2025 ஏப்ரல் 10 வேதபகுதி: 2 ராஜாக்கள் 14:8-16
“நீ எதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்விப்பண்ணிற்று; நீ மகிமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடுவானேன் என்று சொல்லியனுப்பினான்” (10).
உப்புக் பள்ளத்தாக்கிலே எதோமியரைத் தோற்கடித்த யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் இருதயம், வெற்றியின் களிப்பினால் பெருமையடைந்து மேட்டிமை கொண்டது. இந்த மாபெரும் வெற்றி கர்த்தரால் கொடுக்கப்பட்டது என்பதை மறந்து, அது தன் சொந்த பலத்தினால் வந்ததாக எண்ணினான். இதன் விளைவாக, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசைப் பார்த்து, “நாம் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் காண்போம் வா” என்று சண்டைக்கு அழைத்தான். அழிவுக்கு முன் அகந்தை வரும் என்பதுபோல இவனது நடவடிக்கை காணப்பட்டது. தன் வெற்றிகளைக் குறித்துப் பெருமைப்படுகிறவன், தன் சொந்த அழிவுக்குத் தன்னைத் தானே வழிவகுக்கிறான். ஆவிக்குரிய வாழ்வில் சோர்வைக் காட்டிலும், வெற்றியின் தருணங்களே மனித சுபாவத்திற்கு மாபெரும் சோதனையாகும். ஒரு சிறு வெற்றி கிடைத்தவுடன், நம்மை நாமே பெரியவர்களாக எண்ணிக் கொண்டு, தேவையற்ற போராட்டங்களில் தலையிடுவது எவ்வளவு பெரிய வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை அமத்சியாவின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
அமத்சியாவின் அகந்தைக்கு யோவாஸ் ஓர் உவமையின் மூலம் பதிலளித்தான். லீபனோனிலுள்ள முட்செடி தன்னை லீபனோனிலுள்ள கம்பீரமான கேதுரு மரத்திற்குச் சமமாக எண்ணி, பெண் கேட்டதாம்; ஆனால் ஒரு காட்டுமிருகம் வந்து அந்த முட்செடியை மிதித்துப்போட்டது என்று கூறினான். அமத்சியாவின் தலையில் அவனது சமீபத்திய வெற்றி ஏறிக்கொண்டது; அவன் தன்னுடைய உயரம் என்ன என்பதை மறந்துவிட்டான். நாம் தேவனோடு நடக்கும்போதே பாதுகாப்பாயிருக்கிறோம்; சுயநம்பிக்கையில் நடந்து எல்லையை மீறிச் செல்லும்போதோ முட்செடியைப் போல மிதிக்கப்படுவோம். அமத்சியா இந்த எச்சரிப்பைக் கேட்க மறுத்து, தன் சுயபலத்தின் மேல் நம்பிக்கை வைத்துப் போருக்குச் சென்றதன் விளைவாக அவன் பரிதாபமாகத் தோற்கடிக்கப்பட்டான். எருசலேமின் மதில் நானூறு முழ நீளம் இடிக்கப்பட்டது; கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்கள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டன. “தேவனுடைய அளவற்ற கிருபை மனிதனின் இருதயத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், வெற்றியைத் தாங்கிக்கொள்ளும் திராணி வீழ்ந்துபோன மனித சுபாவத்திற்குச் சிறிதேனும் இல்லை” என்று ஆர்தர் பிங்க் விவரிக்கிறார்.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல், “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1 கொரி. 10:12) என்று சபையை எச்சரிக்கிறார். நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் காணும் வெற்றிகள், ஜெபத்திற்கான பதில்கள், மற்றும் ஊழியத்தின் கனிகள் யாவுமே கர்த்தருடைய ஈடிணையற்ற கிருபையே தவிர, நம்முடைய சாமர்த்தியம் அல்ல. அமத்சியாவைப் போல ‘என்னை யார் எதிர்க்க முடியும்?’ என்ற மேட்டிமை நம் இருதயத்திற்குள் நுழைய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அந்தப் பெருமையானது நமது பாதுகாப்பான ஆவிக்குரிய மதில்களை இடித்துப் போட்டு, கர்த்தர் நமக்குள் வைத்திருக்கும் விலையேறப்பெற்ற ஆவிக்குரிய பொக்கிஷங்களைச் சத்துரு கொள்ளையிட்டுச் செல்ல நாமே வழியமைத்துக் கொடுப்பது போலாகிவிடும்.
பிரியமானவர்களே, “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர் களுக்கோ கிருபையளிக்கிறார்” (யாக். 4:6) என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த வெற்றிக்காகக் கர்த்தரைத் துதியுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் தாழ்மையை அணிந்துகொண்டு, கர்த்தருடைய பாதத்தில் முற்றுமாகச் சார்ந்திருங்கள். அவருடைய கிருபை உங்கள் ஆவிக்குரிய மதில்களைச் சத்துருவின் தாக்குதலில் இருந்து என்றென்றும் பத்திரமாய்க் காத்துக்கொள்ளும்!