானின் ஊழியத்தை முழுவதுமாக மறைத்து விடும், அவர் யோவானிலும் வல்லவர், நிறைவான தகுதியுடையவர், அவருடைய செயல்பாடுகள் எல்லாத் திக்குகளுக்கும் பரவும். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

பரிசுத்த ஆவியினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானமும் அக்கினியால் கொடுக்கப்படும் ஞானஸ்நானமும் வெவ்வேறானவை. முதலில் சொல்லப்பட்டுள்ளது ஆசிர்வாதமாகும். பின்னர் சொல்லப்பட்டுள்ளது நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. முதலாவது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது, பிந்தியதோ இனிமேல் நடைபெறவிருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள் அனைவரும் முந்தினதில் அனுபவம் பெற்றுள்ளனர். பிந்தினது அவிசுவாசிகளின் பங்காகும். உள்ளான மனந்திரும்புதலுக்கு அடையாளமான வெளிப்படையான ஞானஸ்நானத்தைப் பெற்ற இஸ்ரவேலர் முந்தினதில் பங்கடைவர். பிந்தினதோ பரிசேயரும் சதுசேயரும் உண்மையான மனந்திரும்புதலுக்குரிய சான்று அற்றவர்களும் அடையப்போகிற ஆக்கினைத் தீர்ப்பாகும்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் அக்கினியின் ஞானஸ்நானமும் ஒரே நிகழ்ச்சி என்று சிலர் போதிக்கின்றனர். பெந்தெகொஸ்தே நாளில் அக்கினிமயமாக வந்த நாவுகளை இந்த அக்கினியின் ஞானஸ்நானம் குறிக்கிறதில்லையா என்று அவர்கள் வினவுகின்றனர். பன்னிரண்டாம் வசனத்தில் அக்கினியானது நியாயத்தீர்ப்போடு ஒப்பிடப்பட்டுள்ளதால் மேற்கூறிய பொருளை அது உடையதன்று என அறிவோம். அக்கினியின் ஞானஸ்நானத்தைக் குறித்துச் சொன்னவுடனே, யோவான் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்துப் பேசத்தொடங்கினார். போரடிக்கப்பட்ட தானியத்தைக் காற்றில் தூற்றும் தூற்றுக் கூடைக்கு ஒப்பாகக் கர்த்தர் இங்கே சித்தரிக்கப்படுகிறார். கோதுமையானது (மெய்யான விசுவாசிகள்) தூற்றுக்கூடையின் கீழே நேரே விழுகிறது. விழுந்த மணிகளைக் களஞ்சியத்தில் சேர்க்கிறார்கள். பதரோ (அவிசுவாசிகள்) காற்றின் வேகத்தில் பறந்து சற்று அப்புறம் சென்று விழுகிறது. அதனை ஒன்றுசேர்த்து அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்கள். பன்னிரண்டாம் வசனத்தில் வரும் அக்கினி ஆக்கினைத்தீர்ப்பைக் குறிக்கும். அவ்வசனம் பதினோராவது வசனத்தின் விரிவுரையாக இருக்கிறது. ஆகவே அக்கினி ஞானஸ்நானம் என்பது ஆக்கினைத்தீர்ப்பினால் வரும் ஞானஸ்நானத்தையே குறிக்கும்.

ஆ. யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல் (3:13-17)

3:13 யோவானிடம் ஞானஸ்நானம் பெறும்படி கலிலேயாவிலிருந்து இயேசு ஏறத்தாழ அறுபது மைல் தொலைவு நடந்து யோர்தானின் தாழ்வான பகுதிக்கு வந்தார். யோவான் அளித்த ஞானஸ்நானத்திற்கு இயேசு அளித்த முக்கியத்துவத்தை இது தெரிவிக்கிறது. மேலும் அவரைப் பின்பற்றுவோர் இன்றைய நாட்களில் விசுவாசிகளின் ஞானஸ்நானத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

