March

திறக்கப்பட்ட கண்கள் தேவை

2025 மார்ச் 12 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:17)

  • March 12
❚❚

“கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”(வச.17).

முதலாவது எலிசா தன்னுடைய வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி ஜெபம் செய்தான். கர்த்தர் அவனது வேண்டுதலைக் கேட்டார். அப்பொழுது அவன் “இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (வசனம் 17). பயந்து கொண்டிருந்தவன் அக்கினிமயமான குதிரைகளையும் இரதங்களையும் கண்டவன் நிம்மதி அடைந்தான். நமக்குத் தேவையான எல்லா வகையான வளங்களும் தேவனிடம் மிகுதியாக உள்ளன. ஆனால் அவற்றைக் காண்பதற்குரிய கண்களோ நம்மிடத்தில் இல்லை. ஆண்டவரே, உம்முடைய பிரசன்னத்தையும், உம்முடைய பராமரிப்பையும், உம்முடைய வல்லமையையும் காணும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும் என்று நாம் ஜெபிக்க வேண்டியது அவசியம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில், அக்கினிமயமான குதிரைகளும், இரதங்களும் சீரியரின் படையைக் காட்டிலும் அதிகமாக இருந்தன என்பதுதான். நம்முடைய கண்கள் திறக்கப்படும் போது மட்டுமே தேவனுடைய மகிமையையும் வல்லமையையும் கண்டுகொள்ள முடியும். நம்மோடு இருப்பவர்கள் நம்முடைய சத்துருக்களைக் காட்டிலும் அதிகமானவர்கள் என்பதை நினைவிற் கொள்வோம். நாம் கர்த்தரோடு இருந்தால் நம்முடைய சத்துருக்களும் கர்த்தருடைய சத்துருக்களே. எனவேதான் எலிசாவின் ஜெபத்தைக் கேட்டு, தேவன் அந்த ஊழியக்காரனின் கண்களைத் திறந்தார். அவன் தங்களைச் சூழ்ந்திருக்கும் கொலைகாரச் சீரியப் படைகளைக் காட்டிலும், தேவன் தாம் நேசிப்பவர்களைச் சூழ்ந்திருக்கும் கோடான கோடி தூதர்களுடன் ஒப்பிடும்போது இந்த மாபெரும் சீரியப் படை ஒன்றுமில்லை என்பதையும் காண்கிறான்.

ஆவிக்குரிய காரியங்களைப் பொருத்தமட்டில் நமக்குத் தெளிவான பார்வை மிகவும் தேவையாயிருக்கிறது. பவுல் எபேசியர்களுக்காக ஜெபித்த ஜெபத்தை நாம் அறிந்திருக்கிறோம்: “சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்” (எபேசியர் 3:18-19). கிறிஸ்துவின் அன்பு மற்ற எல்லா அறிவைக்காட்டிலும், என்னுடைய எல்லாத் திறமையைக் காட்டிலும் பெரியது என்று பவுல் அறிந்திருந்தபடியினாலே அந்த அளவுக்கெட்டாத அன்பை நாம் இருதயபூர்வமாக உணர்ந்துகொள்ளும்படி அவர் ஜெபித்தார்.

தேவனுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் நம்மால் அளவிட முடியாதது. இத்தகைய அன்பையே தம்முடைய பிள்ளைகள் மீது அவர் வைத்திருக்கிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருப்போமானால் அவர் நம்மைப் பற்றி அறியாமலும், நம்மைப் பாதுகாக்காமலும் நம்மை நேசிக்காமலும் இருந்த ஒரு காலம் இருந்ததே இல்லை. அவர் எப்பொழுதும் நம்முடைய சத்துருக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொண்டே இருக்கிறார். அதைக் காணும் கண்களே நமக்குத் தேவை. ஆகவே நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய வல்லமையான பாதுகாப்பையும், ஆதாரத்தையும் அறிந்துகொள்ளும்படியும், அதை உணர்ந்துகொள்ளும்படியும் இருப்பதாக.