March

கிருபையின் விருந்தும் நற்செய்தியின் கடமையும்

25 மார்ச் 18 வேதபகுதி: 2 ராஜாக்கள் 7:6-9

  • March 18
❚❚

“நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்”(வச. 9).

“ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் கேட்கப்பண்ணினார்” (வச. 6). சமாரியா பட்டணத்தில் இஸ்ரவேல் மக்கள் பசியாலும் பட்டினியாலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், தேவனோ எந்த மனித ஆயுதமுமின்றி, ஒரு மாபெரும் விடுதலையைச் சத்தத்தின் மூலமாகவே செய்து முடித்தார். மேத்யூ ஹென்றி தனது விளக்கவுரையில், “தேவன் தமது மக்களின் எதிரிகளைத் துரத்தப் பெரிய சேனைகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை; ஒரு சிறிய சத்தத்தைக் கொண்டே அவர்களை அச்சுறுத்தி ஓடச்செய்ய முடியும். ‘ஒருவனும் துரத்தாதிருந்தும் துன்மார்க்கன் ஓடிப்போகிறான்’ (நீதி. 28:1) என்னும் வசனம் இங்கே நிறைவேறியது” என்று கூறியிருக்கிறார். மனிதனால் தீர்க்கவே முடியாத பஞ்சத்தையும் முற்றுகையையும், தேவன் தம்முடைய வல்லமையால் ஒரே இரவில் தகர்த்தெறிந்தார். இது கல்வாரிச் சிலுவையில் இயேசு கிறிஸ்து பிசாசின் அதிகாரங்களை உரிந்துகொண்டு, எந்தவொரு மனிதனின் உதவியுமின்றி நமக்குத் தந்த மாபெரும் வெற்றியின் நிழலாட்டமாக இருக்கிறது.

பாளயத்திற்குள் நுழைந்த அந்த நான்கு குஷ்டரோகிகளும், எதிரிகள் விட்டுச்சென்ற ஆகாரத்தைப் புசித்து, வெள்ளியையும் பொன்னையும் எடுத்து ஒளித்து வைத்தார்கள் (வச. 8). சமுதாயத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு, மரணப் படுக்கையிலிருந்த அவர்களுக்கு இது எதிர்பாராத மாபெரும் பொக்கிஷம்! ஆவிக்குரிய வாழ்வில் நாமும் இந்த குஷ்டரோகிகளைப் போலவே பாவத்தினால் அழியும் நிலையிலிருந்தோம். நமக்குள் எந்த நன்மையும் இல்லாதிருந்தும், தேவனுடைய அளவற்ற கிருபையினால் இரட்சிப்பு என்னும் மாபெரும் விருந்தை நாம் இன்று சுதந்தரித்திருக்கிறோம். அவருடைய வேத வசனங்களாகிய பொன்னையும் வெள்ளியையும் எடுத்து நம் இருதயத்தில் சேகரித்து வைத்து மகிழ்கிறோம். தேவன் தம்முடைய அன்பின் விருந்தில் நம்மைத் திருப்தியாக்குகிறார். இது தேவன் நமக்கு அருளும் தனிப்பட்ட ஆசீர்வாதம்.

ஆனால், இந்தக் கதை வெறும் ஆசீர்வாதத்தோடு முடிந்துவிடவில்லை. அவர்கள் சுயநலமாக தாங்கள் மட்டுதே அதை அனுபவித்துக்கொண்டிருக்கவில்லை. “நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள் …” (வச. 9) என்று திடீரென உணர்வடைந்தார்கள். சார்லஸ் ஸ்பர்ஜன் இந்த வசனத்தைக் குறித்துப் பேசும்போது, “நற்செய்தியை மறைத்து வைப்பது ஒரு மாபெரும் குற்றமாகும்” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். “சமாரியா பட்டணத்தில் தங்கள் சொந்த மக்கள் பசியால் மடிந்து கொண்டிருக்கும்போது, இவர்கள் மட்டும் ஆகாரத்தை அனுபவிப்பது எப்படி நியாயமாகும்? அதுபோலவே, உலகம் பாவத்தினாலும் ஆவிக்குரிய பஞ்சத்தினாலும் அழிந்துகொண்டிருக்கும்போது, இரட்சிப்பின் நற்செய்தியை ருசித்த கிறிஸ்தவர்கள் அதைத் தங்களுக்குள்ளேயே மூடிவைப்பது தேவனிற்கும் மனிதனுக்கும் செய்யும் துரோகமாகும். விடியற்காலம் வரைக்கும் தாமதித்தால் தங்களுக்குத் தண்டனை வரும் என்பதை அந்தக் குஷ்டரோகிகள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

இன்று நாமும் தேவனுடைய கிருபையையும் இரட்சிப்பையும் ருசித்திருக்கிறோம். ஆனால், நம்மைச் சுற்றி அநேகர் ஆவிக்குரிய பஞ்சத்தினால் மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். “நான் மட்டும் இரட்சிக்கப்பட்டால் போதும்” என்று ஆவிக்குரிய பொக்கிஷங்களை நாம் பதுக்கி வைப்பது கர்த்தருடைய பார்வையில் நியாயமானதன்று. இயேசு கிறிஸ்து நமக்காகச் செய்து முடித்த விடுதலையின் நற்செய்தியை நாமும் மற்றவர்களோடு உடனடியாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் பெற்றுக்கொண்ட மன்னிக்கப்பட்ட வாழ்வையும், நித்திய ஜீவனையும் சக மனிதர்களுக்கு அறிவிப்பதே நாம் தேவனுக்குச் செலுத்தும் உண்மையான நன்றியாகும்.