3:14,15 எந்தப் பாவத்திலிருந்தும் இயேசு கிறிஸ்து மனந்திரும்பத் தேவையில்லை என்பதை உணர்ந்திருந்த யோவான், அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்துரைத்தார். மேலும் தான் அவரிடம் ஞானஸ்நானம் பெறுவதே முறையானது என்று அவர் உரைக்கும்படி அவருடைய மெய்யான உள்ளுணர்வு அவரை ஏவிற்று. இயேசு இதனை மறுத்துரைக்கவில்லை. எல்லா நீதியையும் நிறைவேற்றுவதே ஏற்றதாகும் என்னும் அடிப்படையில் தமக்கு ஞானஸ்நானம் அளிக்கும்படி இயேசு மீண்டும் வேண்டினார். மனந்திரும்புதலுக்கென்று வந்த தெய்வப்பற்றுடைய இஸ்ரவேலரோடு தம்மை ஒன்றிணைத்துக் காட்டுவதற்காக ஞானஸ்நானம் பெறுவதே பொருத்தமானது என்று அவர் எண்ணினார்.

இதனினும் ஆழமான பொருளையும் அவர் பெற்ற ஞானஸ்நானம் எடுத்துரைக்கிறது. மனிதனுடைய பாவத்திற்கு எதிராக தேவன் எதிர்பார்க்கிற நீதியுள்ள பரிகாரங்கள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார் என்பதை உணர்த்தும் ஆசாரமாக அந்த ஞானஸ்நானம் விளங்கியது. அவர் நீரில் மூழ்கிய செயல் கல்வாரியில் நிறைவேறிய தேவனுடைய கோபாக்கினையில் அவர் மூழ்கியதற்கு நிழலாக இருந்தது. அவர் நீரிலிருந்து வெளியே வந்தது, அவருடைய உயிர்த்தெழுதலுக்கு நிழலாகும். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாக தேவனுடைய நீதி எதிர்ப்பார்க்கிற அனைத்தையும் நிறைவேற்றி, பாவிகள் நீதிமான்களாக ஆக்கப்படுகிறதற்கு நீதியுள்ள ஆதாரத்தை அவர் ஏற்படுத்துவார் என்பதற்கு இந்த ஞானஸ்நானம் நிழலாயிருந்தது.

3:16,17 ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்து ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானத்திலிருந்து தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். பழைய ஏற்பாட்டுக்காலத்திலே மனிதர்களும் பொருட்களும் புனித நோக்கங்களுக்காக “பரிசுத்த அபிஷேகத் தைலத்தினால்” பரிசுத்தமாக்கப்பட்டன (யாத். 30:25-30). அதுபோல இயேசுவும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாவாக விளங்கினார்.

மூவொரு தேவனாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரும் பிரசன்னமாயிருந்த அதிதூய நேரமாக அது விளங்கியது. நேசகுமாரன் அங்கிருந்தார். புறாவின் சாயலில் தூய ஆவியானவர் அங்கிருந்தார். வானத்திலிருந்து பிதாவின் சத்தம் கேட்டது. இயேசுவின் மீது அது ஆசிர்வாதத்தைப் பொழிந்தது, “இவர் என் நேசகுமாரன் (சங். 2:7). இவரில் பிரியமாயிருக்கிறேன் (ஏசா.42:1)” என்று திருமறையிலிருந்து வசனங்களை மேற்கோள்காட்டி, தேவனுடைய சத்தம் தொனிக்கிற மிகச்சிறந்த தருணமாக அது விளங்கியது. தனிச் சிறப்புடைய தம்முடைய குமாரனிடத்தில் பிதா கொண்டிருந்த நேசத்தை அவர் வானத்திலிருந்து தம்முடைய பேச்சினால் வெளிப்படுத்திய மூன்று தருணங்களில் இதுவும் ஒன்றாகும் (மத்.17:5: யோவான் 12:28 ஆகியவை மற்ற இடங்களாகும்).