1 தெசலோனிக்கேயர்

1 தெசலோனிக்கேயர் – அதிகாரம் 4

அதிகாரங்கள்: 1 2 3 4 5

  • 1-Thessalonians-04
❚❚

அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;
11 புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
13 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.