March

மயக்கம் நிறைந்த கண்கள்

2025 மார்ச் 13 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:18

  • March 13
❚❚

“எலிசா கர்த்தரை நோக்கி; இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்”(வச.18).

தன்னுடைய வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி ஜெபித்த எலிசா, இப்பொழுது எதிரிகளின் கண்களில் மயக்கம் உண்டாகும்படி ஜெபித்தான். இந்த ஜெபத்தையும் கர்த்தர் கேட்டருளினார். இந்த உலகத்தில் நம்முடைய எதிரிகள் எத்தனை சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும், தேவனுடைய வல்லமைக்கும், அவருடைய யதார்த்தத்திற்கும் குருடர்களாகவே இருக்கிறார்கள். இவர்களால் ஒருபோதும் தேவனுடைய பிள்ளைகளுக்கு இருக்கும் பாதுகாப்பை உணர்ந்துகொள்ள முடியாது. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறுந்துகொள்ள முடியாது. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. தேவன் தம்மில் அன்புகூருகிறவர் களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்பதே உண்மையாக இருக்கிறது (வாசிக்கவும்
1 கொரிந்தியர் 2:8-9).

இந்த உலகத்தின் ஆட்சியாளர்கள் தேவனுடைய ஞானத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவின் உண்மையான அடையாளத்தைப் பற்றிய அறியாமையினாலேயே பெரும்பான்மையோர் அவரை இகழ்ச்சியாகவும், அவரை அனுதாபத்தோடும் அணுகுகிறார்கள். எழுத்தளவில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பல விவரங்களை அறிந்திருந்தாலும்கூட அவரைத் தேவனாகவும், இரட்சகராகவும் அங்கீகரிக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் ஜெபித்த ஜெபங்களில் ஒன்று இதை நமக்கு உணர்த்துகிறது. அவர், “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” லூக்கா 23:34 என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களப் பார்த்து இயேசு கூறினார். ஆம், அவர்கள் உண்மையிலேயே இயேசு யார் என்பதை அறிந்திருந்தார்களாயின் அவரைப் பிடித்து சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்திருக்க மாட்டார்கள்.

“உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை” (1 யோவான் 3:1) என்று யோவான் கூறுகிறார். உலகத்தார் பிதாவை அறியாததினாலேயே அவர்கள் உங்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார் (யோவான் 15:21). எனவே கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் இந்த உலகில் எத்தகைய கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்தாலும் திருப்தியுடன் இருக்கப் பழகிக்கொள்வோம். இந்த உலகத்தில் நம்முடைய கர்த்தர் மோசமாக நடத்தப்பட்டார், அதுபோலவே அவருடைய பிள்ளைகளுக்கும் நடக்கும். இந்த உலகம் நம்முடைய கொள்கைகளை அறியவில்லை; நம்முடைய நடத்தையின் காரணங்களை அறியவில்லை; நம்முடைய ஆறுதல்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் உள்ள மூல காரணங்களையும் அறியவில்லை. மாறாக, உலக மக்கள் நம்மை வெறியர்கள் என்றோ உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றோ கருதுகிறார்கள். கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்தபோது, அவருடைய உண்மையான குணத்தைப் பற்றி உலகத்திற்கு சரியான கருத்துகள் இல்லை. அவருடைய குணத்தை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்ட அவர்கள், நம்முடைய குணத்தையும் தவறாகப் புரிந்துகொள்வதில் ஆச்சரியமில்லை. உலகம் அவரை அறியவில்லை. எனவே தங்கள் இரட்சகர் நடத்தப்பட்டதைப் போலவே நாமும் நடத்தப்படுவோம் என்று எதிர்பார்த்து வாழப் பழகிக்கொள்வோம்.