2025 மார்ச் 14 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:19-23
- March 14
“என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்”(வச. 19).
சீரியரின் வீரர்களுக்கு முழுமையாகக் கண்கள் தெரியாமற் போகவில்லை. மாறாக, இன்னார் இன்னார் என்று அடையாளம் காண முடியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மயக்க நிலையில் இருந்தன. எனவேதான் அவர்களால் எலிசாவைப் பின்தொடர்ந்து சமாரியா வரைக்கும் செல்ல முடிந்தது. இது ஒரு தற்காலிகமான பார்வையற்ற நிலை. பார்வையற்றவர்கள் எளிதில் ஏமாற்றப்பட வாய்ப்புண்டு என்பதை இங்கு அறிந்துகொள்கிறோம். சரீரப்பிரகாரமான பார்வையற்ற நிலையைக் காட்டிலும், ஆவிக்குரிய குருட்டு நிலை என்பது மிகவும் மோசமானதாகும். எனவே, கள்ளப்போதகர்களுக்கும், வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசின் உபதேசங்களுக்கும் நாம் ஏமாந்துவிடாதபடிக்கு பிரகாசமான மனக்கண்களை உடையவர்களாயிருப்போம்.
“அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்” (வச. 20). இந்தக் கதையின் இரண்டாவது கண்திறப்பு நிகழ்வு இது. இது தேவனுடைய நிஜ உலகத்தைப் பார்க்கும்படியான கண்திறப்பு. தேவனுடைய நிஜ உலகம் என்பது மன்னிப்பு ஆகும். சீரியருடைய கண்கள் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் விருந்தில் அமர்ந்திருந்தார்கள். விருந்தோம்பல் என்பது ஒருவரை ஏற்றுக்கொள்வதன் சித்திரமாயிருக்கிறது; அதுவும் எதிரிகளுக்கு விருந்தளிப்பது என்பது சமரசத்தின் அடையாளமாக இருக்கிறது. அவர்கள் இஸ்ரவேலுக்கும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசிக்கும் எதிராக இருந்தபோதிலும், தேவன் அவர்களைக் கிருபையின் மன்னிப்பால் அலங்கரிக்க விரும்புகிறார். இதுவே தேவனுடைய நிஜ உலகின் யதார்த்தம். நாமும் இவ்விதமாகச் செய்யும்படி அவர் விரும்புகிறார்.
தேவன் நம்மை இவ்விதமாகத்தான் மன்னித்திருக்கிறார். நாம் தேவனுக்கு எதிரானவர்களாகவும், அவருக்குச் சத்துருக்களாகவும் இருந்தோம். அவர் நம்மை மன்னித்தது மட்டுமின்றி, நம்முடைய சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியையும் ஆயத்தம் பண்ணியிருக்கிறார். எவ்வளவு பெரிய இரக்கம் இது! இஸ்ரவேல் அரசனைப் போலவே, மன்னிப்பதா அல்லது நியாயத்திற்காகப் போராடுவதா என்ற சிக்கல் எப்போதும் நமக்கு முன்பாக இருக்கிறது. இங்கே நம்முடைய கண்களும் திறக்கப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது. எலிசாவின் வேலைக்காரனின் கண்களைத் திறந்து அக்கினிமயமான இரதங்களைப் பார்க்கச் செய்தது மட்டுமின்றி, எதிரிகளுக்கு உணவளிக்கும் பெரிய தேவனுடைய நிஜமான உலகத்தையும் நாம் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. நம்மைப் பாதுகாக்கும் வல்லமை நிறைந்த கர்த்தரை தரிசித்திருப்போமானால், உணவளிக்கும் கர்த்தருடைய இரக்கத்தையும் நாம் கண்டிருக்க வேண்டும்.
தீமைக்கு நன்மையால் பதிலளித்த இந்தச் செயல், சீரியர்களின் மனதை மாற்றியது. அதன் பிறகு அவர்கள் இஸ்ரவேல் நாட்டுக்குள் உடனடியாகக் கொள்ளையடிக்க வரவில்லை என்று எழுதப்பட்டுள்ளது (வச. 23). மனிதனின் எண்ணங்கள் எப்போதும் தண்டனை வழங்கவே துடிக்கின்றன; தேவனுடைய எண்ணமோ மன்னிப்பை வழங்க ஆயத்தப்படுகிறது. வாள் முனையினால் அல்ல, மன்னிப்பால் கர்த்தர் நமக்கு வெற்றியைத் தர வல்லவராயிருக்கிறார். வாரந்தோறும் கர்த்தருடைய பந்தியை அனுசரிக்கிற நாம், அவருடைய மன்னிப்பையும் ஏற்றுக்கொள்ளுதலையும் உணர்ந்துகொள்வது மட்டுமின்றி, உடன் விசுவாசிகளை மன்னிக்கவும் அவர்களுடன் ஐக்கியமாக இருக்கவும் மனதார முயற்சி எடுப்போமாக.