March

இழந்துபோனதை மீட்டெடுத்தல்

2025 மார்ச் 9 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:8-10

  • March 9
❚❚

“அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்” (வசனம் 15).    

 “தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.”(வச.9).

இழந்துபோன கோடாரியை மீட்டுக்கொடுத்ததன் மூலமாக தீர்க்கதரிசிகளின் புத்திரன் ஒருவனுக்கு உதவிய எலிசா இப்பொழுது தனது நாட்டின் மன்னனுக்கு உதவி செய்கிறான். தேவன் தனக்கு அளித்துள்ள வரங்களை மக்களின் தேவையறிந்து பயன்படுத்துவதில் சிறந்தவனாக விளங்குகிறான் இந்தத் தீர்க்கதரிசி. புதிய ஏற்பாட்டிலும், திருச்சபையின் பக்திவிருத்திக்காகவும், அதனுடைய பொதுவான நன்மைக்காகவுமே தனிப்பட்ட விசுவாசிகளுக்கு தேவன் வரங்களை அருளிச் செய்திருக்கிறார். வரங்களைப் பெற்றிருப்போர் தான் பெற்றிருக்கிற வரங்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்” (ரோமர் 1:14) என்னும் பவுலின் வார்த்தைகளுக்கு ஒப்பாகவே நமது வரங்களின் செயல்களும் இருக்க வேண்டும்.

இஸ்ரவேலின் அரசன் கர்த்தரை முழு மனதுடன் தேடுகிற ஒரு விசுவாசி அல்ல. ஆயினும், விக்கிரக ஆராதனையில் மூழ்கி, கர்த்தரை விட்டுத் தூரமாயிருக்கிற ஒரு நாடு, அந்நிய அரசனின் கையில் அகப்பட்டால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும் என்று கருதியே எலிசா இந்த உதவியைச் செய்திருக்கலாம். விசுவாச மக்களாகிய நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமானால், பவுல் தீமோத்தேயுவுக்குச் சொன்ன அறிவுரையின்படியே “ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும்” ஜெபம் செய்ய வேண்டும் (1 தீமோ. 2:2).

சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணும்படி ஆலோசனை பண்ணினான் (வசனம். 8). இதை எலிசா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவித்தான். ஆயினும் சீரியாவின் அரசன் தொடர்ந்து பலமுறை இதுபோன்று திட்டமிட்டுத் தோல்வியடைந்தான். இந்த சீரியாவின் அரசனைப் போலவே, இன்றைய நாட்களிலும் தேவனுடைய மக்களுக்கு விரோதமாக தொடர்ந்து திட்டங்களைத் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தந்திரமான ஆலோசனைகளிலும், முயற்சிகளிலும் ஓய்வற்றவர்களாக இருக்கிறார்கள். நம்மை விழுங்கும்படி வகைத் தேடி சுற்றித் திரிகிற கெர்ச்சிக்கிற சிங்கம் ஒருபோதும் தனது முயற்சிகளை நிறுத்திக்கொள்வதே இல்லை.

எலிசாவைப் போல, திருச்சபையின் மேய்ப்பர்களும், போதகர்களும், தலைவர்களும் விசுவாச மக்களைக் காப்பதில் விழித்திருந்து செயல்பட வேண்டியது அவசியம். கேயாசியைப் போல பணத்தையும் தோட்டங்களையும் நிலங்களையும் சம்பாதிப்பதற்கான காலம் இதுவன்று. நம்முடைய திருச்சபையையும், நம்முடைய நாட்டையும் பிசாசுகளின் வஞ்சகமாக சதித்திட்டங்களின் தாக்குதல்களிலிந்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு தேவனுடைய மக்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது. வரப்போகிற ஆபத்துகளைப் பற்றி நாம் எச்சரிக்க வேண்டும். இஸ்ரவேல் அரசன், சிரியரால் தனக்கு ஏற்படவிருந்த ஆபத்தைப் பற்றி எலிசா கொடுத்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டான். ஆனால் தன் பாவங்களால் தனக்கு ஏற்படவிருந்த ஆபத்தைப் பற்றிய எச்சரிப்புகளை அவன் கவனத்தில் கொள்ளவில்லை. இன்றைய நாட்களிலும் மக்கள் மரணத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தேவனைத் தேடுகிறார்களே தவிர, நித்திய அழிவாகிய நரகத்திலிருந்து தப்பிக்க முன் வருகிறதில்லை என்பது துக்கத்துக்குரியது.