March

இழந்துபோனதை மீட்டெடுத்தல்

2024 மார்ச் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,16 முதல் 18 வரை)

  • March 10
❚❚

 “தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.”(வச.9).

தன்னுடைய ஒவ்வொரு முயற்சிகளும் தோற்கடிக்கப்படுவதைக் கண்ட சீரியாவின் அரசன் குழம்பிப் போனான். இஸ்ரவேல் நாட்டின் உளவாளிகள் தனது அரண்மனையில் யாரேனும் இருக்கிறார்களோ என்று சந்தேகமடைந்தான். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு எதிராகத் தீட்டப்படும் எந்தவொரு திட்டமும் தேவனால் அனுமதிக்கப்படாத பட்சத்தில் அது சுவற்றில் எறியப்பட்ட பந்தைப் போலவே திரும்பி வரும். இன்றைய நாட்களிலும்கூட, தேவனுடைய பிள்ளைகளை நோக்கி எறியப்படும் அக்கினி அம்புகளின் இலக்குத் தவறிய கதையை நாம் அறியாதிருக்கலாம். ஆனால் ஒரு நாளில் பரலோகத்தில், நாம் ஆபத்தில் தப்பின கதையை, விபத்தினின்று பாதுகாக்கப்பட்ட கதையை, கொள்ளை நோய்களுக்கு தப்புவிக்கப்பட்ட கதையை அறிந்துகொள்வோம்.

சீரியாவின் அரண்மனையில் இருந்த சேவகன் ஒருவன், ராஜாவே, “நீர் உம்முடைய படுக்கை அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான்” என்றான் (வச. 12). இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும் தேவனுக்கு முன்பாக ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கிறது, அதன் ஒவ்வொரு வரிகளையும் அவர் அறிவார். “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது” (எபிரெயர் 4:13). ஒரு சபைக்கு எதிராகவோ, உடன் சகோதர சகோதரிகளுக்கு எதிராகவோ பிணையப்படும் எல்லாவிதமான சூழ்ச்சிகளும் அவருடைய நினைவுக்கு அப்பாற்பட்டதாக இல்லை என நாம் நம்புவோமானால், பல பிரச்சினைகளும் தாவாக்களும் வராமலேயே போய்விடும்.

சீரியாவின் அரசன் எலிசாவைப் பிடித்துவரும்படி தன் வீரர்களை அனுப்பினான். இரவோடு இரவாக தீர்க்கதரிசியைச் சிறைப்பிடிக்க வேண்டும் என்பது அவனுடைய திட்டம். தனது அரண்மனையில் தீட்டுகிற திட்டங்களை ஒரு தீர்க்கதரிசியால் அறிந்துகொள்ள முடியுமானால், அவனுக்கு விரோதமாகப் படையெடுத்துச் செல்வதையும் அவன் அறிந்துகொள்வான் என்று யோசிக்க முடியாதது துக்கத்துக்குரியதே. இவ்விதமாக இன்றைய நாட்களிலும் இந்த உலகம் தேவனைக் குறித்தும் தேவனுடைய மக்களைக் குறித்தும் மிகவும் குறைவாகவே மதிப்பிடுகிறது.

ஆயினும் இந்த முறை சீரியாவின் படைகள் வருவதை எலிசா முன்கூட்டியே அறிந்து அதைத் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று எலிசா அதை அறிந்தும்  யாரிடமும் அதைக் குறித்துப் பகிர்ந்துகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் வருவதை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். தேவன் எல்லா நேரங்களிலும் ஒரேவிதமாகவே செயல்படுவார் என்று நம்மால் நிதானிக்க முடியாது. அவர் ஆராய்ந்து முடியாத செயல்களையும் எண்ணிமுடியாத பெரிய காரியங்களையும் செய்கிறவர். நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கும்பொருட்டு சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்களை நாம் எதிர்கொள்ளும்படிச் செய்கிறார். இப்படிச் செய்வதன் வாயிலாக நம்முடைய விசுவாசத்தை வளர்க்கச் செய்கிறார். கர்த்தர் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? என்னும் சிந்தையே எலிசாவுக்கு இருந்திருக்க வேண்டும்.