2025 ஏப்ரல் 8 வேதபகுதி: 2 ராஜாக்கள் 13:14-25
“பின்பு அவனை நோக்கி: அம்புகளை எடுத்துக்கொள் என்றான்; அவன் எடுத்துக்கொண்டான்; அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடி என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்” (வச.18).
இஸ்ரவேலின் மகா தீர்க்கதரிசியான எலிசா மரணப்படுக்கையில் இருக்கும்போது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனைக் காண வருகிறான். “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே” என்று கண்ணீர் வடிக்கிறான். யோவாஸின் கண்ணீரைக் கண்ட எலிசா, அவனுக்கு ஒரு விசுவாசப் பரிட்சையை வைக்கிறான். கர்த்தருடைய இரட்சிப்பின் அம்பை எய்யும்படி கூறிய எலிசா, பின்பு அம்புகளை எடுத்துத் தரையிலே அடிக்கும்படி கூறுகிறான். யோவாஸ் மூன்று தரம் அடித்துவிட்டு நிறுத்திவிடுகிறான். அப்பொழுது தீர்க்கதரிசிக்குக் கோபம் மூளுகிறது. முந்தைய சரித்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பாவத்திலிருந்து அரைகுறையாக மனந்திரும்பியதைப் போல, இங்கு யோவாஸ் முழுமையற்ற விசுவாசத்தையும், தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வதில் தனக்கிருந்த அசட்டைத்தலத்தையும் வெளிப்படுத்துகிறான். தேவன் முழுமையான வெற்றியைக் கொடுக்கச் சித்தமாயிருந்தும், ராஜாவின் விசுவாசக்குறைவு அந்த வெற்றியை மூன்றே முறைகளாகக் குறுக்கிவிட்டது.
தேவன் தம்முடைய வல்லமையின் வில்லை நம் கைகளில் கொடுக்கிறார்; ஆனால் அதிலிருந்து புறப்படும் வெற்றியின் அம்புகளைத் தீர்மானிப்பது நமது விசுவாசத்தின் அளவே. பல நேரங்களில் தேவன் நமக்கு எல்லையற்ற கிருபையைத் தரக் காத்திருக்கிறார், ஆனால் நமது சுருங்கிய விசுவாசம் அந்த ஆசீர்வாதங்களுக்குத் தடைபோட்டுவிடுகிறது. யோவாஸ் அந்த அம்புகளை அடித்தது தேவனுடைய ஜனங்கள் மீதிருந்த வைராக்கியத்தினாலோ, சத்துருவை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற ஆவிக்குரிய தாகத்தினாலோ அல்ல; தீர்க்கதரிசியின் சொல்லைத் தட்டக்கூடாது என்ற சடங்காச்சாரத்துக்காகவே அடித்தான். அவனிடம் ஆவிக்குரிய நெருப்பு இல்லை. மேலும் தேவனுடைய இறையாண்மையும், மனிதனின் பொறுப்பும் இங்கே இணைகின்றன. தேவன் இரட்சிப்பின் அம்பைக் கொடுத்தார்; ஆனால் அதை எத்தனை முறை தரையில் அடிக்க வேண்டும் என்பதை மனிதனின் வாஞ்சையே தீர்மானித்தது.
நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இது எவ்வளவு உண்மையாக இருக்கிறது! பல நேரங்களில் நாம் ஜெபிக்கும்போது, அரைகுறை மனதுடனேயே கர்த்தருடைய பாதத்தில் வருகிறோம். நமது வாழ்வில் உள்ள பாவப் பழக்கங்களை, மாம்சத்தின் இச்சைகளை, ஆவிக்குரிய சத்துருவை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நம்மிடம் இருப்பதில்லை. ஏதோ கொஞ்சம் நிம்மதி கிடைத்தவுடன், பிரச்சனை சற்று குறைந்தவுடன் நமது ஜெப அம்புகளைக் கீழே போட்டுவிடுகிறோம். புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்” (மத். 7:7) என்று கூறுகிறார். இங்கே ‘தட்டுங்கள்’ என்பது ஒருமுறை தட்டிவிட்டு நிற்பதல்ல; கதவு திறக்கப்படும் வரை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பதைக் குறிக்கிறது.
இந்த அதிகாரத்தின் முடிவில் ஒரு அற்புதமான சம்பவம் பதிவாகியுள்ளது. எலிசா மரித்து அடக்கம்பண்ணப்பட்ட பின்பு, ஒரு செத்த மனுஷனின் பிரேதம் அவனுடைய எலும்புகள் மேல் பட்டவுடனே, அவன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருக்கிறான் (வச. 21). ஒரு மரித்த தீர்க்கதரிசியின் எலும்புகளுக்கே ஜீவனைத் தரும் வல்லமை இருக்குமானால், மரித்து உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமை எவ்வளவு பெரியது! அந்த வல்லமையை நாம் ஏன் முழுi மயாகப் பயன்படுத்தக் கூடாது? பிரியமானவர்களே, இன்று உங்கள் ஆவிக்குரிய மந்தநிலையை உதறித் தள்ளிவிட்டு, விசுவாசத்தின் அம்புகளால் ஜெபத்திலே தொடர்ந்து ஆவிக்குரிய சத்துருவைத் தாக்குங்கள். கர்த்தர் உங்களுக்குத் தீர முறியடிக்கும் முழுமையான வெற்றியைக் கட்டளையிடுவார்!