January

ஐனவரி 22

இயேசு வனாந்தரமான ஓர் இடத்திற்குத் தனியே போனார் (மத்.14:13).

நிறுத்தக்குறியில் பாட்டு இல்லை. ஆனால் பாடல் உண்டாக்கக்கூடிய ஏது அதில் இருக்கிறது. நம்முடைய ஜீவியமாகிய பாதையின் இடையில் சில சமயங்களில் பாட்டு நின்றுவிடுகிறது. அப்பொழுதெல்லாம் நாம் கீதம் முற்றிற்று என்று எண்ணுகிறோம். தேவன் வியாதி, நம் எண்ணம் கைகூடாமை, நம் முயற்சிகள் வீணாதல் ஆகியவற்றினால் நம்மைச் சில சமயங்களில் கட்டாயமாக ஓய்வு எடுக்கச் செய்கிறார். நம்முடைய ஜீவிய கீதம் திடீரென்று நிறுத்தப்படுகிறது. சிருஷ்டிகருக்கு ஓயாது ஏறெடுக்கப்படும் கீதத்தில், நம் சப்தம் கேட்கப்படாமல் போயிற்றென்று துக்கிக்கிறோம். இசைக் கவிஞன் நிறுத்த வேண்டிய இடங்களில் எவ்வாறு நிறுத்துகிறான்! நிறுத்த வேண்டிய இடத்திலும் தொடர்ந்து தாளத்தை மனதிலே பின்பற்றி, அடுத்த சுதியை விடாது தொடங்குகிறான். இடையில் நிறுத்தாது தொடர்ந்து இராகம் வந்ததுபோலவே வாசிக்கிறான் அல்லவா?

நம்முடைய ஜீவியமாகிய இசையை முறையின்றி கர்த்தர் எழுதவில்லை. நிறுத்தக்குறிகளைக் குறித்துக் கவலை கொள்ளாமல் இராகத்தைப் படிக்கவேண்டியது நமது கடமை. நாம் மேல்நோக்கிப் பார்த்தால் கர்த்தர் இசை விட்டுப் போகாமல் தாளம் தட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். அவர்மேல் நம் கவனத்தைச் செலுத்தி அடுத்த அடியை விடாது நோத்தியாய், தெளிவாய் எடுக்கலாம். நிறுத்தும் இடத்தில் இசை இல்லாவிட்டாலும் அதில் இராகத்தின் தொடர்ச்சி உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. ஜீவியத்தில் இன்னிசை உண்டு பண்ணவது வருத்தத்தோடு மெதுவாய் செய்யக்கூடிய காரியம்தான். தேவன் நமக்குக் கற்பிக்க எவ்வளவு பொறுமையாயிருக்கிறார். அவர் கற்பிக்கும் பாடத்தை நாம் படிப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்கிறார்.

உன் ஆனந்த ஊழியத்தினின்றும்
உலக கலக்கம் கவலையினின்றும்
நிழலுக்கும் அமைதிக்கும்
பரம வழி காட்டியின் காக்கும் கரத்தினால்
சற்று – அப்பால் அழைக்கப்படுகிறாய்.

உன்னை இருண்ட தனியான தோட்டத்துள்
அழைத்தாலும், அவர் கூடவே இருக்கிறார்.
அவர் தமது இனிய குரலில்
பிள்ளையே என்னோடு ஒரு மணிநேரம் இரு
என்று அப்பால் அழைக்கப்படுகிறாய்.

மறைந்துள்ள பாதையில் கர்த்தரோடு நடக்க
ஆழ்ந்த ஊற்றின் தண்ணீர் அருந்த
அவரோடு அன்புள்ளம் ஐக்கியத்திலிருக்க
மோட்ச வீட்டை நெருங்க
அப்பால் அழைக்கப்படுகிறாய்.

அவரோடு தனித்திருந்தால் அறிவு பெருகும்
தனிமையில் அவர் அன்பு விளங்கும்
அந்தகாரத் துன்ப வேளையில் – அவரின்
அன்பெனும் அரிய பாடம் படிக்கவே
அப்பால் அழைக்கப்படுகிறாய்.

நிழலுக்கும் அமைதிக்கும் உம்மைத் துதிக்கிறோம்
உம்மோடு அழுது தரிந்திருந்த இருண்ட
கெத்சமனேக்காக உம்மைத் துதிக்கிறோம்
ஆக அப்பால் அழைக்கப்படுகிறாய்.

அவர் காரியங்களை நலமாய் நடத்துவார்
அவரோடு தனித்திருத்தல் பாக்கியமே
உம் சிலுவையின் நிழலிலே மறைந்திருக்க
அப்பால் அழைத்த அன்புக்குத் துதியே
இதற்கே அப்பால் அழைக்கப்படுகிறாய்.